இலங்கை பிரதான செய்திகள்

TNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(13) பிற்பகல்-04.30 மணியளவில் யாழ்.நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவில் மாபெரும் பரப்புரைக் கூட்டம் ஆரம்பமாகித் தற்போது நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை உடனடியாக அங்கிருந்து வெளியேறக் கோரியும், தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க கோரியும் மேற்படி கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையாக வவுனியாவிலிருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.

மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சொல்லாதே”, “போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்காதே”, ” இனத்தை விற்று அரசியல் செய்யாதே!”, “இலஞ்சம் வாங்கி வாக்களிக்கச் சொல்லாதே”, “பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்க இணக்கம் வெளியிட்டவர்களே வெளியேறு”, “தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்போம்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும், பல சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் காணாமல் போன தமது உறவுகளை நினைத்தும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் கடுமையாகச் சாடியும் போராட்டத்தில் கலந்து கொண்ட தாய்மார்கள் கதறி அழுதமையை அவதானிக்க முடிந்தது.    #சஜித்பிரேமதாஸ #தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு #சம்பந்தன் #காணாமல்போன
 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.