Home இலங்கை பழங்குடிவாழ் தளவாய் பிரதேசத்தின் ஸ்ரீ குமாரர் ஆலயம் குமாரத்தன் கோவில்- கி.விஜிதா…

பழங்குடிவாழ் தளவாய் பிரதேசத்தின் ஸ்ரீ குமாரர் ஆலயம் குமாரத்தன் கோவில்- கி.விஜிதா…

by admin

வையகம் முழுவதும் நிறைந்துள்ள நீரின் மடியில் ஆங்காங்கே காணப்படுகின்றது மனிதர் வாழும் பொன் தரும் மண் நிலம். அவற்றையே உலகநாடுகள் என நாம் இன்று போற்றுகிறோம். அவ்வாறு காணப்படும் நீருக்கும் நாட்டிற்கும் இடையில் கருவைப் பாதுகாக்கும் நீர்க்குடம் போல, சுற்றிவர இந்துமா சமுத்திரத்தில் பாதுகாக்கப்படும் முத்தைப் போன்ற ஈழம் என்று போற்றப்படும் இலங்கை திருநாட்டின், கண்களால் காண முடியா ஒளி வெள்ளத்தைக் கொண்ட கதிரவன் உதிக்கும் கிழக்குப் பகுதியில் காணப்படும், மீன் இசை பாடும் தேன் நாடு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் செங்கலடியில் இருந்து சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் நீர் வளமும், நில வளமும், கடல் வளமும் ஒருங்கே சேர்ந்து சிறந்து காணப்படும் தளவாய் எனும் அழகிய சிற்றூரில், நிலையாக எழுந்தருளி தளவாயை பாதுகாத்தும் பக்தர்களுக்கு அருள் வழங்கியும், பக்தர்களைப் பாதுகாக்கும் அந்த ஆறுபடை பெருமான் வேலன் குமாரக் கடவுளின் ஸ்ரீ குமாரர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது.

குமாரர் ஆலய வழிபாடு என்பது பழங்குடி மக்களான வேடுவர் சமூகத்தின் ஒரு தொன்மைமிக்க வழிபாட்டு மரபு வழியாகும். வேடுவர் சமுதாயத்தின் சிதறல்களாகிய தளவாய் கிராமத்தின் மக்கள் குமாரர் ஆலய வழிபாட்டுடன் தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் வேடுவ குலத்தின் வழிவந்தவர்களே ஆவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேடுவ சமூக மரபை ஒட்டிய வழிபாட்டு முறையிலான கோவில்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் தளவாய் ஸ்ரீ குமார் ஆலயமும் ஒன்றாக கருதப்படுகின்றது. மேலும் வேடுவர் சமூகத்தில் பல்வேறு குடிகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பனவள குடி (பனையோலைகுடி), சந்திவெளி குடி, யக்குறகுடி போன்ற குடி வகைகள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றன. இதில் பனவள குடியினர் சிறப்பானவர்கள் என்றும் யக்குற குடி என்பவர்கள் சற்று குறைந்தவர்கள் என்றும் பாகுபாடுகளும் காணப்படுகின்றன. பனவளகுடியிலும் வேளாள பனவளகுடியினர் இன்னும் சிறப்புடையவர்கள் என கூறப்பமுகின்றது. இவ்வாறு காணப்படும் வேடுவ சமூக மரபின் வழிபாட்டில் தளவாய் ஸ்ரீ குமாரகோவிலில் மாத்திரமே தோரணை மரம் ஏறி தேன்பூச்செடுத்தல் சடங்கு உள்ளமை மிகவும் சிறப்புக்குரிய விடயமாகும்.

குமரன் ஆலயம் பற்றி மேலும் விரிவாக நோக்குமிடத்து சுமார் 170 வருட கால பழமை வாய்ந்த கோவிலாக இக்கோவில் காணப்படுகின்றது. இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்று போற்றப்படும் வேடுவர் சமூகம் வாழ்ந்தமைக்கு சான்று பகர்கின்ற ஆலயமாக இவ்வாலயம் மற்றும் சடங்கு முறைகளும் காணப்படுகின்றன. மேலும் இத்தளவாய் கிராமத்தில் வாழும் மக்கள் பலர் வேடுவ சமுதாயத்தின் வழி வந்தவர்கள் எனவும் அறியப்படுகின்றது. இவர்கள் வேளாள பனவள குடியினர் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இவ்வாலயத்தில் பல்வேறுபட்ட தெய்வங்கள் காணப்படுகின்றன அந்த வகையில் பின்வருவனவற்றை நோக்கலாம்.
1. குமார் 5
2. பத்தினி 15
3. கன்னிமார் 5
4. செம்பக நாச்சி 2
5. பாணங்காத்தான் 5
6. புள்ளிக்கரன் 3
7. மாறா 1
8. மாநீலீ ( குடாநீலி ) கடற்பகுதி 8
9. கரடித் தெய்வம் 1
10. இந்தி மால் நாச்சி 4
11. நோருப்புகன்னி 7
12. நாகதம்பிரான் 1
13.தெல்கிரி அம்மன் 2
14. பனிக்கன்மார் 1
15. கொழும்பு குமாரர் 1

மேற்கூறப்பட்ட தெய்வங்கள் அனைத்திற்கும் தெய்வமாட்டப்படுகின்றன. இத்துடன் சேர்த்து உத்தியாக்கள் எனப்படும் இறந்த ஆத்மாக்களை தெய்வங்களாகக் கருதி அவர்களையும் ஆட்டுவிக்கும் வழக்கம் இங்கு காணப்படுகின்றது. அதாவது அவர்கள் இறைவனுக்கு நிகராக காணப்படுகின்றனர். மேற்குறிப்பிடப்பட்ட தெய்வங்கள் அனைத்திற்கும் தனித்தனியே உத்தியாக்கள் காணப்படுவதாக அறியப்படுகின்றது. அந்தவகையில் உத்தியாக்கள் ஐந்து பேர் உள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான தெய்வங்கள் காணப்படுவதுடன் இவர்களுக்கு பந்தல் அமைத்து வழிபாடுகள் இடம்பெறுகின்றன. தற்காலத்தில் பந்தல்கள் கற்களாலும் அமையப்பெற்றுள்ளன. மேலும் வேடுவ பெண்களையே நாச்சியார் (நாச்சி) என்று அழைக்கும் மரபு காணப்படுவதை நாம் அறிவோம். குமரன் வேடுவப் பெண்ணான வள்ளியை மணந்ததாக இதிகாச கதைகள் கூறுகின்றன. இதன் நிமித்தம் இவ்வழிபாடு அந்தக்காலத்தில் தோன்றியதாகவும் வாய்வழிக் கதைகள் மூலம் நாம் அறிய முடிகின்றது. இவ்வாறான கதைகள் இக்கிராமத்தில் தற்போதும் கூறப்பட்டு வருகின்றது. முருக வள்ளி திருமணத்தைத் தொடர்ந்து குமார தெய்வ வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் மலைகளிலும் காடுகளிலும் வைத்து வழிபடப்பட்ட குமாரனை பிற்காலத்தில் வேடுவர் சமூகத்தினர் பந்தல்கட்டி வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. இவ்வழியில் வந்த வேடுவ சமூகத்தினரே தளவாய் கிராமத்திலும் குமார வழிபாட்டை கொண்டுவந்து தற்போது வரை பாதுகாத்து வருகின்றார்கள்.

மேலும் தளவாய் குமாரர் ஆலயத்தில் ஆடப்படும் தெய்வங்கள் ஒரு வரிசைக் கிரமப்படி ஆட்டப்படுகின்றன. அந்த வகையில், உத்தியாக்கள், குமாரர் பத்தினி அம்மன், செம்பக நாச்சி, பாணங்கத்தான், பொள்ளு காரன், புள்ளி நாச்சி, மாறா, மாநீலீ, கரடித்தெய்வம், இந்திமால் நாச்சி, நாமல்நாச்சி, கன்னிமார், பணிக்கன், கொழும்பு குமாரர் இந்த வரிசைக் கிரமப்படி தெய்வங்கள் ஆட்டப்பட்டு சடங்கு நடைபெறுகின்றன.

குமாரர் வழிபாடு இங்கு வருடா வருடம் பந்தல் கட்டி தாங்கள் வாழும் இடங்களில் வழிப்பட்டு வரப்பட்டுள்ளது. மேலும் 1827 ஆம் ஆண்டுகளில் தளவாயில் குமாரர் வழிபாடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 1850ஆம் ஆண்டு தேவர் என்பவர் தளவாய் கிராமத்தில் கோவில் அமைத்து இவ்வழிபாட்டை நிலை நாட்டியுள்ளார். இதற்குச் சான்றாக, தற்போதுள்ள குமார் ஆலயம் முன்னைய காலத்தில் மரங்களாலும் ஓலையாலும் களி மண்ணாலும் கட்டப்பட்ட வீடு போன்ற கோவிலாக காணப்பட்டது. இதில் காணப்படும் நடுவளையில் இருந்த பெரும் மரக்கட்டையில் உளியால் செதுக்கப் பட்டது போல் “தேவர் 1850” என்று குறிக்கப்பட்டு இருந்ததாகவும் அம்மரக்கட்டை 1990 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தால் அழிக்கப்பட்டதாகவும் தலைமை பூசாரிகள் கூறுகின்றனர்.

மேலும் இங்கு அடித்தளம் இட்டவர் தேவர் ஆவார். அடுத்து கந்தர், குமாரர், நாகமுத்தர், வீரகுட்டி, பாலர், வேலுப்பிள்ளை போன்றோர் தளவாய் குமாரர் கோவில் தலைமை பூசாரியாக இருந்து வந்துள்ளனர. மேலும் கந்தையா, கணபதிப்பிள்ளை, தியாகராசா (சின்ன்தம்பி), நடராசா, ரெட்ணசிங்கம், வேலன் போன்றோரும் பூசாரிகளாக இருந்துள்ளனர். தலைமை பூசாரியை தலகட்டாடி என்று சொல்லும் வழக்கமும் இங்கு உண்டு மேலும் தற்போதும் இங்கு குமாரர் வழிபாடு அதாவது வேட்டுவ சடங்குமுறை வழிபாடு பாதுகாக்கப்பட்டு வருவதுடன் இப்போதைய தலைமைப் பூசாரியாக வேலுப்பிள்ளை என்பவர் உள்ளார். தேவருக்கு முன்னைய காலத்திலும் இவ்வழிபாடு காணப்பட்டுள்ளது என்பதை வாய்வழிக் கதைகள் மூலம் இக்கிராமத்தில் அறியமுடிகின்றது. மேலும் இந்தக் கோவிலில் காணப்படும் கட்டிடப் பகுதி அமையப்பெற்ற இடம் மேடாகவும் அதற்கு முன் உள்ள பகுதி பள்ளமாகவும் காணப்படுகின்றது இதற்கு ஒரு காரணமும் உண்டு எனக்கருதப்படுகிறது. அந்த வகையில் என்னவென்றால் வேட்டுவ வழிபாட்டு சடங்கினை தாங்கள் இருந்த இடத்தில் பந்தலிட்டு செய்துவரும்போது, பள்ளமான இடத்தில் மடுவெட்டி நீர் எடுத்து அந்நீரை பந்தலிட உள்ள இடத்தில் தெளித்து பந்தலிட்டு வழிபாடு செய்தனர். இதன் நிமித்தமே இக்கோவில் அமையப் பெற்றுள்ளது.

இக்கோவில் வழிபாட்டு முறை பற்றி மேலும் நோக்குவோமாயின் கதிர்காம தீர்த்த இறுதி நாளில் அந்த தீர்த்தத்தை எடுத்து வந்து இரவில் இக்கோவில் கதவு திறக்கப்படும். அதாவது கதிர்காம திருவிழா முடிவுறும் தினத்தில் இரவு தளவாய் குமாரர் ஆலய திருக்கதவு திறக்கப்படும். இங்கு வழிபடும் பூசைகள் சடங்குகள் எனப்படுகின்றது. மேலும் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் சடங்கு நடைபெறும். வெறியாட்டம் அதாவது தெய்வ சக்தி மனிதனில் எழுப்பப்பட்டு தெய்வம் ஆடுவது இடம்பெறும். மேலும் இறந்த ஆத்மாக்களை உத்தியாககள் என்று அவர்களையும் ஆட்டுவிக்கும் வழக்கமும் உண்டு. ஐந்து நாட்களும் இவ்வாறே சடங்கு நடைபெறும். இங்கு தலைமை பூசாரி அதாவது தலக்கட்டாடி எனப்படுபவர் சடங்கின் பிரதான கர்த்தாவாக காணப்படுவார். முன்னைய காலத்தில் வேடுவ குலத்தினர் மட்டுமே இக்கோவிலினை பராமரித்து இக்கோவிலின் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததோடு சடங்குக்கு தேவையான பொருட்கள், நிதி என்பவற்றை தாங்கள் மட்டுமே சேர்த்து சடங்கினை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இருந்தும் 1950 களின் பின் இக்கோவில் கிராம சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நாகப்பர் என்பவரே இவ்வாறு செய்ததாக கூறப்படுகின்றது. இதன் பிறகும் ஆலய சடங்குகள் வருடாவருடம் இடம் பெற்று வந்ததை போல் இடம்பெறுகின்றது. இன்று வரை ஐந்து நாள் சடங்கில் எவ்வித மாற்றமும் இன்றி அவ்வாறு சடங்குகள் இடம்பெற்று வேடுவ சடங்கு மரபினை தழுவியதாகவே காணப்படுகின்றது.

சடங்கு ஆரம்பம்

மேலும் இங்கு நடைபெறும் 5 நாள் சடங்கினை நோக்குவோமாயின், முதல் நாள் அன்று ஒரு இரவில் ஆலய திருக்கதவு திறக்கப்படும் அப்பொழுது ஆலயத்தில் சடங்கு இடம் பெறும் முன்னரே ஊர் மக்கள் ஆலய வளாகத்தை சுத்தம் செய்து விடுவார்கள். வீதிகள் ஆலய வளாகம் என்பவற்றில் பல்வகை அலங்கரிப்புகள் இடம்பெறும் தளவாய் கிராமத்தில் இக்கோவிலில் இவ்வாறு பலதரப்பட்ட அலங்கரிப்பு இடம்பெறுவது வழக்கம் இக்கிராமத்தில் இவ்வாலயத்தில் மட்டும் இருப்பது சிறப்பும் ஆகும். ஆலய திருக்கதவு திறக்கப்படும் இரவு ஆலயத்தில் காணப்படும் அனைத்துப் பொருட்களையும் அதாவது தெய்வ வடிவங்களை தெய்வமாட பயன்படும் சிலம்பு போன்ற பொருட்களையும் தீபம் ஏற்றப் பயன்படும் பொருட்களையும் ஏனைய சகல பொருட்களையும் ஆலய முன்றலில் கீழே சீலை அல்லது ஓலைப்பாய் விரித்து அனைத்து பொருட்களையும் அதில் வைத்து அதற்கு கும்பமிட்டு பூஜை செய்து தீபாராதனை காட்டி மற்றும் இங்கு காணப்படும் கொட்டுக்கும் சிறப்பு பூஜை செய்து கொட்டு முழக்கத்துடன் சிலம்போசையுடனும் பனை ஓலை குருத்து மாலை உடை அணிந்து மஞ்சள் உடல் பூராகவும் பூசியவாறும் அழகிய பூக்கள் கொண்ட வண்ணத் துணி துண்டு கொண்டு இறைவனை வணங்கி முதலில் அங்கு காணப்படும் அனைத்துப் பொருட்களையும் வழங்கி பெரியார்களை, உத்தியாக்களையும் வணங்கி தெய்வம் ஆடி திருக்கதவு இரவில் திறக்கப்படும்.

பின் விடிந்தவுடன் அன்றே முதலாம் நாள் சடங்கு இடம்பெறும். ஒரு நாள் சடங்கில் காலை, மாலை, இரவு என சடங்குகள் நடைபெறும். காலை 8 மணியளவில் காலை சடங்கும் மாலை 3 மணியளவில் மாலை சடங்கும் இரவு 11 மணிக்கு இரவுச் சடங்கு நடைபெறும். இவ்வாறு ஐந்து நாட்களும் சடங்குகள் இடம் பெறும்.

முதலாவதாக குமாரருக்கு பூஜை செய்து பின் விநாயகருக்கு பூஜை செய்து சடங்கு ஆரம்பமாகும். பின் முதலாவது தெய்வ மாட்டுவதற்கு வேர்ல்டு வர் வழிபாட்டில் உத்தியாக எனப்படும் சமூகத்தின் மூத்த குடிகள் அதாவது பித்ருக்களை நினைத்து அவர்களை குருவாக பாவித்து வந்து சடங்கினை நடத்தித் தருமாறும் தெய்வம் ஆட்டுவதற்கு துணைபுரியும் படியும் வேண்டிக் கொள்வதோடு அவர்களையே முதற்கடவுளாக தெய்வம் ஆட்டுவார்கள். இவர்கள் அதாவது உத்திகள் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் காணப்படுகின்றனர் இவர்களை ஒவ்வொரு தெய்வம் ஆடுவதற்கும் அழைத்து தெய்வம் ஆட்டுவர்.

தெய்வமாட்டும் முறைகள்

முதல் தெய்வமாக சடங்கில் ஆட்டப்படும் தெய்வம் குமாரர் ஆகும். இதனை வெறியாடுவது என்றும் அழைப்பதுண்டு இருப்பினும் உத்தியாகள் எனப்படும் இறந்த ஆத்மாக்களை அதன் முன்னரே ஆட்டப்படும் எனவே இங்கு முதல் ஆடப்படுவது உத்தியாக்களாகும். உத்தியாக்களை ஆட்டுவிக்கும் போது பாடப்படும் பாடல் பின்வருமாறு அமையும்,

தா…
பொடியப்பா கமுவல்லோ பனவல்லோ
பனவள பட்டியமல்லோ….
ஏகமந்திரியாயி…
நாதோ… நக்கமனாயி….
வில்லன் பாணன் வில்லன் பாணன்
தும்பிட்டா பயப்பிட்டா
ஏகமந்திரியாயி…
நாதோ… நக்கமனாயி….

தா…
பொடியப்பா கமுவல்லோ பனவல்லோ
பனவள பட்டியமல்லோ….
ஏகமந்திரியாயி…
நாதோ… நக்கமனாயி….
ஒந்த தோப்பி தோப்பாரங் பொடிமந்தம்
கமளபட்டியமல்லோ…..
ஏகமந்திரியாயி…
நாதோ… நக்கமனாயி….

தா…
பொடியப்பா கமுவல்லோ பனவல்லோ
பனவள பட்டியமல்லோ….
ஏகமந்திரியாயி…
நாதோ… நக்கமனாயி….
வில்லன் பாணன் வில்லன் பாணன்
தும்பிட்டா பயப்பிட்டா
ஏகமந்திரியாயி…
நாதோ… நக்கமனாயி….

தனமோ காமனாயி….
ராஜல்லா பத்துவி….
கங்கப்புறா கங்கப்புறே பத்துராயி…
எல்புறா எல்பிட்ட பத்துராயி…
அட்டநுறு வேலத்துமா தம்நுறு வேலத்துமா
மானுறு வேலத்துமா…
மாப்புணர் மாமி
தினதிந்தின்னா…. தினதிந்தின்னா….
தினதிந்தின்னா…. தினன்னா….

அட்டநுறு வேலத்துமா தம்நுறு வேலத்துமா
மானுறு வேலத்துமா…
மாப்புணர் மாமி
தினதிந்தின்னா…. தினதிந்தின்னா….
தினதிந்தின்னா…. தினன்னா….

இவ்வாறு உத்திகளை வணங்கி அவர்களை ஆட்டுவித்து அதன்பின் குமாரர் ஆட்டுவிக்கப்படும். குமார தெய்வத்திற்குரிய பாடல் பின்வருமாறு அமையும்.

ஈந்தாங்கா… பெடோனா…
ஏகாமோ….ஓஓஓஓ
வலப்பூ கணல் செம்பக்கநாச்ச்சி வலோஒனா…
தான… தன தந்தோ…
தான தன தந்தானாயி….

ஈந்தாங்கா… பெடோனா…
ஏகாமோ….ஓஓஓஓ கனபூச்ச்சி குமார…
தெய்யோனா….
தான… தன தந்தோ…
தான தன தந்தானாயி….

ஈந்தாங்கா… பெடோனா…
ஏகாமோ….ஓஓஓஓ
வலப்பூ கணல் செம்பக்கநாச்ச்சிலாரோ ஒனா…
தான… தன தந்தோ…
தான தன தந்தானாயி….

ஈந்தாங்கா… பெடோனா…
ஏகாமோ….ஓஓஓஓ மோவூட்டு கன
ஏத்தாப்பு குமார தெய்யோனா….
தான… தன தந்தோ…
தான தன தந்தானாயி….

இவ்வாறு இப்பாடலைப் பாடி குமார தெய்வம் ஆட்டப்படும். இதன்போது தெய்வம் ஆடுபவர் சிலம்பு அணிந்து மஞ்சள் பூசி காணப்படுவார். கையில் வில் அம்பு கொண்டு ஆடுவார். இவ்வாறு குமார தெய்வம் ஆட்டப்படும். இதன் பின் பத்தினி தெய்வம் ஆட்டப்படும். இதற்குரிய பாடல் பின்வருமாறு அமையும்,

அம்மா ஈரங்கி…. பத்தனி….
அம்மா முத்துதோ…. பத்தினித்தானே அம்மா
வெள்ளிமா மடையிருந்து வந்தாவாம் பத்தினி
அம்மா நிறைகுட பத்தினித்தானே….
அம்மா முத்து பத்தினி….
அம்மா ,லங்கே பத்தினித்தானே அம்மா….
தாளம்பூ பத்தினி….
தாளம்பூப் பட்டுடுத்தா…ள் பத்தினித்தானே…
மகிளம்பூ பத்தினி… ஓஓஓ… அம்மா….
மகிளம்பூ பட்டுடுத்தாள் பத்தினித்தானே…
அம்மா….
தஞ்சா பத்தினி…
தஞ்சாவூரிலிருந்து வந்தாவாம் பத்தினி
சிங்கார பத்தினி… ஓஓஓஓ…
சிங்காரமுத்துப் பத்தினித்தானே

இவ்வாறு இப்பாடலைப் பாடி பத்தினி தெய்வம் ஆடப்படும். இதன் போது தலையில் துணி அதாவது மொக்காடு கட்டிக்கொண்டு சிலம்பணிந்து மஞ்சள் உடல் பூராகவும் பூசிக்கொண்டு வேப்பிலை இரு கைகளால் பிடித்துக் கொண்டு ஆடப்படும். மேலும் நிறைகுடம் வைத்து அதனுடன் வேப்பிலை கொத்தாக வைத்து பத்தனி தெய்வம் ஆடப்படும். இதன்பின் பத்தினித் தெய்வத்தின் கன்னித் தெய்வங்கள் எனப்படும் தெய்வங்கள் ஆடப்படும் இவை சிலம்பணிந்து வேப்பிலை கொண்டு ஆடப்படும் இவற்றின் பாடல் பின்வருமாறு அமையும்.

ஓஓஓ…… ஆஆஆ…. ஈஈஈஈ…..
நல்லமாமாங்க பொய்கைகள் தீத்தங்களாடிவரும் கன்னிகளோ…
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ….
ஓஓஓ…… ஆஆஆ…. ஈஈஈஈ…..
பாலும் பழமும் நல்லபஞ்சாமிர்த கன்னிகளோ…
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ….
ஓஓஓ…… ஆஆஆ…. ஈஈஈஈ…..
நல்ல செல்ல கன்னிகளோ…
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ….
ஓஓஓ…… ஆஆஆ…. ஈஈஈஈ…..
நல்ல நெல்விளையும் கதிர்விளையும்
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ….
ஓஓஓ…… ஆஆஆ…. ஈஈஈஈ…..
நல்லமாமாங்க பொய்கைகள் தீத்தங்களாடிவரும் கன்னிகளோ…
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ….
ஓஓஓ…… ஆஆஆ…. ஈஈஈஈ…..
பாலும் பழமும் நல்லபஞ்சாமிர்த கன்னிகளோ…
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ….

இவ்வாறு பத்தினி தெய்வத்தின் கன்னி தெய்வங்கள் ஆட்டப்பட்டதன்பின் வீரவள் தெய்வம் ஆடப்படும் இவர் கோவக்காரி ஆகவும் சாட்டையுடனும் ஆடுவதாகவும் வீரவள் தெய்வம் காணப்படுகின்றது. இதனுடன் இணைந்து நாககன்னியும் பெறும் இருப்பினும் நாக கன்னி தெய்வம் காட்டப்படுவதில்லை இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

ஓஓஓ…… ஆஆஆ…. ஈஈஈஈ…..
நல்ல நாக கன்னிகளோ
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ…
ஓஓஓ…… ஆஆஆ…. ஈஈஈஈ…..
நல்ல நாக கன்னிகளோ
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ….
ஓஓஓ…… ஆஆஆ…. ஈஈஈஈ…..
நல்ல அக்கினி வீரவளோ
அகோர வீரவளோ
பூ வீரவளோ
செல்ல வீரவளோ
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ….
நல்ல பொன்னான சாட்டையெடுத்து
ஓடி விளையாடி வருவாயோ…
ஓஓஓ…. அம்மா… ஈஈஈ….

இவ்வாறு வீரவள் தெய்வம் ஆட்டப்படும் இருந்தும் தளவாய் குமாரர் ஆலயத்தில் தற்காலத்தில் ஒரு வீரவள் தெய்வம் மாத்திரமே ஆட்டப்படுகின்றது. இதன்பின் செம்பநாச்சி தெய்வம் ஆடப்படும். இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

சங்கடவே சங்கடவே கடவத்தே விடநூறே
தாப்பாலே வெள்ளங்கிரி வாடி ஆயி….
அம்மா மாமடந்தாயோ….. ஓஓஓ… செம்கவெண்ணிச்சிம்மா…
குகனி வாடியோ… ஓஓஓ… செம்கவெண்ணிச்சி
அம்மா அக்கினிக் கொடி…. ஈஈஈ.. செம்கவெண்ணிச்சிம்மா…
சங்கடவே சங்கடவே கடவத்தே விடநூறே
தாப்பாலே வெள்ளங்கிரி வாடி ஆயி….
அம்மா மாமடந்தாயோ….. ஓஓஓ… செம்கவெண்ணிச்சிம்மா…
குகனி வாடி ஆயி… செம்கவெண்ணிச்சி ஈஈஈ…..
சங்கடவே சங்கடவே கடவத்தே விடநூறே
தாப்பாலே வெள்ளங்கிரி வாடி ஆயி….
அம்மா மாமடந்தாயோ….. ஓஓஓ… செம்கவெண்ணிச்சிம்மா…
அகனே குகனியோ… ஓஓஓ… செம்கவெண்ணிச்சிம்மா…

செம்பக்கநாச்சி தெய்வத்தின் காவல்காரனாக செம்பகக்கன்னி தெய்வம் காணப்படுகின்றது. இது தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு குறுத்து மாலை உடையாக அணிந்து கொண்டும் வரும். இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

மலையே மலையே மலப்புறாவையி…..
தோகே தோப்பாரங்கட்டியோ….. ஓஓஓ…
தோப்பார வன்னியாயி….
தோகே தோப்பாரங்கட்டியோ….. ஓஓஓ…
பறக்கும் பட்சியாரமோ….
மலையே மலையே மலப்புறாவையி…..
தோகே தோப்பாரங்கட்டியோ….. ஓஓஓ…
தோப்பார வன்னியாயி….
தோகே தோப்பாரங்கட்டியோ….. ஓஓஓ…
பறக்கும் பட்சியாரமோ….

இவ்வாறு செம்பகநாச்சி தெய்வம் ஆட்டப்படும். இதன்போது தெய்வம் ஆடுபவர் உடல் பூராகவும் மஞ்சள் பூசி சிலம்பணிந்து தென்னங்குருத்தில் செய்யப்பட்ட வளையங்கள் அதாவது குருத்து கட்டுதல் எனப்படும் குருத்து உடை அணிந்து செம்பகநாச்ச்சி தெய்வம் ஆட்டப்படும். இதன்போது செம்பக நாச்சி தெய்வம் இதன் மச்சான் எனப்படும் ஆண் தெய்வம் பின் இதன் காவகார தெய்வம் என்பன ஆடப்படும்.
இதன்பின் பாணங்காத்தான் எனப்படும் தெய்வம் ஆடப்படும்.
இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

பாணங்கா… ஆஆஆ….
அத்தோ மல்லினா
தும்பலியிலோ மங்மன்
பாணங்காப்பிலோ ஓஓஓ…
பாணங்கா… தும்பலியிலோ மங்மன்
பாணங்காப்பிலோ ஓஓஓ…
குறுனா ஆஆஆ…..
களவில்லா யில்லா என்னன்னா மாறா மாறாண்டி
மாப்புனி ஊக் ஓஓஓ….
குறுனா ஆஆஆ…..
களவில்லா யில்லா என்னன்னா மாறா மாறாண்டி
மாப்புனி ஊக் ஓஓஓ….

இதன் பின் பொள்ளுக்காரன் எனப்படும் தெய்வம் ஆடப்படும்.
இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

லாவன்ன காமோ.. ஓஓஓ…
பூநொச்சி முல்லாயிட்டு பொள்ளுக்காரலமாயி
ஊக் ஓஓஓ….
லாவன்ன காமோ.. ஓஓஓ…
பூநொச்சி முல்லாயிட்டு பொள்ளுக்காரலமாயி
ஊக் ஓஓஓ….
இதன் பின் இவரின் தம்பி என உணரப்படும் புள்ளிக்கரன் தெய்வம் ஆடப்படும். இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

லாவன்ன காமோ.. ஓஓஓ…
கைமினத்தோனாலாயிற்றோ… ஓஓஓ…
புள்ளிக்காரலமாயி…
லாவன்ன காமோ.. ஓஓஓ…
கைமினத்தோனாலாயிற்றோ… ஓஓஓ…
புள்ளிக்காரலமாயி…

பின்வருவன பாணங்கத்தனின் மறு தெய்வங்களாக கருதப்படுகின்றன.

மாத்தளையே…. ஏஏஏ… மணலூறாந் தும்பயிலிலோ
மங்கன் ஊக் ஓஓஓ…
மாத்தளையே…. ஏஏஏ… மணலூறாந் தும்பயிலிலோ
மங்கன் ஊக் ஓஓஓ…
பொள்ளளி மல்கடலா தும்பயிலிலோ
மங்கன் ஊக் ஓஓஓ…
பொள்ளளி மல்கடலா தும்பயிலிலோ
மங்கன் ஊக் ஓஓஓ…
கல்லலே கபாக்கடே கல்மோதியிலோ
மோப்பிலோ ஊக் ஓஓஓ…
கல்லலே கபாக்கடே கல்மோதியிலோ
மோப்பிலோ மங்கன் ஊக் ஓஓஓ…
கருந்தே முள்ளுவெட்டுவானோ லாவனக்காமோ
ஊக் ஓஓஓ….
கருந்தே முள்ளுவெட்டுவானோ லாவனக்காமோ
ஊக் ஓஓஓ….

கல்தாலாய் கல்பாராய்
கல்பாராய் மனமாண்ட
மனமாண்ட புள்ளிநாச்சி
அம்மாவும் வாராவடி
கல்தாலாய் கல்பாராய்
கல்பாராய் மனமாண்ட
மனமாண்ட புள்ளிநாச்சி

இவ்வாறு பாணங்கத்தான் புள்ளிக்காரன் பொள்ளுக்காரன் இன்னும் தெய்வங்கள் ஆட்டபடும். இதன் போது குருத்தோலை ஆடை அணிந்து பொள்ளு வைத்து ஆடப்படும். அதாவது பொள்ளு எனப்படுவது 1.5 அடி நீளமுள்ள ஒரு கம்புத்துண்டு இது கருங்காலி மரத்தில் இருந்து வெட்டப்பட்ட துண்டாக காணப்படும். இதன்பின் வண்ணப் பூக்கள் நிறைந்த துணி துண்டு ஒன்றை சுமார் ஒரு மீட்டர் அளவுடைய துணியாக காணப்படும் துணி துண்டு ஒன்றை இரு முனைகளிலும் இரு கைகளால் ஒன்றையொன்று பிடித்துக் கொண்டு அதை வைத்து தெய்வம் ஆடப்படும். எவ்வாறு பாணங்கத்தான் அதனுடன் இணைந்த தெய்வங்களும் ஆட்டுவிக்கப்படும்.

இதன்பின் மாறா எனப்படும் தெய்வம் ஆடப்படும். இத்தெய்வம் தேன் எடுக்கும் தெய்வம் என உணரப்படுகின்றது. இதுவே இங்கு சிறப்பானதாகும். இதன் பாடல் பின்வருமாறு அமையும்.
மாறா மாறாண்டி
சூறா மாறாண்டி
விடியம்புலி மாறா
கித்துள் மாறா
எழுந்திரு……
மல்மாறாயி மாறா ஈஈஈ…
தேன்பூச்சோ…. ஓஓஓ… மல்மாறாயி…
தோராண்டி மாறாயி மாறாயி… ஈஈஈ…
மாறா மாறாண்டி
சூறா மாறாண்டி
விடியம்புலி மாறா
கித்துள் மாறா
எழுந்திரு……
மல்மாறாயி மாறா ஈஈஈ…
தேன்பூச்சோ…. ஓஓஓ… மல்மாறாயி…
தோராண்டி மாறாயி மாறாயி… ஈஈஈ…

மாறா தெய்வத்தின் பாடல் இவ்வாறு அமையும். மாறா தெய்வம் சடங்கில் முதல் தொடக்கம் முடியும் வரை தினமும் எடுக்கும் ஒரு தெய்வம் ஆகும். இதுவே குமாரர் வழிபாட்டில் மிக சிறப்புக்குரிய தெய்வமாகும். தோரணை மரம் ஏறுதல் எனும் சடங்கு குமாரர் வழிபாட்டில் தளவாய் கிராமத்தில் மாத்திரமே உள்ளது. மிகவும் உயரமான மரங்களை ஏணி போல் கட்டி நடுவில் ஒரு மரம் வைத்து கட்டப்படும் பெரிய ஏணி போன்றது தோரணை மரம் ஆகும். அதாவது மூன்று மிகவும் உயரமான மரங்களை பட்டைகளை உரித்து கட்டி இடையே குறுக்காக கம்புகளை கட்டி மிகவும் உயரமான ஏணி போல் நாட்டப்பட்டிருக்கும் மரமே தோரணை மரம் ஆகும். தோரணை மரம் நடுவதற்கான இடத்தை தெரிவுசெய்வது சடங்கின் மூன்றாம் நாளில் இடம் பெறும். இதன்பின் நான்காம் நாள் மாலையில் ஊரில் உள்ள ஆண் அடியார்களின் துணையுடன் தோரணை மரம் நடப்படும். தோரணை மரம் நடும் சடங்கும் மிகவும் சிறப்பாக நடைபெறும் இறுதி நாளில் தோரணை மரம் ஏறும் சடங்கு இடம்பெறும் இதன்போது மாறாத் தெய்வம் மிகவும் சிறப்படைகிறது.

இதன்போது தேன்பூச்சிகளில் தேன் எடுக்கும் வேடுவர் குல சிறப்பு மரபு சடங்கு இடம்பெறும் பூக்கள் நிறைந்த சோலையில் தேன் பூச்சிகள் தேனை பாதுகாத்து வைத்து வரும் வேளையில் மாறா தெய்வம் அதனை எடுப்பதாக அது அமையும். இதை சடங்கின்போது செய்கையில், தேன் எடுத்து பூச்சிகளுடன் அதை பனையோலைப் பெட்டியில் அடைத்து வைத்து அதை மாறா தெய்வம் தோரண மரத்தின் உச்சியில் கொண்டு சென்று வைத்து அடர்ந்த பூக்கள் நிறைந்த காட்டுக்குள் மர உச்சியில் தேன் எடுப்பதாக பாவனை செய்து பெட்டியில் இருக்கும் தேன் கூட்டைத் திறந்து தேன் பூச்சிகளை பறக்க வைத்து தேனை எடுப்பதாக தெய்வம் ஆட்டப்படும்.

மேலும் தேன் எடுத்த பின்பு தெய்வம் அடர்ந்த காட்டில் தேன் பூச்சிகளுக்கு மறைந்து ஒளிந்து மரங்களுக்கிடையில் சிறு மர பற்களுக்கிடையில் ஒளிந்து கொண்டு வருவதை தோரணை மரணத்தின் ஏணி போல் குறுக்காக கட்டியிருக்கும் இடைவெளிகளில் தெய்வம் ஏறி கடந்து வருவதாகவும் மாறா தெய்வம் ஆட்டப்படும். இறுதியில் தோரண மரத்தின் இருந்து தேன் பூச்சிகளின் கடியால் தாங்கிக்கொள்ள முடியாது மணலில் சுருண்டு விழுவார். இவ்வாறு இறுதி நாளில் மாறா தெய்வம் தோரணம் ஏறுதலுடன் தெய்வமாட்டப்படும் இதன்போது ஏனைய தெய்வங்கள் புள்ளிக்கரன் செண்பகநாச்சி போன்ற தெய்வங்களும் ஆடப்படும்.

இவ்வாறு மாறா தெய்வம் ஆட்ட படுவதுடன் தோரணை மரம் ஏறும் சிறப்பும் இடம்பெறும். இதன் பின் மாநீலீ அம்மன் தெய்வம் ஆட்டப்படும் இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

ஆந்தராந்தமாட்டறங்ஙா ஆஆஆ…
மாநீலீ மாச்சிவெளிட்டமோ அம்மா துவாங்கெலி
அம்மா மாயி….
அம்மா கெலிமோ கெலி ஆஆஆ… துவாங்கெலி
அம்மா மாயி….
ஆயித்தியப்பட்டுமலாக்குமாங்ஙா ஆஆஆ….
ஆயித்தியப்பட்டுமலாக்குமோ அம்மா
ஆயித்தியப் பொட்டோ அம்மா மாயி…
அம்மா குருவிப்பட்டுமலாக்குமாங்ஙா ஆஆஆ….
குருவிப்பட்டுமலாக்குமோ அம்மா
குருவி பொட்டோ அம்மா மாயி…
அம்மா ஒட்டிப்பொட்டுவராயன் பொட்டு
பாலையப்பொட்டோ ஆஆஆ….
வீனி வாச்சுவெலட்டுமோ அம்மா மாயி…
அம்மாளா தென்னோடி
அப்பாளா தென்னோடி
மரமா.. ஆஆஆ… மரமுந்தே…
மறனா மறாநாச்சி…
அடியதாளா வாவே அம்மா…
அம்மாளா தென்னோடி
அப்பாளா தென்னோடி
மரமா.. ஆஆஆ… மரமுந்தே…
மறனா மறாநாச்சி…
அடியதாளா வாவே அம்மா…

முதல் சாரதி பாடல்,
ஆச்சா…. ஆச்சக்குடு
தேச்சா…. தேச்சக்குடு
ஆச்சா ஆச்சக்குடு பட்ணமதோ… ஓஓஓ…
ஆச்சா…. ஆச்சக்குடு
தேச்சா…. தேச்சக்குடு
ஆச்சா ஆச்சக்குடு பட்ணமதோ… ஓஓஓ…

இதன் உத்தியாக்களின் பாடல்,
இந்தா… பொடியப்பா
தோகே தோப்பாரம் பொடியோ பொடிமந்தன்
இன்னா இன்னன்னா
இந்தா… பொடியப்பா
தோகே தோப்பாரம் பொடியோ பொடிமந்தன்
இன்னா இன்னன்னா

அடுத்த சாரதிகள்,
இராஜிக்கு ராஜா இராஜ பணிக்கா
இராஜிக்கு ராஜா இராஜ பணிக்கா
தோகே தோப்பாரம் பொடியோ பொடிமந்தன்
ஈக்கொடி பட்டிணமோ
பவளக்கொடி பட்டிணமோ
தென்னப் பட்டிணமதோ….
இராஜிக்கு ராஜா இராஜ பணிக்கா
இராஜிக்கு ராஜா இராஜ பணிக்கா
தோகே தோப்பாரம் பொடியோ பொடிமந்தன்
ஈக்கொடி பட்டிணமோ
பவளக்கொடி பட்டிணமோ
தென்னப் பட்டிணமதோ….

கடல்வழி சாரதிகளாக பின்வருவோருக்கு உரிய பாடல் அமைகிறது.

காலியா கொழும்பா மின்னேரியா மின்னேரிப்பட்டிணமதோ…
காலியா கொழும்பா மின்னேரியா மின்னேரிப்பட்டிணமதோ…
காலியா கொழும்பா மின்னேரியா மின்னேரிப்பட்டிணமதோ…
காலியா கொழும்பா மின்னேரியா மின்னேரிப்பட்டிணமதோ…

இவ்வாறு மாநீலீ தெய்வம் ஆட்டப்படும்.

இத்தெய்வத்தினை குடாநீலீநாச்சி, கடற்பகுதி என்றும் அழைப்பர். இத்தெய்வம் ஆடும்போது குருத்தோலை அணிந்து ஆடுவதுடன் இதன் பந்தல் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் அதாவது பள்ளக்கரையிலே அமையப் பெற்றிருக்கும். மேலும் இத் தெய்வம் வில் அம்பு எய்யும் தெய்வமாகவும் காணப்படும். இதில் எல்லா தெய்வங்களும் பல பிரதேசங்களில் இருந்து வருவதாகவும் அவர்களை சாரதிமார் ஏற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதில் முதல் ஒரு சாரதிக்கும் பின் இதன் உத்தியாக்ளுக்கும் பின் சாதிகளுக்கும் மாநீலீக்கும் தெய்வம் ஆட்டுவித்து பாடல் வரிசைக் கிரமப்படி பாடப்படும். இதன்பின் கரடி தெய்வம் ஆட்டம் இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

கல்போ விதனம்மாயி… ஈஈஈ…
கல்வன்னி விதனம்மாயி… ஈஈஈ…
கல்போடி கல்வன்னி
கல்வன்னியே விதனம்மாயி
இரணியனோ பற்றுவளாயி…
கல்போ விதனம்மாயி… ஈஈஈ…
கல்வன்னி விதனம்மாயி… ஈஈஈ…
கல்போடி கல்வன்னி
கல்வன்னியே விதனம்மாயி
இரணியனோ பற்றுவளாயி…

இத்தெய்வம் ஆடும்போது குறுத்து மாலை அணிந்து கரடி உருவம் அமைக்கப் பட்டிருக்கும் அதன் மேல் தெய்வமாவர் இருந்து தெய்வம் ஆடுவார். முதலாவதாக தெய்வம் ஆடிவரும் பின் கரடி எங்கு உள்ளது என்று தேடி அதைப் பிடித்து அதன் மேல் அமர்ந்து அதற்கு பழம் கொடுத்து நீர் கொடுத்து பின் அதன் மேல் இருந்து தெய்வம் ஆடும். மேலும் இத்தெய்வம் ஆட்டும் சடங்கு இறுதி நாளில் மாலையில் இடம்பெறும்.

“இரணியனோ பற்றுவளாயி” என்பது கரடியை பிடிப்பதை குறிக்கும் கிராமங்களில் மாலையில் இரணியை கொன்ற நேரம் இது என்றும் சொல்லும் வழக்கம் இதிலிருந்தே உருவானதாகவும் கூறப்படுகின்றது. தெய்வ நாச்சி அம்மன் கரடியை துரத்தி பிடிப்பதாக இதில் பாவனை செய்யப்பட்டு தெய்வம் ஆடப்படுகின்றது. மேலும் முன்னைய காலங்களில் கரடி தெய்வ உருவம் மரங்களில் வைக்கப்பட்டிருந்தது இதில் உடலும் காலும் செய்து நடப்பட்டிருக்கும் ஆனால் தற்காலங்களில் கல்லினால் சிலையாக கரடி வடிவமைக்க படுவதையும் நாம் காணலாம்.

இதன் பின் இந்திமால்நாச்சி எனப்படும் தெய்வம் ஆடப்படும். இதன் பாடல் பின்வருமாறு அமையும்.
இந்தீ… ஈஈஈ… நாங்காளே…
அந்தின்னா நாங்காளாடி
மூவிந்தி நாங்காளே
இந்திமால் நாச்சிதானோ
இந்தீ… ஈஈஈ… நாங்காளே…
அந்தின்னா நாங்காளாடி
மூவிந்தி நாங்காளே
இந்திமால் நாச்சிதானோ
இத்தெய்வமும் குருத்தோலை சிலம்பு அணிந்து ஆடப்படும் கையில் லேஞ்சு அதாவது துணித் துண்டு வைத்து ஆடும் இதற்கு ஈச்சம்பூ மிகவும் விருப்பமானதாக கருதப்படுகின்றது.

இதன் பின் நாமல் நாச்சி எனப்படும் தெய்வம் ஆடப்படும். தெய்வமும் இந்திமால்நாச்சி போன்றே ஆடும் இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

நாமால் நாமாளோ
நாமால் நாச்சிதானோ… ஓடிவாம்மாயி…
நாமால் நாமாளோ
நாமால் நாச்சிதானோ… ஓடிவாம்மாயி…
வூமால் வூமாலோடி
வூமால் நாச்சிதானோ… ஓடிவாம்மாயி…
இதன்பின் முத்துமல் நாச்சி தெய்வம் இதேபோன்று ஆட்டப்படும் இதன் பாடல் பின்வருமாறு அமையும்.
மல்பொட்டி பில்பொட்டி
முத்துமல் நாச்சிதானோ… ஓடிவாம்மாயி…
மல்பொட்டி பில்பொட்டி
முத்துமல் நாச்சிதானோ… ஓடிவாம்மாயி…

இதன்பின் நோருப்புக் கன்னிமார் என்ன படம் தெய்வங்கள் காட்டப்படும் கன்னிமார் என கூறப்படுகின்றது. இவர்கள் ஆடும் போது தலையில் துண்டு கட்டி தலப்பா அல்ல இது முக்காடு எனக் கூறப்படும் துண்டு கட்டி வேப்பிலை கொத்தாக கையில் வைத்துக்கொண்டு நோருப்புக் கன்னிமார் ஆடுவர். இவற்றின் பாடல் பின்வருமாறு அமையும்.
வீரகோவிலோ வில்லம்புச் சோலை தானோ…
யோகு யோகு வீ… யோகு யோகு வீ…
காளுட்டக்களுவி களுவண்டு இராசாம்மாயி….
சூதுட்டசுதுவி சூதுவண்டு இராசாம்மாயி….
செப்பக்கன்னியோ செப்பம்பூச் சோலை தானோ…
யோகு யோகு வீ… யோகு யோகு வீ…
காளுட்டக்களுவி களுவண்டு இராசாம்மாயி….
சூதுட்டசுதுவி சூதுவண்டு இராசாம்மாயி….
ஆரகன்னியோ ஆரம்பூச் சோலை தானோ…
யோகு யோகு வீ… யோகு யோகு வீ…
காளுட்டக்களுவி களுவண்டு இராசாம்மாயி….
சூதுட்டசுதுவி சூதுவண்டு இராசாம்மாயி….
அத்திக்கன்னியோ அத்தீன்பூச் சோலை தானோ…
யோகு யோகு வீ… யோகு யோகு வீ…
காளுட்டக்களுவி களுவண்டு ,ராசாம்மாயி….
சூதுட்டசுதுவி சூதுவண்டு ,ராசாம்மாயி….
தீத்தக்கன்னியோ தீத்தம்பூச் சோலை தானோ…
யோகு யோகு வீ… யோகு யோகு வீ…
காளுட்டக்களுவி களுவண்டு இராசாம்மாயி….
சூதுட்டசுதுவி சூதுவண்டு இராசாம்மாயி….
சித்தக்கன்னியோ வித்தம்பூச் சோலை தானோ…
யோகு யோகு வீ… யோகு யோகு வீ…
காளுட்டக்களுவி களுவண்டு இராசாம்மாயி….
சூதுட்டசுதுவி சூதுவண்டு இராசாம்மாயி….

இவ்வாறு நோருப்புக் கன்னிமார் ஆடப்படும். இதன்பின் தெல்கிரி நாச்சி எனப்படும் தெய்வம் ஆடப்படும். வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் குமாரர் சடங்கில் 5 நாட்கள் உண்டு. இதில் எல்லா தெய்வங்களும் ஆடப்படும். இருந்தும் தெல்கிரி நாச்சி தெய்வம் வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே ஆட்டப்படும். இது நான்காம் நாள் இரவின் யாவரும் தூங்கியபின் யாருமற்று பந்தல் முற்றிலும் சேலையால் மறைக்க பட்டு தெய்வம் ஆட்டப்படும் இதன்போது குறிப்பிட்ட சிலரை தவிர வேறு யாரும் போவதற்கு தடை விடுவிக்கப்படும் இதற்கு காரணம் இறைவன் கோபித்து விடும் அல்லது பார்வை ஆகிவிடும் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளமை ஆகும். இத்தெய்வத்திற்கு அவியாக 3 பலகாரங்கள் மாத்திரமே வைக்கப்படும் அதைத் தவிர வேறு ஒன்றும் வைத்தால் தெய்வம் வர மாட்டாது எனவும் கூறப்படுகின்றது அம்மூன்றும் பலகாரங்களையும் அந்த பந்தலின் முன்னே மறைத்து அதை செய்து படைக்கப்பட்டு தெய்வம் ஆடப்படும் இதனால் இத்தெய்த்திற்கு பலகாரம் வடிக்கும் தெய்வம் எனவும் பெயருண்டு இதன் பாடல் பின்வருமாறு அமையும்.

சித்தாக் கொம்பு நாச்சாங்கோ
சித்தாக் கிண்ணற நாச்சாங்கோ
அம்மா வாராவு பொல்லோனி
அம்மா வாராவு பொல்லோனி
தெல்கிரி அம்மாவோடி
பொல்கிரி அம்மாவோடி
அம்மா வாராவு பொல்லோனி
கொத்தன கொத்தன வெட்டுன்னாடி
கொத்தன கொத்தன வெட்டுன்னாடி
அம்மா வாராவு பொல்லோனி
பொல்வோ பொல்லத்தா
தெல்போ தெல்லத்தாவலியே..
பொல்வோ பொல்லத்தா
தெல்போ தெல்லத்தாவலியே..
சடையா சடகஞ்சா
பறூ… பறுணி
சடையா சடகஞ்சா
பறூ… பறுணி
கப்புறாட்டக் கப்புறா… ஆஆஆ…
துக்குறாட்ட துக்குறா… ஆஆஆ…
ஆயி கப்புறா கப்புறாலே…
இவ்வாறு தெல்கிரிநாச்சி ஆடப்படும்.

இதன்பின் பணிக்கன் தெய்வம் ஆடப்படும். பணிக்கன் எனப்படுவது யானை பிடிக்கும் யானை பாகனை குறிப்பதாக அமைகிறது இதன்போது பணிக்கன் தெய்வம் கோடாரி அங்குசம் கயிறு போன்றன வைத்து தெய்வம் ஆடும் பந்தலின் பின் ஒளிந்து நின்று யானையை தோசைக்கு ஒப்பாத ஒலிக்கப்படும் யானைக்கு பயப்படுவது போன்றும் பின் இறுதியில் யானையை பிடிப்பதைப் போன்றும் பணிக்கன் தெய்வம் ஆட்டபடும். இதை சகலரும் அவாவுடன் பார்ப்பார்கள் இதன் பாடல் பின்வருமாறு அமையும்.
அல்லே… தளவாயோ அளியா…
அன்னாயி…
புடியடா பணிக்கா புடியடா
அல்லே… தளவாயோ அளியா…
அன்னாயி…
புடியடா பணிக்கா புடியடா
இவ்வாறு பணிக்கன் தெய்வம் பாடல் பாடப்பட்டு ஆடப்படும். கொழும்பு குமாரர் தெய்வம் ஆடுவதற்கு முன் பணிக்கம் தெய்வத்திடம் அல்லையில் அதாவது வரும் வழியில் யானை உள்ளது அதனை பிடித்து கட்டி வை நான் வர வேண்டும் என்பதற்கு இணங்க பணிக்கன் தெய்வம் யானை இணை பிடிப்பதாக கூறப்படுகின்றது இதன்பின் கொழும்பு குமார தெய்வம் ஆட்டப்படும்.

கொழும்பு குமாரர் எனப்படும் தெய்வம் சற்று வித்தியாசமானதாக ஆட்டப்படும் அதாவது தெய்வம் ஆடும்போது பூத்துணி வேட்டியாக அணிந்து மேலே மேலாடையாக மேற்சட்டை அதாவது சேட் அணிந்து தலைப்பாகை கட்டி வாசனைத் திரவியம் பூசி ஆட்டப்படும். இத்தெய்வம் ஏனைய தெய்வங்கள் திருப்திகரமாக உள்ளதா எனவும் குறைகள் பிழைகள் ஏதும் உள்ளதா எனவும் கூறி செல்லும் தெய்வமாக காணப்படும். இதன் பாடல் பின்வருமாறு அமையும்.
காலி கொழும்ப கொழும்ப குமாரர்
குமார இராஜனே இராஜனே
காலி கொழும்ப கொழும்ப குமாரகுரு
தட்சம் புரிந்ததோ ஐயனே ஐயனே
காலி கொழும்ப கொழும்ப குமாரர்
குமார இராஜனே இராஜனே
காலி கொழும்ப கொழும்ப குமாரகுரு
தட்சம் புரிந்ததோ ஐயனே ஐயனே
இவ்வாறு பாடி கொழும்பு குமார தெய்வத்தினை ஆட்டி நடந்தவற்றைக் கூறி அடுத்த ஆண்டில் சிறப்பாக சடங்கு நடைபெறும் என்றும் கூறி ஐந்தாம் நாள் மாலையில் சடங்கு நிறைவு பெறும்.

நேர்த்திகள்
மேலும் இவ்வாறு தெய்வங்கள் ஆடப்படும். இதன் போதே பக்தர்களால் பல்வேறுபட்ட நேர்த்திக்கடன்கள் கொடுக்கப்படும் காவடி எடுத்தல் அதில் முற்காவடி, பால் காவடி என்றும் அங்கப்பிரதட்சணம் செய்தல் கற்பூர விளக்கு எடுத்தல் அதாவது தீச்சட்டி ஏந்துதல் மடப்பெட்டி கொடுத்தல் இதில் பழம், பாக்கு, வெற்றிலை, பூக்கள், நிறைந்த அழகிய துணி துண்டு, பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, பூ, தேங்காய் போன்றன காணப்படும் மேலும் ஆடு, கோழி, மாடு போன்றனவும் வில் அம்பு செய்து கொடுத்தல் என்பன இடம்பெறும்.
மேலும் பத்தினி தெய்வத்திற்கு கன்னிமார் நேர்த்தியும் செலுத்தப்படும் அதாவது சடங்கில் மூன்றாம் நாள் அன்று சிறுபிள்ளைகளை நேர்த்தியின் பிரகாரம் கன்னிமார் விடப்படும்.

இவர்கள் மீதமுள்ள இரு நாட்களும் கோவிலிலேயே தங்கி இருந்து பத்தினி தெய்வம் ஆடும்போது வட்டாவில் கற்பூர ஆரத்தி காட்டி வழிபட வேண்டும் இவர்கள் இறுதி நாளில் பத்தினித் தெய்வம் இறுதியாக ஆடிய பின் வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட நேத்திக்கடன் குமாரர் ஆலய சடங்கில் காணப்படுகின்றன. மேலும் நான்காம் நாள் இரவு மேடையிட்டு கலை நிகழ்வுகளும் இடம் பெறுவது வழக்கம். முன்னைய காலங்களில் தளவாயில் கூத்து இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் ஐந்தாம் நாள் காலையில் அன்னதானமும் கொடுக்கப்படும்.

பூச்சடங்கு

மேலும் ஐந்தாம் நாள் சடங்கு முடிந்தவுடன் தோரணமரம் கட்டிய படியே காணப்படும் சடங்கு நிறைவுற்று மூன்று நாட்களின் பின் பூச்சடங்கு வைக்கப்படும் அப்போது குமாரர் மற்றும் மாறா ஆகிய தெய்வங்கள் ஆட்டுவிக்கப்படும் இதில் மாறா தெய்வம் ஆடும் போது தோரணமரம் தரையிறக்கப்படும். பூச்சடங்கும் இடம் பெறும் வரையில் யாரும் கோவிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் காரணம் கடவுளர்கள் உலாவுவார்கள் என்றும் பார்வையாகிவிடும் என்றும் சொல்லப்படுகின்றது. அத்துடன் பிரசாதம் கொடுத்து பூச்சடங்கும் வருட சடங்கும் நிறைவு பெரும். இவ்வாறு தளவாய் குமாரர் கோவில் அதாவது குமாரத்தன் கோவில் சடங்கு நிறைவு பெறும்.
கி.விஜிதா,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More