Home இலங்கை பிரபாகரன் மாத்திரமே தேசிய தலைவர் – “என்னை துரோகி எனக் கூற அவருக்கு மட்டுடே உரிமை உண்டு”…

பிரபாகரன் மாத்திரமே தேசிய தலைவர் – “என்னை துரோகி எனக் கூற அவருக்கு மட்டுடே உரிமை உண்டு”…

by admin


என்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது. அது எங்களுடைய தேசியத் தலைவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரிவிற்கான பொதுமக்கள் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை(12.01.20) மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பாண்டிருப்பு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற வேளை அங்கு கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பல பிளவுகள் வந்து கொண்டு இருக்கின்றன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் என்பவர் தெரிவித்ததாக கருத்து ஒன்று தற்போது உலா வருகின்றது. முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பில் போட்டியிடுவதற்கு பெறுமதியான சொத்தை எழுதி தந்தால்தான் போட்டியிட வைப்பேன் என சுமந்திரன் எம்.பி கூறியிருக்கிறார் என.இதை நான் கூறவில்லை அவர்களே கூறுகின்றனர் இந்தளவிற்கு கேவலமான நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது.தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேசியம் பேச ஒருவருக்கு மாத்திரமே உரிமையுள்ளது .

அவர்தான் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. அவரைத் தவிர மட்டு அம்பாறையில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு உரிமையில்லை. அவர்களுக்கு யுத்த களம் தெரியுமா? யுத்த களத்திற்கு தனது பிள்ளையை வழியனுப்பி வைத்த வேதனை தெரியுமா? இல்லாவிடின் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் வேதனை தெரியுமா? இன்று மேதாவிகள் போல் தேசியம் பேசுகிறார்கள்.அம்பாறையில் இருகின்ற அரசியல் வாதிகள் கஞ்சிகுடியாறு காட்டில் அரைவாசியை அழித்துவிட்டார்கள். அந்த மரங்களை உருவாக்குவதற்கு தலைவர் பல்லாயிரக்கணக்கான போராளிகளை ஈடுபடுத்தினார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூட்டாது என கூறும் ஹரீஸ் எம்.பி இருக்கும் மேடையில்தான் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர் அப்போது எவ்வாறு கல்முனை பிரச்சனையை தீர்க்கப்போகிறார்கள்.இவர்கள் எம்மக்களை ஏமாற்றி வருகின்றனர். எமது போராட்ட களம் மௌனித்த பின்னர் கூட்டமைப்பினரும் திசைமாறிவிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நில தொடர்பற்ற முறையில் கல்வி வலயத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உருவாக்க முடியும் எனில் ஏன் அம்பாறை மாவட்டதில் சம்மாந்துறை கல்முனை,  நாவிதன்வெளி பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு கல்வி வலயத்தை உருவாக்க முடியாது? இது இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகளின் தவறு. இந்த பிரதேசங்களை உள்ளடக்கிய கல்வி வலயம் உருவாக்க படுமானால் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும்.இன்று கருணா அம்மான் துரோகி என்கின்றனர். அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை அது டாக்டர் பட்டம் மாதிரிதான் எனக்கு இருக்கிறது.கடந்த கால போராட்டம் நீடித்திருந்தால் நாம் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம்.தற்போது அனைவரையும் காப்பாற்றியவர் நான்தான் இல்லாவிடின் இங்கு இருக்கின்ற அரசியல்வாதிகள் யாரும் வந்திருக்க மாட்டார்கள்.

என்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது அது எங்களுடைய தேசிய தலைவர் அவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன். எனக்கும் தலைவருக்குமே தெரியும் என்ன பிரச்சனை என்று.இன்று பலர் அரசியற்கட்சி தலைவர்களை தேசிய தலைவர் என்று விழிக்கின்றனர் . தேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரமே அது ஒரு வரலாற்று அத்தியாயம் அதை மீண்டும் உருவாக்க முடியாது. அங்கு இருந்துதான் நான் வந்தேன் இல்லையெனில் கருணாவை உங்களுக்கு தெரிந்திருக்க முடியாது. இப்போது இருக்கும் தமிழ் தலைவர்களை தூக்கி நிறுத்துவதற்கு நான்கு பணியாட்கள் வேண்டும் . அவர்களுக்கு காதும் கேட்பதில்லை கண் பார்வையும் இல்லை அவர்களைதான் நாங்கள் கும்பிட்டு கொண்டு இருக்கின்றோம் என குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் பொதுமக்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆலயங்களின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் சமூக அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கடந்த நவம்பர் மாதம் பாண்டிருப்பு பிரதேசத்தின் சர்மிலன் வீதியில் வசிக்கும் இராசதுரை முத்துலிங்கம் என்பவபவருக்கு வாழ்வாதார உதவித்தொகையாக ஒரு தொகைப் பணம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. தீக்கிரையாக்கப்பட்ட குறித்த வீட்டையும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை  பதவி நீக்கப்பட்ட கல்முனை முன்னாள் மாநகர உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டார்.

கடந்த 2018 பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இவர் அக்கட்சியினால் மேலதிக பட்டியல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியினால் இடைநிறுத்தப்பட்டிருந்தார்.தற்போது இவர் மாநகர சபை உறுப்புரிமையை இழந்திருப்பதனை அடுத்து பொதுமக்களுடன் கலந்துரையாடி புதிய கட்சியான இக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More