இந்தியா பிரதான செய்திகள்

அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது தடவையாகவும் டில்லியின் முதல்வரானார்…

டில்லி முதல்வராக மூன்றாவது தடவையாக அர்விந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) இன்று (16) பதவியேற்றுள்ளார்.

டில்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா இடம்பெற்றது. டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள 8 தொகுதிகளை மாத்திரமே பாரதீய ஜனதாக் கட்சி கைப்பற்றியது.

அர்விந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, டில்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள 8 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரதமர் மோடி இன்று தனது வாரணாசி தொகுதியில் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துவைக்கவுள்ளதால், அவர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது பழைய அமைச்சரவை குழுவினருடன் இன்று மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். டில்லி அமைச்சரவையில் புதிதாக எவருக்கும் இடம் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், புது முகங்களான அதிஷி மற்றும் ராகவ் சாதா உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அலுவலகத்தினால் வௌியிடப்பட்டு அதிகாரபூர்வ அறிக்கையில், பழைய குழுவினரே டில்லியில் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஏனைய மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

பதவியேற்பு விழாவில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், துப்பரவு தொழிலாளிகள் உள்ளிட்ட டில்லியின் கட்டமைப்புக்கு உதவிவரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனிநபர்கள் 50 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான அடித்தளத்தை வழங்கி மக்களிடம் கொண்டு சேர்த்தமைக்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்தமைக்காகவும் 2006 ஆம் ஆண்டு அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ரமன் மகசேசே விருது வழங்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap