இலங்கை கட்டுரைகள்

சமகால வாழ்வில் மருத்துவிச்சி முறையினை மீளளித்தல்…..


மனித வாழ்வியல் நம்பிக்கை, சடங்குகள், நிகழ்த்துகலைகள், மருத்துவம் போன்ற பண்பாட்டு நிகழ்த்துதல்களால்; உயிர்ப்புடன் இயங்கிவருகின்றது. மனித இயக்கத்தில் பண்பாட்டு மரபுகளின் வகிபங்கு என்பது முக்கியமானது. மனிதர்கள் வாழ்தலிருந்து கண்டுபிடித்த அறிவுமரபுகளின் தொகுப்பாக இவை உள்ளன. ஒவ்வொரு பண்பாட்டு நடத்தைகளும் மனிதர் சேர்ந்து இயங்குவதன் வழி முழுமை அடைகின்றது. தனக்குரிய பண்பாட்டு அறிவு மரபுகளுடன் இணைந்து இயங்குவதன் வழி சமூகம் பாரம்பரிய அறிவுமுறைகளை சேமிக்கிறது, கடத்துகிறது, பாதுகாக்கிறது. இத்தகைய சமூகச்செயற்பாட்டில்; பண்பாட்டு முழுமையில் ஏற்படுத்தப்படும் அதிகார அழுத்தங்களும் மாற்றங்களும் பண்பாட்டு நடத்தையிலும் மனித வாழ்வியலிலும் தாக்கத்தினையும் மாற்றத்தினையும் ஏற்படுத்துகின்றது.
காலனியம் அறிமுகப்படுத்திய நவீனம் பாரம்பரியத்தினை பாமர மக்களுடையதாய் வாழ்வியலுக்கு ஏற்புடையதற்றதாய் பொதுத் தளத்திலும் ஆய்வுப்புலத்திலும் பரப்புரை செய்தது. தர்க்கரீதியான விமர்சனங்கள் அற்றதாய் நிறுவப்பட்ட உண்மையாய் இத்தகைய காலனியக் கருத்தியல்கள் நவீனமாதல் என ஏற்றுக்கொள்ளப்பட்டன. பலதசாப்த அனுபவ அறிவின் வழி உலகம்தழுவிய பன்மைத்தன்மை கொண்டு இயங்கிவரும் பாரம்பரிய அறிவியல் முறைகளை வாழ்வியலுக்கு உகந்தவை அல்லாதவைகளாக காலனிய மதிப்பீடு மற்றும் பெறுமானங்கள் நிறுவின. இதற்கான ஊடகமாக நவீன கல்வி முறையியல் செயற்பட்டுவருகின்றது.

வேளாண்மை. மருத்துவம், சட்டம், நீதி, பொருளாதாரம், நிகழ்த்துகலைகள் போன்ற பல உள்ளுர் அறிவு மரபுகள் வாழ்வியலிருந்து அகற்றப்பட்டன. இத்தகைய திட்டமிடப்பட்ட அழிப்பினால் முற்றாக வாழ்வியலிருந்து நீங்கிய அறிவு மரபாக மருத்துவிச்சி மரபு காணப்படுகின்றது. இன்றைய சூழலில் மருத்துவிச்சி மரபு என்பது வீடுகளில் பார்க்கமுடியாத வாழ்வியலில் பயன்படுத்த தகுதியற்றதாகவும்; தகுந்த மருத்துவ முறையாக வாழ்வியலுக்கு ஏற்றதாய் உண்மைத்தன்மை வாய்ந்ததாய் காலனிய நவீன மருத்துவ முறை அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றிக்கு மாற்றாய் இன்றைய காலனிய நீக்கச்செயற்பாட்டில் உள்ளுர் அறிவுமுறைகள் பற்றிய தேடலும் வாசிப்பும் சமூகத்துடன் இணைந்த மீளுருவாக்கச் செயற்பாடும் முக்கியமாய் உணரப்பட்டு முன்னெடுக்கப்படும் சூழலை அவதானிக்கலாம்.

இன்றைய சமூகச் சூழலில் பாரம்பரிய அறிவுமுறைகள் மற்றும் நவீன அறிவுமுறையின் அதிகார கட்டமைப்புக்கள் தொடர்பான மறுவாசிப்பும் தர்க்கரீதியான விவாதங்களும் மீளமைத்தல் தொடர்பான செயற்பாடுகளை முன்வைப்பதற்கான தேவையை உணர்த்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக பாரம்பரிய அறிவுமுறையும் நவீன வாழ்வியலும் இணைந்து செல்லும் சமகால வாழ்தலின் தேவையை உணர்த்தும் உரையாடல்கள்கள் தொடக்கப்பட்டுள்ளன. மருத்துவிச்சி மரபினை வாழ்தலில் இணைத்தல் அங்கிகரித்தல் தொடர்பாய் யுனெஸ்கோவினால் மகப்பேறுகால மருத்துவச்சி மரபினை உலகம் தழுவியதாய் மீளவும் வாழ்வியலில் இணைப்பதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

யுனெஸ்கோவினால் முன்வைக்கப்பட்ட மகப்பேறுகால மருத்துவச்சி மரபினை அங்கிகரித்தல் தொடர்பான சுற்றறிக்கையின் படி உலகில் வாழும் மக்களின் அறிவியல் மரபு என்பது பல்தன்மை வாய்ந்தது. அதில் பேறுகால மருத்துவ முறைமை என்பது பாரம்பரிய மருத்துவ முறையில் சடங்குகளுடன் இணைந்து தகவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பாதுகாத்தல் நடைமுறையில் பரவலாக்கல் என்பது இன்றியமையாதது. சமாதானமான ஆரோக்கிய சமூக உருவாக்கத்திற்கும் மகப்பேறுகால மருத்துவ முறைமை வழிசமைக்கின்றது. பேறுகால மருத்துவ முறைமையை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கொண்டு செல்வது மருத்துவமுறையில் புதிய செயற்பாடுகளுக்கு வழிவகுப்பதாயும் உள்ளது. இதனைப் பரிந்துரை செய்வதன் நோக்கம். பொதுவாக மக்கள் மத்தியில் இதன் தன்மையை உணர்த்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும். (யுனெஸ்கோ சுற்றறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.)

வாழ்வியலில் மகப்பேறுகால மருத்துவச்சி மரபு

இலங்கையில் தமிழர் பண்பாட்டில் பாரம்பரிய மகப்பேறுகால மருத்துவ முறைமை என்பது மாந்தரிகம், நம்பிக்கை சடங்குகளுடன் இணைந்து செயற்படும் மருத்துவமுறையாக காணப்படுகின்றது. இது பரம்பரை பரம்பரையாகவும்; சுயவிருப்பின் ஆர்வத்தில் பயிலப்;படுகிறது. நாட்டு வைத்தியர் மருத்துவிச்சிகளாக செயற்படுதல் என்பதற்கும் அப்பால் பிள்ளைப்பேறு பார்க்கும் பேறுகால மருத்துவிச்சி அம்மாக்கள் கைவைத்தியர்களாக குடல் ஏற்றம், நாட்டு வைத்தியம், செய்பவர்களாக உள்ளனர். ஆண்களும் பிள்ளைப்பேறு பார்த்ததற்கான சான்றுகள் உள.

பெண் கருத்தரித்தலிருந்து தாயின் பாதுகாப்பு, குழந்தை வளர்ச்சி, குழந்தைப் பிறப்பு, பால்குடி, பால்குடி மறப்பு, வரையான காலப்பகுதி வரை தாய் சேய் பாதுகாப்பினை உறுதி செய்வதாக பேறுகால மருத்துவ முறைமை காணப்படுகின்றது. தாய் கருத்தரித்தலின் பின் குழந்தை வளர்ச்சிக்கான தாயின் பாதுகாப்பிற்கான உணவு, பழக்கவழக்கம் தொடர்பான ஆலோசனைகளை மருத்துவிச்சி அம்மாக்கள் கருத்தரித்த குடும்பத்திற்கும் பெண்ணுக்கும் வழங்குகின்றனர். ஒரு பெண் கருத்தரித்தலின் பின்; அச் சூழலை குடும்பம் முழுவதும் கையாள்கின்றது. கூட்டுப்பாதுகாப்பு என்பது சாத்தியமாகின்றது. வீடு அப்பெண்ணின் பிரசவத்திற்கு தயார் ஆகின்றது. அதனை ஒழுங்கு செய்வதற்கான அறிவும் திறனும் கொண்டவர்களாக மருத்துவிச்சி மற்றும் மூத்த பெண்கள் காணப்படுகின்றனர்.

இத் தயார்படுத்தல் குழந்தையை ஆரோக்கியமாக தாய் பெற்றெடுப்பதனை நோக்காகக் கொண்டுள்ளது. குழந்தை வளர்ச்சியில் தாய், குழந்தை இருவருக்கும் ஒவ்வாமையை உண்டாக்காத உணவு முறை மற்றும் கசாயங்கள் வழங்கப்படுகின்றன. குழந்தையின் உறுப்புக்கள் வளர்தல், முடி வளர்தல் என ஒவ்வொரு மாதமும் வரையறை செய்யப்பட்டு அதற்குரிய உணவுகள் தாய்க்கு வழங்கப்படுகின்றன. வயிற்றினை தொட்டுப் பார்த்தல், நாடி பிடித்து பார்த்தல் மூலம் குழந்தையின் வளர்ச்சிநிலை,பிள்ளைப்பேறுக்காலம் போன்றவற்றை உணர்ந்து கொள்கின்றனர். இதன் பின்பே நோவை அதிகரிப்பதற்காகாவும் நோவை தரம்பிரித்தல் ( பிள்ளைப்பேற்று நோ, வாயு நோ) என்பதற்கமைவாக கசாயங்கள் தாய்க்கு வழங்கப்படுகின்றது. அத்துடன் குழந்தை குறுக்காகக் கிடத்தல், குப்புற கிடத்தல்,மாக்கொடி சுற்றினால் அதற்கான முறையியல்,இரண்டு, மூன்று குழந்தைகளை எடுப்பதற்ககான முறை,இரணியப்பிள்ளையை (மரித்தபிள்ளை) தாயை பிரசவிக்க வைத்தல் தொடர்பான அறிவு என பிரசவம் சார்ந்த பூரண அறிவுகொண்டவர்களாக மருத்துவிச்சிகள் விளங்குகின்றனர்.

குழந்தை பிறந்த பின் மாக்கொடி விழாமல் நேரம் தாழ்த்தப்பட்டால் மாக்கொடியினை விழவைப்பதற்கான மந்திரங்கள் பூசாரிகளால் செய்யப்;படுகின்றது.(வெற்றிலையில் மந்திரம் ஓதி மென்றிடக் கொடுத்தல்.) வைத்தியமும் மந்திரமும் இணைந்து இத்தகையான சூழ்நிலையைக் கையாள்கின்றது.

மருத்துவிச்சியின் செயற்பாட்டினை பின்வரும் பிரிவுகளாகப் பார்க்கலாம். ஒரு பெண் கருத்தரித்த பி;ன்னராக குழந்தையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் செயற்பாடு, தாய் சேய் சுகப்பிரசவத்திற்கான தயார்ப்படுத்தல். பிரசவம் நடைபெறும் போது ஏற்படும் சிக்கல்களை கையாளுதல், குழந்தை பிறந்த பின்னரான குழந்தை தாய் பராமரிப்பு (பத்திய உணவு வழங்குதல்) போன்றவைகளாக இதனை பிரித்தறியலாம்.

பிள்ளைப்பேற்றுக்குப் பின்னர் தாயின் பாதுகாப்பு, சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவை முக்கியமானவை. தாய்க்கு பத்திய (காயம்) உணவுகள் வழங்கப்படுகின்றன. இதனை தயாரிப்பதற்கான பொருட்கள் நல்ல நாள் பார்த்து வாங்குதல், தயார் செய்தல் போன்றவை மருத்துவிச்சியினால் தயார் செய்யப்படுகின்றது. குழந்தை பெற்ற தாயின் உடலின் வலியைப் போக்கவும் இடுப்பு, கர்ப்பப்பை போன்ற பகுதிகளை பலப்படுத்தவும், தொற்று நீக்கி முறையாகவும் மீண்டும் தாயை சாதாரண வாழ்வியல் முறையில் இணைக்கவும் வேதுவார்க்கப்படுகின்றது. வேது வார்த்தல், குழந்தை பெற்று மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழாம் நாட்களின் பின் தொடங்குவார்கள். படிப்படியாக ஒவ்வொரு வேதும் வார்த்து மூன்று நாட்களின் பின் அடுத்த வேது வார்க்கப்படுகின்றது. முதல் வேது. பட்டைகளும் குழைகளும் சேர்ந்தது. வேப்பம்பட்டை, ஒதியம்பட்டை, வேப்பம் இலை, ஒதியம் இலை, நொச்சி இலை, ஆமணக்கு இலை, அடாதோடை இலை போன்றவை சேர்த்து வார்க்கப்படுகின்றது. பட்டைகளான வேப்பம் பட்டை, ஒதியம் பட்டை சேர்த்து பட்டை வேது வார்க்கப்படுகின்றது. பட்டை வேது, இறுதியாக உப்பு மஞ்சள் வேது, உப்பையும் மஞ்சளையும் நீருடன் கலந்து கொதிக்க வைத்து வார்த்தல். என வேதுவார்க்கப்படுகின்றது. இவ் முறைமை பிரதேசத்திற்கு பிரதேசம் வித்தியாசங்களைக் கொண்டவை. வேது வார்த்த பின்னரே குழந்தை பெற்ற தாய் நீரினை அழையலாம். (நீரினால் குளிக்க மற்றைய தேவைகளுக்கு பயன்படுத்த தொடங்குதல்) வேது வார்க்கும் வரை சுடுநீர் மட்டுமே பாவிக்க முடியும். குழந்தைக்கு எண்ணெய் தேய்த்து வெயிலில் போடுதல், தொப்புள் கொடி விழாமல் இருந்தால் அதற்கான மருந்துகள் செய்தல் என குழந்தைப் பராமரிப்பும் மருத்துவிச்சிப் பெண்களால் பார்க்கப்படுகின்றது.

வீட்டிலுள்ள பெண்களும் ஆண்களும் பராமரிப்பு மற்றும் சடங்கு முறைகளை நன்கு அறிந்தவராக இயங்குகின்றனர். இங்கு அறிவு என்பது பெண்கள் சார்ந்ததாகவும் ஆண்களை இணைப்பதாகவும் உள்ளது. தாய், குழந்தை ஆரோக்கியத்தினைப் பேணல், பயில்வில், வாழ்வியலில் கொண்டுவருதல் என்னும் அடிப்படையில் இத்தகைய சடங்குகளும் மரபு முறைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

இன்றைய வாழ்தலில் பேறுகால மருத்துவ முறைமை

நவீன அறிவியல் என்பது விஞ்ஞானரீதியாக காரணகாரிய ரீதியாக ஆய்வு கூடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு நிருபிக்கப்பட்டவற்றை ஒரே பொதுவான மாற்ற முடியாத உண்மையாக ஏற்றுக்கொண்டது. இவ்வாறாய் உருவாக்கப்பட்டவை கருத்தியல்கள், கோட்பாடுகள் கண்டுபிடிப்புகளாக முடிந்த முடிவாய் கல்விப்புலங்களில் பரவலாக்கம் செய்யபட்டன. பாரம்பரிய அறிவு முறை என்பது பலநூறு வருடங்கள் வாழ்ந்த மனிதர்கள், வாழ்தலில் பெற்ற அனுபவ அறிவினை தலைமுறை தலைமுறையாக கையளித்து வருவதாகும். இது முடிந்த முடிவாக இருப்பதன்று. வாழும்சூழல் காலநிலை சார்ந்து சமூகத்திற்கு சமூகம் வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் கொண்டவை. வாழ்தல் மூலம் பெற்ற அனுபவவழி சேகரித்த பாரம்பரிய அறிவு முறைகளை கற்பனையான உண்மைத்தன்மை அற்ற அறிவுமுறையாக நவீன அறிவியல் கருத்தாக்கம் செய்தது.

நீண்ட தொடர்ச்சியும் அனுபவவிஞ்ஞானத்தன்மை கொண்டு விளங்கிய உள்ளுர் நிர்வாகம், அரசியல், பொருளாதாhரம், மொழி, தொட்டுணராப்பண்பாட்டு வடிவங்கள், இயற்கை வேளாண்மை. கட்டுமான தொழில்நுட்ப அறிவு, உணவு முறையியல், வைத்திய முறைகள் போன்ற பாரம்பரிய அறிவுமுறைகளை காலனித்துவம் நவீனம் அளவையியல் வழி பொய்பித்தது. மறு பக்கம் நவீனப்படுத்தவும் செம்மையாக்கவும் தலைப்பட்டது. நவீன கண்டுபிடிப்புக்களை அறிவியலை பழக்கப்படுத்துவதன் வாயி;லாக மரபுகளையும் அதனைப் பின்பற்றும் மக்களையும் ஒடுக்குவதும் அதிகாரப்படுத்துவதுமே இதன் நோக்காக இருந்தது. மனிதரின் வாழ்வியலிருந்து பாரம்பரிய நம்பிக்கைகள் விடுவிப்பதற்கான கருவியாக நவீன கல்விமுறை பரவலாக்கப்பட்டது.

நமது பண்பாட்டடையாளம் என்பது ஒவ்வொரு இனமும் சமூகமும் மூத்தகுடியாய் நம்மை நிருபிப்பதற்கு மாத்திரமானது மட்டுமல்ல. அது எம் வாழ்வியலின் இணைந்து பயணிப்பது. எமது வரலாற்றை தொன்மையை முன்வைப்பதற்கானதாய் பாரம்பரியம், பண்பாடு, எனப் பேசுகின்றோமே தவிர இன்றைய வாழ்வியலை நேர் செய்ய காலனிய நீக்கத்திற்கான சுயமான வாழ்தலுக்கான அடிப்படைகளை இடுவதற்கான, செயற்பாடுகள் அரிதாகவே இடம்பெறுகின்றன.

மகப்பேறுகால மருத்துவ முறைமையில் மருத்துவிச்சி அம்மாக்கள் நூற்றுக்குமேற்பட்ட பிரசவங்களைப் பார்த்துள்ளனர். முப்பது தொடக்கம் நாற்பத்தைந்து வருட கால அனுபவத்தினைக் கொண்டுள்ளனர். மருத்துவிச்சி அம்மாக்கள் பிரசவம் பார்த்து ஆரோக்கியமான பிள்ளைகளாகவே எடுத்துள்ளனர் அவ்வாறு பிறந்த பிள்ளைகள் நோய்களின்றி இன்றுவரை ஆரோக்கியமாக வாழ்கின்றனர். சுகப் பிரசவத்தில் ஒவ்வொரு குழந்தையும் வெளியில்வர போராடுகின்றது. சுற்றம் சூழ அது உலகிற்கு வருகின்றது. வயிற்றை தடவி குழந்தையின் இருப்பினை அறிந்து அதற்கான தயார்படுத்தலை செய்வதன் ஊடாக மருத்துவிச்சி அக் குழந்தை வெளிவர உதவுகின்றாள். பிரசவத்தில் சிக்கல் வரும் போது பிள்ளையின் வருகையை துரிதப்படுத்த மல்லி,மிளகு,இஞ்சி வெள்ளக்காக்கண வேர், வெந்தயம். சேர்த்து அவித்து ஊறல் கொடுக்கிறாள். பிரசவத்தின் பின்னர் தாய் பிள்ளைக்குரிய பாதுகாப்பினைச் செய்கிறாள்.

இத்தகைய அறிவினை, மருத்துவிச்சிகளது அனுபவங்களை அறிவாய் பகிர்வதற்கும் கற்பதற்குமான முறைமை நமது கல்வி முறையில் இல்லை. எமது கல்வி நடவடிக்கைகள், எம் சூழல் சார்ந்த கற்றல், எமது பாரம்பரிய அறிவுப் பொறிமுறைகளை கற்பது, என்பதனை விலக்கி அவற்றினை மூடநம்பிக்கைகளாக பாமரமக்களுடையதாய் கற்பித்தது. சிறந்த அறிவியலாக வாழ்வியலாக ஐரோப்பிய வாழ்தலை அறிவியலை பண்பாட்டை ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொள்ளச் செய்கின்றது. ஐரோப்பியர் அல்லாத பிற பண்பாட்டினை வாழ்வியலை ஐரோப்பிய மையவாதம் எந்தவித தர்க்கவியல் விமர்சனமுமின்றி அறிவற்றதாய் வாழ்வியலிருந்து இல்லாமல் செய்துள்ளது. செய்தும் வருகின்றது.

காலனித்துவம் காலனிய நாடுகளில் பண்பாடு. அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சார்ந்த அபிவிருத்தி மூலமான நாகரீகப்படுத்தல் என அடையாளப்படுத்திக் கொண்டது. ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமேரிக்க நாடுகளை வளங்களைச் சுரண்டவும் தனக்கான உற்பத்திகளை செய்யவும் உரிய இடமாக அதிகாரப்படுத்தியது. தன் சுரண்டலுக்கும் விற்பனைக்குமான முகவர்களை காலனிய நாடுகளில் உருவாக்கியது. அதற்கான சட்டரீதியான ஒழுங்குகளைச் செய்ததோடு போக்குவரத்து வசதி, பெருந்தெருக்கள் அமைத்தல் மூலமான அபிவிருத்தி என நியாயப்படுத்தியது. உலக வளங்களை ஒரே இடத்தில் குவிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இதன் வாயிலாக காலனிய ஒடுக்குதலுக்குட்பட்ட நாடுகளின் வளங்களை சுரண்டுவதன் மூலம் உலக முதலாளியம் உருப்பெற்றது.

முதலாளியத்தின் நோக்கு உற்பத்திகளை விற்பதற்கான சந்தைகளை உருவாக்குவதும் கண்டுபிடிப்பதுமே ஆகும். இவ் முதலாளியம் அதி உற்பத்திகளைச் செய்யத் தொடங்கியது. பாரம்பரிய உற்பத்தி என்பது தேவைக்கேற்ற உற்பத்தி. உற்பத்தி செய்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்குமான உறவு இதில் காணப்படும். மட்பாண்டம் போன்ற சிறு உற்பத்திகள் பண்பாட்டுப் பொருண்மை கொண்டவைகளாகவும் இயங்குகின்றன. முதலாளியப் பாரிய உற்பத்திகள் சிறு உற்பத்திகளுக்குரிய சந்தைகளையும் தனக்கான பெரும் உற்பத்திகளுக்கான சந்தைகளாக மாற்றியுள்ளது. அத்தோடு மருத்துவமும் மனித உடலும் பெரும் முதலீட்டு உற்பத்தியாக முதலாளியத்தால் மாற்றப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் காலனித்துவத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வைத்தியம் என்பது இலாபமீட்டும் தொழிலாக சமூகப்பரப்பில் இயங்குவதனைக்காணலாம்.

உணவும் மருத்தும் பாரம்பரிய அறிவு முறையில் பண்பாட்டில் ஒரு பகுதியாகும். நோய்களுக்கேற்ற உணவு, சடங்கிற்கு ஏற்ற உணவு. உணவு விலக்கல், உணவு சேர்த்தல் என உணவுப் பாரம்பரியம் பல்தன்மை கொண்டதாய் விளங்கியது. காலனியத்தின் பின்னான நவீன அறிவு மகப்பேறுகால மருத்துவ முறைமை மற்றும் உணவு, மருந்து அனைத்தினையும் விற்பனைக்கானதாய்; இலாபமீட்டலுக்கானதாய் மாற்றியது. நாட்டின் பிரதேசத்தின் தட்பவெப்பம் உடலின் தட்பவெப்பம் என்பன இங்கு கடந்ததாய் உலகப்பரப்பில் எல்லாம் எங்கும் எப்போதும் எல்லோருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் ஒரே உணவு, ஒரே உடல் என்னும் பொதுமைக்குள் தன் பெருஞ்சந்தையை கருத்திற் கொண்டு உணவு, வைத்தியம் மருந்து போன்றவற்றை பரவலாக்கியுள்ளது.

