இலங்கை பிரதான செய்திகள்

யுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக நிராகரித்துவரும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ள அவர், அதனை நியாயப்படுத்தவும் முயன்றுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பத்திரிகையொன்றினால் பிரசுரமான கட்டுரையொன்றுக்கு காரசாரமான முறையில் பதிலளித்துள்ள கோட்டாபய ராஜபக்ஸ, யுத்தத்தில் ஒரு நபரின் மனித உரிமை மீறல்களை பாதுகாப்பது சாத்தியமற்றது என கூறியுள்ளார்.

யுத்ததின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஸ்ரீலங்கா இராணுவ உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, போரில் ஒரு நபரின் மனித உரிமையை பாதுகாப்பது என்பது மழையின் போது சேறு ஏற்படுவதை தடுப்பது போன்றது என கூறியுள்ளார்.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் ஸ்ரீலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், அதேபோல கடந்த மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற யுத்த வெற்றிவீரர்கள் தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றிய உரை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு த ஹிந்து பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையொன்றுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அனுப்பட்டுள்ள பதிலில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுத்த வெற்றிவீரர்கள் இலக்குவைக்கப்படுவதை ஸ்ரீலங்கா பொறுத்துக்கொள்ளாது : கோட்டாபய ராஜபக்ஸ என தலைப்பிடப்பட்டு கடந்த மே மாதம் 20 ஆம் திகதி ஊடகவியலாளர் மீரா ஸ்ரீனிவாசனால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட கட்டுரைக்கே ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் பதில் கடிதம் அனுப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையானது உண்மையான நிலையை எடுத்துரைக்கவில்லை என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களில் தெளிவான விதிகளை கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த அறிக்கையில் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இராணுவ நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் முடிவுக்கு வருவதற்கு பதிலாக வேறுபாடு மற்றும் முறையான இலக்கு விதிகள், இராணுவத் தேவை மற்றும் விகிதாசாரத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவில் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போரின் இறுதி நாட்களில் வைத்தியசாலை உள்ளிட்ட இராணுவம் அல்லாத இலக்குகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் விகிதாசார விதிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டதா என்பது தொடர்பில் இறுதி முடிவுக்கு வருவதற்கு கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையினால் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஷவேந்திர சில்வா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய இராணுவத் தளபதி, யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான ஒரு ஜெனரல் தர அதிகாரி என த ஹிந்து பத்திரிகை அடையாளப்படுத்தியுள்ளமை மிகவும் நியாயமற்றது என கூறியுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பானவை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் வழக்குகள் அற்ற கொலைகள் உள்ளடங்கலாக யுத்தக் குற்றங்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல் தொடர்பாக லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் நம்பக்கத்தன்மை அடிப்படையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட இறையாண்மையுள்ள ஜனாதிபதியை வெளிநாடு கேள்விக்கு உட்படுத்துவது அதிருப்தி அளிப்பதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அந்தப் பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகவியலாளர் மீரா ஸ்ரீனிவாசன் எழுதிய கட்டுரையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என கூறப்பட்டுளன்ளதை நிராகரித்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட எண்ணிக்கை தவறானது எனவும் கருதப்படும் ஒன்றெனவும் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகளின் சபையின் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை சரிபார்க்கும் வகையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் விடுத்த கோரிக்கையை போருக்கு பின்னர் ஆட்சிக்குவந்த அடுத்தடுத்த அனைத்து அரசாங்கங்களும் நிராகரித்துள்ளன.

யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்கு பொலிஸார் வடக்கு கிழக்கு மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் ஜனாதிபதியின் உரை இடம்பெற்ற யுத்த வெற்றிவீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு, உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் நடைபெற்றதாகவும் த ஹிந்து இணையத் தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இராணுவத்தின் வெளிப்படையான ஈடுபாடு, யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் இராணுவமயமாக்கம் தொடர்பான பிரச்சினை என த ஹிந்து நாளிதழ் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும் இதனை முழுமையாக நிராகரித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, யுத்தப் பிரதேசங்களில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் நெருக்கமான உறவுகளை கட்டியெழுப்பும் வாய்ப்புக்களை தெளிவாக உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது.

ஜனாதிபதியின் இராணுவ ரெஜிமெண்டான கஜபா பிரிகேட்டில் தன்னுடன் போரிட்ட நெருக்கமானவர்கள் உள்ளடங்கலாக மனித உரிமைகளை மீறினார்கள் என குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான இராணுவ அதிகாரிகள் பலரை புதிய அரசாங்கத்தின் சிவில் உயர் பதவிகளுக்கும் கோவிட் 19 பரவலை தடுக்கும் செயற்பாடுகளின் முக்கிய பொறுப்புக்களுக்கும் நியமித்துள்ளமை, இராணுவ மயமாக்கத்திற்கான உதாரணம் என சர்வதேச சமூகங்களின் கவனத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் கொண்டுவந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

(relevant Hindu link here  https://www.thehindu.com/news/international/rajapaksas-office-responds-to-report/article31689933.ece )

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap