Home இலங்கை குருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…

குருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…

by admin

சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பணிப்புக்கு எதிராக அவரால் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை வரும் ஜூன் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் ஜூன் 30ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டது.

சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார்.

அறம்சார் காரணிகள் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் பதவியை 2019 டிசெம்பர் 4ஆம் திகதி துறந்த பின்னரே இந்த மனுவை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தார். அதனால் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் என்ற பதவிநிலையிலேயே அவர் உள்ளார்.

சட்டத்துறையில் போதனைசார் அலுவலகராகப் பணியாற்றுவர்கள் நீதிமன்றங்களில் முன்னிலையாகி வழக்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கும் தத்துவம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என்றும் அதனை ஏற்றுக் கொண்டமையானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை தனது சுயாதீபத்தியம் இழந்துள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், சட்ட மா அதிபர் என 41 எதிர்மனுதாரர்கள் மனுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா இந்த மனுவை கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி உயர் நீதிமன்றில் சமர்ப்பித்தார். இந்த மனு மார்ச் மாத இறுதியில் பரிசீலனைக்கு எடுப்பதாக உயர் நீதிமன்றம் முன்னர் தவணையிட்ட போதும், நாட்டில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளால் உயர் நீதிமன்ற அமர்வுகள் சுமார் 50 நாள்கள் பிற்போடப்பட்டன.

இந்த நிலையில் இந்த மனு இன்று சனிக்கிழமை உயர் நீதிமன்ற அமர்வால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய, நீதியரசர் முர்டு பெர்னாண்டோ ஆகிய இருவரும் கொண்ட அமர்வு முன் மனு பரிசீலனைக்கு வந்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் உயர் நீதிமன்றில் முன்னிலையாகவிருந்தார். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் உயர் நீதிமன்றில் முன்னிலையாக காரணத்தால் அவரது இளநிலை சட்டத்தரணி லக்ஸ்மனன் ஜெயக்குமார் உயர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். மனுதாரர் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரனும் மன்றில் தோன்றினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் மேலதிக சொலிசிட்டர்கள் ஜெனரல் இந்திகா டெமுனி டி சில்வாவின் ஏற்பாட்டில் அரச சட்டவாதி முன்னிலையாகியிருந்தார்.

மனுதாரர் தன்னுடைய கட்சிக்காரங்கள் சார்பில் ஏற்கனவே நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்குக்குகளில் முன்னிலையாவதற்கு அவரது அனுமதியளித்து கட்டளையிடப்படவேண்டும் என்று நகர்த்தல் பத்திரம் ஊடாகக் கோரப்பட்டது.
இந்த மனுவில் இடைக்காலக் கட்டளையாக்கும் விடயத்தை விவாவத்துக்கு எடுக்க பிரதம நீதியரசரால் அரச தரப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு தவணை வழங்குமாறு அரச தரப்பால் கோரப்பட்டது.

அதற்கமைய மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் ஜூன் 30ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டது.

பின்னணி

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் 12 பேர் தொடர்பில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தானை மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சட்டத்தரணி எஸ்.சுபாசினி தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகி வாதாடி வருகிறார்.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 3 மனுக்களை மட்டும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட 3 பேரின் ஆள்கொணர்வு மனுக்களில் மனுக்களில் முதலாவது பிரதிவாதியாக இளைஞர்களை கைது செய்து சென்ற போது நாவற்குழி முகாமின் அதிகாரியாகவும் தற்போது இலங்கை இராணுவத்தின் காலாற்படையணியின் பணிப்பாளராகவும் செயற்படும் துமிந்த கெப்பிட்டிவெலான சேர்க்கப்பட்டுள்ளார். 2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ஆம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதில் சட்ட மா அதிபர் திணைக்களம் முன்வைத்த விண்ணப்பத்தையடுத்து முதலாவது பிரதிவாதி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
இந்த மனுக்கள் தொடர்பான ஆரம்ப விசாரணை சுமார் இரண்டு வருடங்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் கடந்த மே 10ஆம் திகதி இடைக்காலக் கட்டளையிடப்பட்டது.

மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு பொறுப்பு பாரப்படுத்தப்பட்டது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இந்த மனுக்கள் மீதான விசாரணை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பான மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார். எதிர்மனுதாரர்கள் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையானார்.

மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்து மன்றிலிருந்து சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் வெளியேறிய போது அவரை, இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் அலைபேசியில் ஒளிப்படமோ அல்லது காணொலிப் பதிவோ செய்திருந்தார். அந்த இராணுவப் புலனாய்வாளர் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகரவின் வாகனத்தில் ஏறியிருந்து ஒளிப்படம் எடுத்ததையும் அதில் பயணித்தமையையும் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் கண்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக சாவகச்சேரி நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்த சட்டத்தரணி கு.குருபரன், சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுக்கு கடிதம் ஊடாகவும் முறையிட்டிருந்தார்.

“தங்களால் முன்வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று சட்ட மா அதிபரால் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரனுக்கு பதிலளிக்கப்பட்டும் இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில்,

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி உண்டா? அவர் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றங்களில் முன்னிலையாகின்றார்” என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருந்தது.

அந்தக் கடிதம் கிடைத்த அன்றைய தினமே (ஓகஸ்ட் 21) அவசர அவசரமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு ஓர் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என்பது தொடர்பில் இலங்கை இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கவேண்டும்” என்று தகுதிவாய்ந்த அதிகாரியிடம் கோரப்பட்டது.

பல்கலைக்கழக ஸ்தாபன விதிக் கோவை 8ஆம் பிரிவின் கீழ் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவையால் 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தகுதி வாய்ந்த அதிகாரியால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பதிலளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியின் பதில் கடிதம் மற்றும் இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட கடிதம் என்பன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதிய அமர்வில் முன்வைக்கப்பட்டன.

அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்வது என்றும் அவர் பிரசித்த நொத்தாரிசு பணியை முன்னெடுக்க அனுமதியளிப்பது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம் கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி நிகழ்ச்சிக் குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதம் கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கிடைக்கப்பெற்றது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக்கு கடந்த நவம்பர் 9ஆம் திகதி தகுதிவாய்ந்த அதிகாரியால் முன்வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More