Home இலங்கை எது சரியான மாற்று அணி? ? நிலாந்தன்…

எது சரியான மாற்று அணி? ? நிலாந்தன்…

by admin

விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.

மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் தெளிவைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார்கள். இன்னொரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனை கொள்கை ரீதியாக நிதானமற்றவர் என்று காட்ட பார்க்கிறார்கள்.

கஜேந்திரகுமார் அணியோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரன் அணியிடம் கோட்பாட்டு ரீதியான தெளிவு குறைவு என்பது கண்கூடு. கோட்பாட்டு விடயங்களில் இப்போதுள்ள அரசியல்வாதிகளில் ஒப்பீட்டளவில் அதிக தெளிவோடு காணப்படுவது முன்னணிக்காரர்கள்தான். புவிசார் அரசியலைக் குறித்தும் பூகோளஅரசியலை குறித்தும் அந்த கட்சியிடம் விளக்கங்கள் உண்டு. இந்த விளக்கங்கள் காரணமாகவே அவர்கள் எப்பொழுதும் கோட்பாட்டு ரீதியிலான கேள்விகளை எழுப்புவதுண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலையொட்டி ஆறு கட்சிகளை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூட்டிய பொழுது உருவாக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தின் கோட்பாட்டு முழுமைக்குப் பெருமளவு காரணம் மக்கள் முன்னணி தான் என்றும் மாணவர்கள் கூறினார்கள். இவ்வாறு கோட்பாட்டு ரீதியாக ஒப்பீட்டளவில் தெளிவோடு இருப்பதனால் அக் கட்சியானது விக்னேஸ்வரனை நோக்கி அது சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டு வருகிறது. இதன் மூலம் கோட்பாட்டு ரீதியாக ஒரு மாற்று அணிக்குரிய அடித்தளம் தங்களிடம் தான் உண்டு என்று நிரூபிப்பது அக்கட்சியின் நோக்கமாகும்.

இரண்டாவது தளம் விக்னேஷ்வரனின் கொள்கை உறுதி பற்றியது. கொள்கை ரீதியாக விக்னேஸ்வரனிடம் உறுதி இல்லை என்று நிரூபிப்பது அவர்களின் இலக்காக இருக்கிறது. அவர் கொள்கை ரீதியாகத் தளம்பக் கூடியவர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அக் கட்சியானது விக்னேஸ்வரனுக்கு எதிராக சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கி வருகிறது. இந்த அடிப்படையில் அண்மையில் அவர் உருவாக்கிய கூட்டு இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு என்று முன்னணி கூறுகிறது. அதற்கு சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றது.

முன்னணியின் குற்றச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரனின் கூட்டு முன்னணியில் உள்ள கட்சித் தலைவர்களான சுரேஷ் சிறீகாந்தா சிவாஜி அனந்தி போன்றோர் பதில் கூறினார்கள்.அண்மையில் விக்னேஸ்வரன் தனது வாராந்த கேள்வி-பதில் குறிப்பில் முன்னணிக்கு பதில் கூறியிருக்கிறார்.அவர் பதில் கூறிய விதம் அவருடைய மூப்புக்கும் முதிர்ச்சிக்கும் தோதாக இருக்கவில்லை. மக்கள் முன்னணி தன்மீது வைத்த விமர்சனங்களுக்கு விக்னேஸ்வரன் பெரும்பாலும் அமைதி காத்தார். ஆனால் அண்மையில் அவர் வெளியிட்ட கேள்வி-பதில் குறிப்பில் முன்னணிக்கு முன்னணியின் பாணியிலேயே பதில் கூற புறப்பட்டு அவர் தன்னை தாழ்த்திக் கொண்டு விட்டாரா?

அந்த பதிலில் விக்னேஸ்வரன் முன்னணியின் மீது ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் சில சூழ்ச்சிக் கோட்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக முன்னணியின் எதிரிகள் அக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்களை அவர் அந்த பதில்களில் தொகுத்து காட்டியுள்ளார். அதன்மூலம் அந்த விமர்சனங்களில் தனக்கும் உடன்பாடு இருப்பதாக அவர் காட்டப்பார்க்கிறாரா?

அவருடைய கூட்டணியை இந்தியாவின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாக முன்னணி காட்டுகிறது. இது ஒருசூழ்ச்சிக் கோட்பாடு. அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன் முன்னணியினர் ஜெட் விங் உல்லாச விடுதியில் சீன பிரதிநிதிகள் சந்தித்ததாக ஒரு சூழ்ச்சி கோட்பாட்டை முன்வைக்கிறார்.

அரசியலில் சூழ்ச்சிக் கோட்பாடுகளின் இறுதி இலக்கு என்னவென்றால் ஒரு அரசியல்வாதியை அல்லது கட்சியை எதிரியின் ஆளாக முத்திரை குத்துவதுதான். அதன் மூலம் வாக்காளர்கள் அந்த அரசியல்வாதியை துரோகியாக கண்டு நிராகரிப்பார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் நம்புகிறார்கள்.ஈழத்தமிழர்களின் நவீன அரசியலில் ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலிலும் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு இருந்தது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு முத்திரை குத்தும் எவரிடமும் துரோகி ஆக்கப்படும் நபரைக் குறித்து தெளிவான புலனாய்வு அறிக்கைகள் எதுவும் இருப்பதில்லை. பெரும்பாலான முடிவுகள் ஊகத்தின் அடிப்படையிலும் வெறுப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. தமிழ் கட்சிகளிடமோ அல்லது தமிழ் மக்கள் அமைப்புக்களிடமோ பலமான புலனாய்வுக் கட்டமைப்பு எதுவுமில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் அரசியலில் ஒரு பொட்டு அம்மான்தான் இருந்தார். ஆனால் 2009க்கு பின் எல்லாருமே பொட்டு அம்மான்களாக மாறிவிட்டார்கள். ஆனால் எந்த ஒரு புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் அவர்கள் எதிர் தரப்பின் மீது சூழ்ச்சிக் கோட்பாடுகளை முன் வைக்கிறார்கள் என்பதற்கு பெரும்பாலானவர்கள் விளக்கங்கள் தருவதில்லை.2009 க்குப் பின்னரான தமிழ் அரசியல் அதிகரித்த அளவில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்திருக்கிறது.அரசியல் எதிரிகளை தோற்கடிப்பதற்கு எல்லாத் தரப்பும் எதிர்த்தரப்பின் மீது சூழ்ச்சி கோட்பாடுகளைப் புனைகின்றன.

ஈழத்தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்தோ பசுபிக் வியூகமும் சீனாவின் நீளப்பட்டியும் நெடுஞ்சாலையும் வியூகமும் மோதும் ஒரு பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இலங்கைத்தீவுஅமைந்துள்ளது. அதனால் எல்லாப் பேரரசுகளும் தமிழ் மக்களைக் கையாள முற்படும். எல்லாப் புலனாய்வுத் துறைகளும் கையாள முற்படும். இதில் வெளித் தரப்பால் கையாளப்படுவதா?அல்லது வெளித்த தரப்பை வெற்றிகரமாக கையாள்வதா? என்பதை சம்பந்தப்பட்ட தமிழ்க்கட்சி அல்லது தலைவர் தீர்மானிக்க வேண்டும். ஆனால் வெளித் தரப்புக்களின் தலையீடற்ற ஒரு அரசியல் வெளி உலகில் எங்கும் இல்லை. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் மிக்க ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரரசுகள் என்ற பெருஞ்சுறாக்கள் உலாவும் கடலில்தான் நீந்த வேண்டியிருக்கிறது, சுழியோடி முத்துக்களைப் பெற வேண்டியிருக்கிறது. இவ்வாறு பேரசுகளின் தலையீடு அதிகமுள்ள ஒரு பிராந்தியம் என்பதால் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கக்கூடிய ஒரு அரசியற் சூழலும் எப்பொழுதுமிருக்கும்.

இவ்வாறு ஒரு கட்சி மீது அல்லது தலைவரின் மீது உருவாக்கப்படும் சூழ்ச்சி கோட்பாடுகளை உருவாக்கும் தரப்புபெரும்பாலும் அவற்றை நிரூபிப்பதில்லை.மாறாக குற்றச்சாட்டுக்கு இலக்கான தரப்பே தன்னில் குற்றமில்லை என்பதனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஆயுதப் போராட்ட அரசியலில் ஒரு நபர் அல்லது அமைப்பு தனது விசுவாசத்தை தியாகத்தின் மூலமும் வீரத்தின் மூலமும் நிரூபிப்பதற்கான களம் அதிகம் உண்டு. ஆனால் மிதவாத அரசியல் களத்தில் அப்படி உடனடியாக நிரூபிக்க முடியாது. அதற்கு காலம் எடுக்கும். தான் ஒரு குற்றமற்ற தரப்புஎன்பதனை வாழ்ந்துதான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அவ்வாறு தங்களை வாழ்ந்து நிரூபித்தவர்கள் எத்தனைபேர் உண்டு?

கொள்கை உறுதியோடு இருப்பதாக கூறிக் கொண்டால் மட்டும் போதாது. அந்தக் கொள்கையை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒன்றில் மக்கள் மைய அரசியலை முன்னெடுத்து ஒரு தேசியப் பேரியக்கத்தை கட்டி எழுப்பலாம். அல்லது தேர்தல்மையஅரசியலை முன்னெடுத்து மக்கள் ஆணையைப் பெற்று காட்டவேண்டும்.தேர்தல் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் சூழ்ச்சிகள் நிறைந்தது. தந்திரங்கள் நிறைந்தது. அதற்கென்று நெளிவு சுளிவுகள் உண்டு. அந்த நெளிவு சுளிவுகளையும் தந்திரங்களையும் வெற்றிகரமாக கற்றுக்கொள்வதன் மூலம்தான் தேர்தல் அரசியலில் வெற்றி பெறலாம். எந்த ஒரு கொள்கையும் மக்கள் பயப்பட வேண்டும். மக்கள்பயப்படாத கொள்கைகள் சிறு திரள் அரசியலுக்கே பொருத்தமானவை.

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடி வருகிறார்கள். எனவே எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பெரும்திரள் ஆக்குகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீதியை நோக்கிய போராட்டமும் பலமடையும். எனவே ஈழத் தமிழர்களுக்கு இப்போது தேவையாக இருப்பது பெருந்திரள் அரசியல்தான். சிறுதிரள் அரசியல் அல்ல. கொள்கைத் தூய்மையோடு சிறு திரள் அரசியலை முன்னெடுப்பதால் நீதியைப் பெறுவது கடினம். எனவே தமிழ் மக்களைத் எப்படிப் பெரும் திரள் ஆக்குவது என்று சிந்திக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக கூட்டமைப்பு இப்படியோர் அரசியலை முன்னெடுக்கவில்லை. அதற்கு கிடைத்த மக்கள் ஆணையை அது பிழையாக வியாக்கியானம் செய்தது. கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அது தமிழ் மக்களின் ஆணையை பிழையான இடத்தில் கொண்டுபோய் சேர்த்தது. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற சஜித், சவேந்திர சில்வாவை போற்றிப் புகழ்கிறார். அதேசமயம் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்போ சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்கிறது.

கூட்டமைப்பின் இந்த அரசியல் தவறானது என்று கூறித்தான் ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கபட்டது. ஆனால் கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்லும் ஒரு காலகட்டத்தில் மாற்று அணிக்குள் மோதல்கள் அதிகரித்துள்ளன.எது சரியான மாற்று என்ற விவாதக்களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்புகளும் ஒன்று மற்றதின் மீது அவதூறுகளையும் சூழ்ச்சி கோட்பாடுகளையும் அள்ளி வீசுகின்றன. யார் கொள்கைகளில் உறுதியானவர்? யார் சித்தாந்த தெளிவு அதிகமுடையவர் என்று விவாத மேடை திறக்கப்பட்டுள்ளது. இந்த விவாத மேடையை கூட்டமைப்பும் அரசாங்கமும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இப்போது இருக்கும் இரண்டு மாற்று அணிகளுக்குள் எதுசரியானது?

இக்கேள்விக்கு விடை கூறுவதென்றால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒரு மாற்று அணியை உருவாக்குவற்கான ஆரம்பகட்ட சந்திப்புக்கள் நடந்த கால கட்டம் அது. ஒருதிருச்சபை வளாகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இரு கருத்துருவாகிகளும் கஜேந்திரகுமார் சுரேஷ் பிரேமச்சந்திரன் அனந்தி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகரன் போன்றோரும் இதில் பங்குபற்றினார்கள்.

இந்த உரையாடலில் பங்கு பற்றிய ஒரு கருத்து உருவாக்கிஉரையாடலின் போக்கில் பின் வருமாறு கேட்டார்……. ‘ஒரு மாற்று அணி என்று நீங்கள் விளங்கி வைத்திருப்பது எதை? கூட்டமைப்பு எதிரான மற்றொரு தேர்தல் கூட்டா ? அல்லது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க போகும் புதிய அரசியல் செயல் வழியா? கூட்டமைப்பு செய்வது பிழை என்று கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின் என்ன செய்வீர்கள்? அதே வீரமான பேச்சுகள் ஆவேசமான பிரகடனங்கள் துணிச்சலானபேட்டிகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு விட்டுக்கொடுப்பின்றிக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால் கூட்டமைப்பு இதுவரை செய்திராத ஒரு புதிய அரசியலை ஒரு புதிய போராட்டத்தை உங்களால் செய்ய முடியுமா? 2009க்குப் பின்னரான ஒரு புதிய போராட்ட வடிவத்தை குறித்து நீங்கள் சிந்திக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

ஆனால் அங்கிருந்த அரசியல் தலைவர்களிடம் அதற்கு பொருத்தமான பதில் இருக்கவில்லை. உரையாடலில் பங்கு பற்றிய மற்றொரு கருத்துருவாக்கி உரையாடலை தேர்தல் கூட்டை நோக்கி திருப்பி விட்டார். கோட்பாட்டு விடயங்களைப் பற்றியும் புதிய போராட்ட வழிமுறை பற்றியும் இப்பொழுது பேசினால் ஒரு தேர்தல் கூட்டை உடனடிக்கு உருவாக்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார.;அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு?

இப்போது விக்னேஸ்வரன் தான் உருவாக்கியிருப்பது ஒரு மாற்று அணி என்று கூறுகிறார.; கஜேந்திரகுமார் தன்னுடையதே மாற்று அணிஎன்று கூறுகிறார. ஆனால் இரண்டு தரப்புமே 2009 க்கு பின்னரான ஒரு புதிய போராட்ட வழிமுறை குறித்து கதைப்பதாகத் தெரியவில்லை. இதுதான் பிரச்சினை.

சரியான கொள்கை தெளிவோடு உள்ளவர்கள் யார்? சரியான கோட்பாட்டுத் தெளிவோடுஉள்ளவர்கள் யார்? கொள்கை பிடிப்போடு அற்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள் யார்?அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு எது? என்பவற்றை அவர்கள் இனிமேல்தான் நிரூபித்து காட்ட வேண்டியிருக்கிறது.தமது கொள்கைகளை யார் மக்கள் மயப்படுத்துகிறார்களோ அதன்மூலம் யார் பெருந்திரள் மக்கள் ஆணையைப் பெற்று தமது புதிய போராட்ட வழிமுறையை தியாகங்கள் மூலம் முன்னெடுக்கிறார்களோ அவர்களே இறுதியிலும் இறுதியாக தம்மீது சுமத்தப்பட்ட சூழ்ச்சிக் கோட்பாடுகளை தோற்கடிப்பார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More