மகப்பேற்றுக்கால மருத்துவ முறைமையில் பிரசவம் என்பது பிள்ளையைப் பெற்றெடுக்கும் மாத்திரமல்ல. சடங்குகளுடன் இணைந்தது. ஆரோக்கியமான சமாதானமான இளம் தலைமுறைகளை உலகிற்கு கொண்டுவருவது. இனப்பெருக்கம் சார்ந்த ஆரோக்கியத் தன்மையையும் பேணுவது. ஆனால் நவீன காலனிய அறிவில் வைத்தியம் ஒற்றைத் தன்மை கொண்டதாகவே உடல்களைக் கணிக்கின்றது.

மகப்பேற்றுக்கால மருத்துவிச்சிகள் நீண்ட அனுபவத்தினையும் முதிர்ச்சியையும் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் மகப்பேற்றில் மருத்துவிச்சிகளுக்கு இருந்த அறிவு அனுபவம் போன்றவை கருத்தில் கொள்ளப்படாமலும் பொதுத்தளத்தில் விவாதிக்கப்படாமலும் நவீன வைத்திய அறிவியல் முறை குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான (ஆனைறகைந) பயிற்சிகளையும் கத்தரிக்கோல், துடிப்புபார்க்கும் கருவி, மகப்பேறு பார்க்க உதவும் கையேடு, பிளைட் போன்ற கருவிகளையும் வழங்கியது.

தூய்மையான, அன்பான, ஆதரவான கைகளைக் கொண்டு பிள்ளைப்பேறு பார்த்தவர்களுக்கு கைகளை விட கருவிகள் சுகாதாரமானவை என கருவி;களை பயன்படுத்த பயிற்றுவிக்கப்பட்டனர். வீட்டில் பார்க்கப்படும் பேறுகால மருத்துவ முறைமை சுகாதாரமற்றவை, பாதுகாப்பற்றவை தாய் சேய் இறப்புவீதத்தினை அதிகரிக்கச் செய்பவை போன்ற பரப்புரைகள் அறிவுப்புலங்களில் வாதிடப்பட்டு பேறுகால மருத்துவ முறைமை என்பது சட்டரீதியான அங்கிகாரம் இழக்கப்பட்டு தண்டணைக்குரிய குற்றமாக்கப்பட்டது. இன்றைய சட்டஒழுங்கின் பிரகாரம் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் பதிவு செய்ய முடியாத சட்ட வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சட்ட நடவடிக்கைகளும் பயிற்சிகளும் மகப்பேற்றுக்கால மருத்துவிச்சி முறைமைகளை வாழ்விலிருந்து விலக்குவதற்கான கருத்தியலை கட்டமைத்தது. இதன் பின்னான காலங்களில் மக்களுக்கும் மருத்துவிச்சிகளுக்கும் மகப்பேறு என்பது அச்சம் தருவதாய் வீட்டுச் சூழலில் கையாளப்பட முடியாத ஒன்றாய் நவீனகல்வி பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாய் குடும்பநல உத்தியோகத்தர்கள் என்னும் முறை உருவாக்கப்பட்டதுடன் பிணி ஆய்வு நிலையங்களும் (ர்நயடவா உயசந உநவெநச)உருவாக்கப்பட்டன.

குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான கடமைகளாகக் குறிப்பாக சமுகத்திலுள்ள பெண்கள் திருமணம் முடித்ததிலிருந்து ஆரம்பிக்கின்றது. திருமணம் முடித்தவுடனே குறித்த ஆணுக்கும் பெண்ணுக்கம் கர்ப்பத்திற்கு முன்னான ஆயத்தநிலைகளை மேற்கொள்வதற்கான உடல் உள தயார்படுத்தல்கள் பரிந்துரை செய்யப்படும். இதனை கர்ப்பத்திற்கு முன்னான பிணி ஆய்வு கல்வி எனக் கூறுவர். பின்னர் குறித்த பெண்ணுக்கு போலிக் அசிட் மாத்திரை வழங்கப்படும் கர்ப்பந்தரித்தலிருந்து தாய்மார்களுக்கான கல்சியம், அயன், போன்ற மாத்திரைகள் வழங்கல். அத்துடன் மாதாந்த பிள்ளைவளர்ச்சியை அறிவதற்கான பரிசோதனைகள், தாயின் ஆரோக்கியத்தைக் கணிப்பிடல், உணவுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கல். குழந்தைகளுக்கான தடுப்பூசி என பிணி ஆய்வு நிலையங்கள்மூலம் குடும்பநல உத்தியோகத்தர்கள் இயங்கி வருகின்றனர்.

பாரம்பரிய மகப்பேற்று மருத்துவிச்சி முறைமை என்பது உணவினை மருந்தாக்கியது. பல்தன்மையான உடல்களும் அதற்கான மருத்துவமும் உருவாக்கப்பட்டன. நவீன மருத்துவத்தில் எல்லா உடல்களும் ஒற்றைத் தன்iமாயனவை. உலகப்பொதுமையில் ஒரே மருந்து என்பதனை நடைமுறைப்படுத்தியதுடன் மூன்றாம் உலக நாடுகளின் உடல்கள் பரிசோதனைக் கூடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மருத்துவிச்சிகளுக்குப் பதிலாய் குழந்தைப் பேற்று வைத்தியர் முன்னுரிமை பெறத் தொடங்கினார். குடும்பமும் மருத்துவிச்சியும் அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்த பேறுகால மருத்துவ முறைமை நிறுவக மயப்பட்டு வியாபாரமாக்கப்பட்டது. காலனித்துவத்தின் வெற்றியாய் மருத்துவிச்சிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள்; அவர்களே அவர்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதுடன் பேறுகால மருத்துவ முறைமை மீது அச்சத்;தினை ஏற்படுத்தியமை தெளிவாகின்றது.

தங்களது நீண்ட கால அனுபவத்தினை சமூகத்தளத்தில் பயன்படுத்தமுடியாதவர்களாய் நவீன வைத்தியத்தினை விமர்சிக்கவோ தங்களது அனுபவங்களை அறிவினை சட்டரீதியாக பதிவு செய்ய முடியாதவர்களாய் மகப்பேற்று மருத்துவிச்சிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். தங்களது பாரம்பரிய அறிவினை நினைவிற்கொண்டு பேசுபவர்களாகவே மாத்திரமே அவர்களை அதிநவீன வைத்திய முறை மாற்றியுள்ளது.

எங்களுக்கான வைத்தியமுறை எது? என்னும் எந்தவித தர்க்க விவாதங்கள் இல்லாமல் காலனியம் அறிமுகம் செய்த நவீன மருத்துவத்தினை ஏற்றக்கொண்டுள்ளோம். இதற்கான மூளைச் சலவையை காலனிய கல்விமுறை செய்துள்ளது. செய்தும்வருகிறது. காலனித்துவத்திற்கு மாற்றாய் காலனியத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாக மரபினை தேடுதல், மரபிற்கு திரும்புதல் போன்ற உரையாடல்களை நிகழ்த்;தப்படும் சூழலில் இத்தகைய உரையாடல்களை செயற்பாடுகளை எங்கிருந்து உருவாக்கப்போகின்றோம். என்னும் கேள்வியும் கருத்துரைப் பகிர்வுகளும் இன்றைய சூழலில் மிக முக்கியமான தேவையாக உணரப்பட வேண்டியது.

கலாநிதி சி.ஜெயசங்கர், கலாவதி கலைமகள், நிறோசினி மகேந்திரன், சிந்துஜா விஜேந்திரன், து.கௌரீஸ்வரன்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.