இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

மௌனிக்கப்படக் கூடாத குரல்கள் – காயத்ரி டிவகலால

10.06.2020

சட்டம் ,சட்ட ஒழுங்கு அவற்றைக் காப்பவர்கள் பொலிஸார் எனில்வன்முறையையே எப்போதும் தமது ஆயுதமாகப் பயன்படுத்தும் பொலிஸாரை எவ்வாறு நம்புவது? இலங்கையின் பல தசாப்தகால வன்முறை வரலாற்றில் பொலிஸாருக்குப் பாரிய பங்குண்டு. போருக்குப் பின்னரும் கூட இது மாறவில்லை.

நேற்றும் கூட கறுப்பின மக்களுடனான ஒத்துணர்வை வெளிப்படுத்த வன்முறையற்ற முறையில் கூடுகின்றது கொழும்பில் வசிக்கும் ஒரு சமூகம். தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக முகக் கவசம் அணிந்து, ஒருவரிலிருந்து மற்றொருவர் தேவையானளவு இடைவெளிகளை பேணியதாக இருந்தது அவர்களது போராட்டம்

சிறிது நேரத்தில் அவர்களை ரோட்டில் கிடக்கும் குப்பைகளை அள்ளி வீசுவது போல எதுவித பிரக்ஞையுமின்றி வாகனங்களுக்குள் அள்ளி வீசுகிறார்கள் பொலிஸார். சில ஆண்களின் மேலாடைகளும் உருவப்படுகின்றன.

அவலக் குரல்கள்

அடிக்க வேண்டாம் என அலறும் குரல்கள் ,  வலியில் வெளிவரும் தூசணங்கள் , ஒரு பெண்ணைத் தூக்கி எறிவதனைப் பார்த்து எழும் ஆக்ரோசங்கள் , சட்ட மீறல் எதுவென எமக்கு புரிய வையுங்கள் எனக் கேட்கும் குரல்கள் , நாம் சட்ட ஒழுங்கை மீறவில்லை என வலியுறுத்தும் குரல்கள்

அவை எவற்றையுமே கவனத்தில் கொள்ளாது தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குக்கு முற்றிலும் முரணான முறையில்,  அச் சமூக ஆர்வலர்களை வாகனங்களில் பலவந்தமாக அடைத்து ஏற்றிச் செல்கிறது பொலிஸ். பல பொலிஸாரின் முகங்களில் முகக் கவசம் கூட இல்லை

சமூக ஆர்வலர்களை அடிக்கும் போதும், இழுக்கும் போதும், தூக்கி எறியும் போதும் இரு உடல்களுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளிகள் இல்லவேயில்லை. எந்தச் சட்ட ஒழுங்கை மீறியதாக வன்முறையைப் பயன்படுத்தி கைது இடம்பெற்றதோ, அச்சட்டத்திற்கு முற்றிலும் முரணான வகையிலேயே அக்கைது நடவடிக்கைகள் அமைந்திருந்தன

சிந்திக்கக் கூடிய எவருக்கும் விளங்கும் இங்கு பிரச்சினை தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்கை மீறியது என்பதல்ல!

பொலிஸார் தமதாக்கிக் கொள்ளும் வன்செயல்களுக்கு மீண்டும் ஒருமுறை ஆளாகிறது சமூகம், அச்சமூகத்தின் பிரக்ஞையுடனான வெளிப்பாடுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றன

குரல்கள் ஒருபோதும் மௌனிக்கப்படக் கூடாது!

இலங்கையில்  பற்பலவிதமான அடக்குமுறைகளுக்கும், அவை கொடுக்கும்  வலிகளுக்கும் ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு,  நாம் ஒத்துணர்வுடன் ஒன்றிணைவோம்.  எமது குரல்கள் மழுங்கடிக்கப்படாமல் இருக்க வெளிகளையும், வெளிப்பாடுகளையும் அதிகமாக்கிக் கொள்வோம், அவற்றின் வடிவங்களை விஸ்தரித்துக் கொள்வோம், எமது பரப்புக்களையும், பரப்பெல்லையையும் ஆழப்படுத்திக் கொள்வோம் ,அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை சோர்வின்றி முன்னெடுத்துச் செல்வோம்!!! #மௌனிக்கப்பட  #குரல்கள்  #சட்டஒழுங்கு #கறுப்பின #தனிமைப்படுத்தல்  #அடக்குமுறை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap