இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

பழங்குடிகளும் மனிதர்களே ! இரா.சுலக்ஷனா..

உலகளவில், பரந்து விரிந்து வாழுகின்ற மரபுவழி மக்கள் அல்லது தொல்குடிமக்களை, அவர்களின் உரிமைகளை, பண்பாட்டு மரபுரிமைகளை பாதுகாக்கும் நோக்கமும், தேவையும், அவர்களின் பொருட்டு குரல் கொடுக்க வேண்டியத் தேவையையும் உலகின் பல்வேறு பாகங்களிலும், அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளும், இனசுத்திகரிப்பு நிகழ்வுகளும், வலிந்து மேற்கொள்ளப்படும் உரிமைமீறல்களும் வலுவாக உணர்த்தி விட்டிருக்கின்றன. இந்த அடிப்படையில், அவர்களின் பல்வேறு உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கோடு 1994 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் முன் மொழியப்பட்டு, 2007 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி உலக பழங்குடிமக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக மக்கள் சனத்தொகையில், 5 வீதமாக காணப்படும் பழங்குடிமக்கள் உலகளவில், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா ( அந்தமான் தீவுகள், நிகோபார் தீவுகள்) இலங்கை, இந்தோனேசியா, ஜப்பான், பிலிபைன்ஸ்தீவுகள், மலேசியா போன்ற இன்னபிற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தமிழகத்தைப் பொறுத்தவரை, அடியன், அரநாடன், இருளர், ஊராளி, எரவல்லன், கணியன், கம்மாரா, காட்டுநாயக்கன், காடர், காணிக்காரன், குடியர், குறிச்சன், கும்பர், குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பள்ளியன், பள்ளேயன், பளியர், பணியன், மகாமலசர், மலை அரையன், மலைக்குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலைவேடன், மன்னான், முதுவன், முடுகர் போன்ற 36 வகையான பழங்குடிமக்கள் வாழ்ந்துவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில், தளவாய், வாகரை, கொம்மாந்துரை, குஞ்சன்குளம், களுவன்கேணி, மஹியங்கனை, பலாங்கொடை, பிபிலை, சொரபொர, தபான, பதியன்தலாவ, மாஹாஓய, பொலேபெத்த, நில்கல, தரணிகல போன்ற பல்வேறு, பகுதிகளிலும் பழங்குடி மக்கள் செறிந்து வாழுகின்றனர். குறிப்பாக, இலங்கையில் வேடர் சமூகத்தினரையே பழங்குடிகள் என்ற வகையீட்டுக்குள் வைத்து நோக்குகின்றனர். இந்த அடிப்படையில் பழங்குடிகள் என்பவர், அவரவர்களின் சமுக அமைப்பை பொறுத்து, பழங்குடிகள் என்ற வகையீட்டுக்குள் உள்ளடக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, பொது சமூகத்திலிருந்து ( இன்றைய நவீனமயப்பட்ட சமுகத்திலிருந்து ) விலகி, வாழ்பவர்களாகவும், தமக்கே உரிய தனியான மொழி, சடங்குவழிபாடுகள், உணவுமுறைகள், தொழில்முறைகளை பேணுபவர்களாகவும், இயற்கையோடு ஒன்றித்து வாழ்கின்ற இயல்பொத்த வாழ்க்கையினை பேணுபவர்களாகவும் இவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். தன்சானியாவில், மாசாய் பழங்குடிமக்களும், ஆஸ்திரேலியாவில் அபார்ஜீன் பழங்குடி மக்களும் , கேமரூனில் பாக்கா பிக்மி பழங்குடி மக்களும், போட்ஸ்வானில் புஷ்மேன் பழங்குடிமக்களும் வரலாற்றில் அடையாளங் காணப்பட்ட பழங்குடி மக்கள் குழுமங்களாக விளங்குகின்றனர்.

இலங்கையின் வரலாற்றில், பழங்குடிகள் தொடர்பான செய்திகளை நோக்கும் போது, குவேனி – விஜயன் தொடர்பான வரலாற்றக்கதையோடு தொடர்புபடுத்தி நோக்கப்படுகிறது. சூளவம்சம், பொலன்னறுவை இராசதானி நிலவியகாலப் பகுதியில், பராக்கிரமபாகு மன்னனின் யுத்தப்படையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடுவர்களை இணைத்துக் கொண்டதாகவும், இவர்கள் யுத்தகளத்தில், அவர்களுக்கே உரிய ஆயுதங்களோடு போரிட்டதாகவும் குறிப்பிடுகிறது. பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிகாலத்தின் பின்னர், மகாவலிகங்கையை மறித்து வேடர்களை அணை கட்டுவதற்காக, தாதுசேன மன்னன் அழைத்ததான குறிப்புகளும் காணப்படுகின்றன. றொபட் நொக்ஸ் எழுதிய நூல் ஒன்றில், இரண்டாம் இராஜசிங்கன் காலத்தில் வாழ்ந்த வேடர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இலங்கையில் பல்வேறு காலப்பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் போதும் முக்கிய போராளிகளாக வேடுவர்கள் பங்குக் கொண்டமைக்கான குறிப்புகளும், வரலாற்றாதாரங்களும் காணப்படுகின்றன. 1925 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Wild Ceylon என்ற நூலிலும் இலங்கையின் பழங்குடிகள் தொடர்பான ஏராளமான தகவல்கள் காணப்படுகின்றன.

பொதுவான கண்ணோட்டத்தில், இலங்கையில் வேடர்கள், கிராமபுற வேடர்கள், கற்கால வேடர்கள், வேட்டை வேடர்கள் என்ற மூன்று வகையீட்டிலும், மற்றொருவகையில், வேடர்கள், கிராமபுற வேடர்கள், கடற்கரையோர வேடர்கள் என அவர்கள் வாழ்ந்த சூழலை அடிப்படையாகக் கொண்டும் வேறுப்படுத்தப்பட்டு நோக்கப்படுகின்றனர். இவைத்தவிர இன்னும் பிற வேடுவர் சமூகங்கள் பற்றிய குறிப்புகளை, பேராசிரியர். சி.பி. சொலிங்மன் குறிப்பிடுகிறார். இந்த அடிப்படையில், நோக்குகின்ற போது, வேடர்கள் அல்லது பழங்குடிகள் என்ற பதப்பிரயோகம் பகுப்பாய்வு சூழலிலேயே (Analytical Category) பயன்பாட்டிலுள்ளமையையும், அந்த அந்த குழுமங்களை குறிப்பதற்கான பிரத்தியேகமான பதபிரயோகங்கள் குறித்த சமூக சூழலில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமையையும் அவதானிக்கலாம். இதனடிப்படையில் இலங்கையில் வேடர் சமூகத்தினை குறிப்பதற்கு, குறித்த சமூக சூழலில், வனப்பயணி (வனச்சாரி), வனத்தில் நடமாடுபவர்( வனயே ஹெசிரெனா) போன்ற சொற்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன.

இயற்கையோடு இயைபொத்த வாழ்வினை கொண்டு நடத்தும் பழங்குடிமக்கள் தங்களுடைய உரிமமாகவும், நண்பராகவும் கருதுவது வனப்பகுதியே. எனினும், நகரமயமாக்கல் சூழல் என்பது இத்தகைய வனப்பகுதிகளிலிருந்து, திட்டமிட்ட அடிப்படையில், அவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை தந்திரோபாயமாகவும், உசிதமான முறையிலும் முன்னெடுத்தமையின் விளைவாக வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளும், பறவைகளும், மருத்துவ மூலிகைகளும் சூரையாடப்பட்டுவருவதுடன், வனப்பகுதிகளும் சேதமடையசெய்யப்படுகின்ற நிலமைகளை அவதானிக்கலாம்.

குறிப்பாக, உலகளவில், வேட்டை வேடர்களாகக் கருதப்படும் பாக்காபிக்மி மக்கள், தென்கிழக்கு கேமரூனில் தமது மூதாதையர் வாழ்ந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், குறித்த பகுதி தேசியப் பூங்காக்களாகவும், வேட்டைச் சுற்றுலாத்தளங்களாகவும் மாற்றப்பட்டதுடன், வேட்டைக்காரர்கள் என்ற அடிப்படையில் குறித்த பகுதியில் வாழ்ந்த மக்கள் ( பாக்கா பிக்மி மக்கள் ) வெளியேற்றப்பட்டு, பல்வேறு தாக்குதல்களுக்கும், சித்திரவதைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு, பலவேளைகளில் உயிர் இழப்புகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1974 இல் தான்சானியாவின் கோரோங்கோரோ கிரேட்டர் வனப்பகுதியிலிருந்து மாசாய் பழங்குடிகள் வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதியில் வனவிலங்கு வேட்டை அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக வனபாதுகாவலர்களாக, இயற்கையோடு நேசப்பூர்வமானவர்களாக இருந்த மக்கள் குழுமமும் அவர்கள் வாழ்ந்த சூழலும் சிதைக்கப்பட்டும், சூரையாடப்பட்டும் வருகின்றமையை அவதானிக்கலாம்.

இதேநேரம், உலகளவில், எல்லாவகையிலும் தனித்துவமான அடையாளங்களுக்கு சொந்தகாரர்களாக விளங்கும் பழங்குடி மக்களை பொறுத்தவரை, அவர்களின் மொழியும் தனித்துவமான அடையாளமாக விளங்குகின்றது. உலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள, ஏழாயிரம் மொழிகளில் பெரும்பாலான மொழிகள் பழங்குடிமக்களின் மொழிகள் எனவும், அடையாளங்காணப்பட்டிருக்கின்றது. எனினும், நடைமுறையில் இரண்டு வாரத்திற்கு ஒரு பழங்குடியின மொழி அழிந்து போவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுகிறது.

குறிப்பாக, பழங்குடியின மக்கள் மொழி என்பது பெரும்பாலும், ஒலி வடிவத்தை மாத்திரம் கொண்டு விளங்குகின்றமையின் காரணமாகவும், சடங்குகளோடு மாத்திரம் அவர்களின் மொழி மட்டிட்டு நிற்கின்றமையின் காரணமாகவும், சமகால சூழலில், நாகரீகமடைந்தவர்களாக தம்மை கருதிக்கொண்டு வாழும் மக்கள் குழுமம் தம்மை பூர்வீக குடிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளுவதன் மூலம் நிலவுரிமை கோறுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ளுவதற்காக, தாம் சார்ந்த மொழியை பயிற்றுவிப்பதும் நிகழ்கின்றமையின் காரணமாகவும் இத்தகைய அசாதாரண நிலமை ஏற்பட்டுள்ளது.

பழங்குடிமக்களை பொறுத்தவரை, தனித்துவமான வழிப்பாட்டு முறைகளை பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், பொதுவாக காடு, மழை, சூரியன் முதலிய இயற்கை பொருட்களையும், தமது மூதாதைகளையும் வழிபடும் வழக்கத்தினை கொண்டு காணப்படுகின்றனர். இலங்கையில் பழங்குடி மக்கள் மத்தியில் பின்பற்றப்படும், மூதாதைகளை வழிபடும் மரபு உத்தியாக்கள் வழிபாடு என்று அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் தோடர், கோத்தா ஆகிய பிரிவினர், எருமையை வழிப்படுகின்ற வழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு வகையிலும் தனித்துவமான அடையாளங்களோடு விளங்கும் மக்கள் சமுதாயத்தினரை, நாகரீகமடையாதவர், வேட்டைக்காரர்கள், காட்டுமிராண்டிகள் என்று வார்த்தை வன்முறையால், தண்டிப்பதும், திட்டமிட்ட அடிப்படையில், கொலை செய்வதும், வாழ்விடம் பறிப்பதும் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க குடியரசு செவ்விந்தியர்களின் இனசுத்திகரிப்பின் பின்னர் நிறுவப்பட்டமையும், அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யெமன் போன்ற நாடுகளில் பழங்குடிமக்கள் தாக்குதல்களுக்கு உட்பட்டு வருவதையும் எடுத்துக் காட்டலாம்.

இவையெல்லாம், பழங்குடிமக்கள் குழுமத்தினரை, மனிதர்களாக அங்கீகரித்துக் கொள்ளுவதன் தேவையையும், அவர்களின் தனித்துவங்களை பேணுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தலையும், தனித்துவங்களோடு வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதையும், அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சக மனிதர்களாக நாமும் குரல் கொடுக்க வேண்டியதன் தேவையையும், காலத்தின் கட்டாய தேவை என்ற அடிப்படையிலேயே, சமகால சமுதாயத்தினருக்கு உணர்த்தியிருக்கிறது.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்கப்பல்கலைகழகம்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap