சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி ஸ்டவோர்ட்டில் வசித்து வந்த உஸ்மான் கான் லண்டனில் கத்திக்குத்தினை மேற்கொண்டவேளை காவல்துறையினரின் தாக்குதலிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

2010 இல் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட பாரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது உஸ்மான் கானும் வேறு எட்டு பேரும் கைதுசெய்யப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல்ஹைதாவினால் உந்தப்பட்டு லண்டனின்பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

பாக்கிஸ்தானை சேர்ந்தவரான யூனிஸ்கான் மத்ரசா  என்ற போர்வையில் பயங்கரவாதத்திற்கு ஆட்களை திரட்டியதாகவும் நிதி சேகரித்ததாகவும் ஏற்றுக்கொண்டார் என நீதிமன்ற வட்டாரங்கள் அவ்வேளை தெரிவித்திருந்தன.

காஸ்மீரில் தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் இஸ்லாமிய பாடசாலையை ஏற்படுத்தி அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் என தெரிவித்தார் என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

உஸ்மான் கானின் குடும்பத்தினரிற்கு ஏற்கனவே அந்த நிலத்தில் மசூதியொன்று உள்ளது, என  நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்கள் பயங்கரவாத பயிற்சி தளமொன்றை ஏற்படுத்துவதற்காக நிதி திரட்டும்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனவும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிகத்தீவிரவமான திறமைவாய்ந்த பயங்கரவாதிகளை உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு கானும் அவரது சகாவும் திட்டமிட்டனர் எனவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை உஸ்மான் கானும் அவரது சகாக்களும் கைதுசெய்யப்பட்ட பின்னர் அது குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரதிகாவல்துறை ஆணையாளர் ஸ்டுவேர்ட் ஒஸ்போர்ன் இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திராவிட்டால் பாரிய உயிரிழப்புகளை  ஏற்படுத்தியிருக்க கூடியதாக்குதல்கள்இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அவரது நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இலத்திரனியல் கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருந்த நிலையிலும் உஸ்மான் கானால் எப்படி தாக்குதலை மேற்கொள்ள முடிந்தது என்ற கோணத்திலும்விசாரணைகள் இடம்பெறுகின்றன. லண்டனின் பிரசித்தி பெற்ற பாலத்தின் வடபகுதியில் உள்ள பிஸ்மொங்கர் ஹோலிற்குள் உஸ்மான் கான் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளார். அவர் தனித்தே செயற்பட்டார் என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் அந்த கட்டிடத்திற்குள்ளேயே தாக்குதலை ஆரம்பித்துவிட்டார் அதன் பின்னரே பாலத்தை  நோக்கி சென்றார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியிலேயே அவர் காவல்துறையினரை எதிர்கொண்டார் சுடப்பட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.