இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் – ச.றொபின்சன்..

உலக சர்வதேச ரீதியாக கடந்த சில நாட்களாக பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், மற்றும் நகமும் சதையுமாக எம்முடன் என்றும் உறவாடும் கைத்தொலைபேசியை ‘ஸ்மார்ட்போன்’ ஜ கையில் எடுத்தவுடன் முதலில் கேட்பதும், வாசிப்பதும், பார்ப்பதும் கொரோனா என்ற கொடிய சர்வாதிகார நோயாகும். அனைவரது மனதிலும் கொரோனா நோயின் தாக்கம் பயமூட்டும் வகையில் விற்கப்படுகிறது.நாட்டின் தற்கால சூழ்நிலையில் எந்தவொரு தடையுமின்றி விவசாயத்தைமேற்கொள்வதற்கு அரசு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. ஆனாலும் அவற்றைப் பூரண சுதந்திரத்துடன் சந்தைப்படுத்தல் நடைபெறுகிறதா? என்று பார்க்கும்போதுசிந்தித்துப் பார்க்கவேண்டிய விடயமாகும்.

விவசாயத் துறையின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதே இலங்கை தற்போது எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் ஒன்றாகும். உணவில் தன்னிறைவைப் பெறுவதற்காக செய்கை பண்ணப்படும் பயிர் வகைகளாக தானிய பயிர்கள், பருப்பு, கிழங்கு, மரக்கறி;, பழவகை மற்றும், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.இலங்கையில் ஒவ்வொரு மாகாணமும், மாவட்டமும் குறித்த சில பயிர்ச்செய்கையில் சிறப்பிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. உலர்,ஈர, இடை வலையமென நாட்டின் மழைவீழ்ச்சி, வெப்பநிலை மற்றும் குத்துயரத்தின் வகைப்பாட்டில் பயிர்ச்செய்கைகள் உகந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றது .

இலங்கை முழுவதும் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அவற்றின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதே பெரிய சவாலாகும். அதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதிச் சந்தைப்படுத்தலுக்கு முக்கிய பங்குண்டு. அந்த வகையில் பயிர்களிலிருந்து அறுவடை பெறப்பட்டது தொடக்கம் நுகர்வோருக்கு கிடைக்கும் வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் விளைச்சலில் ஏற்படும் அளவு ரீதியானதும் தரரீதீயுமான இழப்புக்கள் அறுவடைக்கு பிந்திய இழப்புக்கள் எனப்படும். இவ்வாறு அறுவடைக்குப் பிந்திய இழப்புக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் ஆக அறுவடை, சுத்தப்படுத்தல், பொதியிடுதல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்தின் மூலம் கொண்டுசெல்லல்,சந்தைப்படுத்தல், நுகர்வு போன்ற சந்தர்ப்பங்களில் விவசாய விளைச்சல்களானது பிழையான மனித செயற்பாடுகளாலும், சீரற்றகாலநிலைக் காரணிகளினாலும் மற்றும் அகக்காரணி, புறக் காரணிகளின் தாக்கத்தினாலும் பாதிப்படைகின்றது.

இவ்வாறு அறுவடைக்கு முன்னரும், அறுவடையின் போதும், அறுவடைக்குப் பின்னருமாக இழப்புகள் ஏற்படுவதால் விவசாயிகள், வியாபாரிகள், நுகர்வோர் பெரிதும் பாதிப்படைகின்றனர். அந்த வகையில் நாட்டின் தற்போதுள்ள சூழலில் ஊரடங்குச் சட்டத்தினால் மாத்திரமன்றி, சீரற்ற காலநிலைகளில் தாக்கத்தினாலும் விவசாய விளைச்சல்களை சந்தைப்படுத்தலை மேற்கொள்வது மிகச் சிரமமாக காணப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த விடயமொன்று. ஊரடங்கு சட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு, பலமான காற்று,வெள்ளப்பெருக்கு போன்ற சீரற்ற காலநிலைகளினாலும் விவசாயம், சந்தைப்படுத்தல் கடந்த சில நாட்களாக பெரும் இழப்பை எதிர் நோக்குகின்றது.

இது நாட்டின் பொருளாதாரத்தை மாத்திரமன்றி குடும்ப பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கின்றது. இவற்றிலிருந்து மீளுவதற்கான செயற்திட்டங்கள், இழப்பீடுகள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும்.அறுவடை முதல் நுகர்வு வரை விளைச்சலின் தரம் பேணப்படுவதுடன் தேவைப்படின் தரத்தை விருத்திசெய்து, தரத்தின் அளவில் பாதிப்பை இழிவளவாக்குதற்கு அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப முறைகளை கையாளுதல் விளைச்சலில் ஏற்படும் பாதிப்பு அதோடு சந்தைப்படுத்தலில் உள்ள இடர்ப்பாடுகளை நிவர்த்தி செய்யலாம் .

இவ்வாறான இழப்புக்கள் ஒரு பக்கமிருக்க நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் விவசாய விளைச்சலின் சந்தைப்படுத்தல் விற்பனையை எடுத்து நோக்கும் போது மிக வருத்தத்தை உண்டுபண்ணுகிறது. ஒரு விவசாயி வியர்வை சிந்தி கடின உழைப்பால் செதுக்கி எடுத்த விளைச்சல் உரிய முறையில் இலாபம் தரக்கூடிய வகையிலும், பாதுகாப்பாகவும் நுகர்வோரை சென்றடைகிறதா? என்பது பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கலாம். இதில் இலாபத்தை எடுத்துக் கொண்டால் நாட்டின் தற்கால சூழ்நிலையால் நாடு முழுவதும் சந்தைப்படுத்தல் சமநிலை இல்லாத காரணத்தால் ஒரு குறித்த விலையில் விளைச்சல்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்பது உண்மை.

குறித்த விலை நிர்ணயிக்கப்படாத காரணத்தினால் விவசாயிகள் ஏமாற்றம் அடைவதோடு சந்தைப்படுத்தல் என்பது இங்கே கடினமாக காணப்படுகிறது.அவ்வாறு பாதுகாப்பான சந்தைப்படுத்தலை எடுத்துக்கொண்டால் இங்கே தூய்மையான முறையிலும், பாதுகாப்பான வகையிலும் விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்தபடுகின்றனவா? என்பது ஆராய வேண்டியது அவசியம். நாட்டின் அனைத்துப் பொதுச்சந்தைகளும் சமூகஇடைவெளியை பேணும்வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தி,வீதிகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறான மாற்று வழி வியாபாரம் சமூகஇடைவெளியை பேணுவதன் அவசியத்தை உறுதிப்படுத்துவதோடு சுத்தமான விற்பனைமேற்கொள்ளப்படுகின்றது என்பதையும் உறுதிப்படுத்துதல் நன்கு.

நாட்டின் சந்தைப்படுத்தல் விரிவாக்க சேவையின் செயற்திட்டமானது விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் முக்கியமாக விளைச்சலைப் பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்படுதல் கட்டாயமானது. கடந்த சில நாட்களாக ஏனைய பலர் தங்களது வழமையான தொழில்களை மேற்கொள்வதில் சிரமமானதால் பலர் மாற்றுத் தொழில்முனைவினை ஏற்படுத்தும் வகையில் விவசாயம் மற்றும் மரக்கறி வியாபாரம் போன்ற தொழில்களை பகுதிநேரமாகவும்,முழுநேரமாகவும் மேற்கொள்ளுதல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது விவசாயத் தொழிலில் புனிதத்தன்மையை உணர்த்தி நிற்கின்றது. நாட்டின் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு ஏற்றுமதி சந்தைப்படுத்தல் மிகக்குறைவானதால் கிராமிய உள்ளுர் விவசாயிகளிடம் மரக்கறிகளைப்பெற்று வியாபாரம் செய்யும் புதிய வியாபாரிகளின் தோற்றமானது சந்தைப்படுத்தலில் உள்நாட்டில் விரிவடையச் செய்துள்ளது.

மற்றும் சில வியாபாரிகளுக்குள் பாரம்பரிய பண்டமாற்று முறை மூலமான கொடுக்கல் வாங்கல்கள் சில பகுதிகளில் நடைபெற்ற வண்ணம் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கின்ற வகையில் பொதுச் சந்தைகள் இயங்காத நிலையிலும் வீதியோரங்களிலும் வீடு வீடாக சென்றும் உள்நாட்டில் விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுவது சிறந்த மாற்றுவழி சந்தைப்படுத்தல் ஆகும், இங்கு ஒருசில விளைச்சல்மிகையாக காணப்படுகிறது, காரணம் சீரான சந்தைப்படுத்தல் இன்மையால் உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி குறைவாகக் காணப்படுவதனாலாகும்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்தல் நுட்பங்கள் சிறப்பாக அமையும் பட்சத்தில் நாட்டின் விவசாயத்தின் தன்னிறைவினை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. சந்தைப்படுத்தல் விரிவாக்க சேவைகள் மற்றும் ஏனைய நிர்வாக அமைப்பின் செயற்திட்டத்தின் ஊடாக சந்தைப்படுத்தலில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதனூடாக நுகர்வோரின் தேவைகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி வளர்ச்சி அடைவதோடு விவசாயிகள், வியாபாரிகளின் இலாபகரமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றது.

சந்தைப்படுத்தலில் உள்ள இடர்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வழிகளின் ஊடாகவும் செயற்திட்டங்களின் ஊடாகவும் இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வை கொண்டு வருவதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றிப்பான செயற்பாட்டினால் விவசாயிகள் வியாபாரிகளுக்கு உந்துசக்தியாக செயற்பட்டு சமூகம் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்வைத்து செயற்படுவதன் ஊடாக விவசாய விளைபொருட்களுக்கான சந்தைப்படுத்தலில் எழுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்க்கமான வழியை ஏற்படுத்தலாம். இங்கு பல்கலைக்கழக மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடுகள் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக மிக அவசியமாகும்.

நமது நாடு சிறப்பான விவசாயத்தினை மேற்கொள்வதற்கு உகந்த வளங்கள் காணப்படுவதால் நாட்டின் முழுமையான சுய தேவையை பூர்த்தி செய்து விவசாயத்தில் தன்னிறைவு காண முடியும். அதோடு நாட்டின் விவசாய உற்பத்திகளில் அதிகரிப்பு மாத்திரம் காணப்படாது ஒழுங்காக நிர்ணயிக்கப்பட்ட வகையிலான சந்தைப்படுத்தல் நுட்பங்களையும், சேவைகளையும் மேம்படுத்துவதன் ஊடாகவும், புதிய புதிய விவசாய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதன் ஊடாகவும் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும். அவ்வாறு நாட்டின் இறக்குமதிக்கு மேலாக உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதிச் சந்தைப்படுத்தலில் கிடைக்கும் வறுமாணத்தை அதிகரித்து நாட்டின் அந்நிய செலவாணியை ஈடு செய்வதோடு, இலங்கை விவசாய உணவுற்பத்தியில் தன்னிறைவு காணமுடியும்.

ச.றொபின்சன்
நுண்கலைத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap