இந்தியா பிரதான செய்திகள்

கருத்துச் சுதந்திரம் – நீதிமன்ற நியாயாதிக்கம் – இரண்டையும் உறுதிப்படுத்திய இந்திய உச்ச நீதிமன்றம்…

பிரசாந்த் பூஷண்
படக்குறிப்பு,மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுடன் ஒரு ரூபாய் நாணயத்துடன் பிரசாந்த் பூஷண்

பிரசாந்த் பூஷண்: ‘ஒரு ரூபாய் அபராதம்’- இந்திய உச்ச நீதிமன்ற தண்டனைக்கு பிறகு என்ன நடந்தது?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தண்டனை அபராத தொகையான ஒரு ரூபாயை உடனடியாக செலுத்தியிருக்கிறார். இந்த அபராதத் தொகையை செப்டம்பர் 15க்குள் அவர் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது மூன்று ஆண்டுகள் அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

கருத்துரிமை உள்ளது ஆனால் பிறரது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்று இன்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து இருக்கக்கூடாது நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பு நடத்த அனுமதி இல்லை என்றும் தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பு வெளிவந்தவுடன் உடனடியாக தமது வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஒரு ரூபாய் வழங்கியதாகவும் அதை தாம் ஏற்றுக் கொண்டதாகவும் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.

மேலும், டெல்லியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் பூஷண், “நீதிமன்றம் குற்றமாக கருதிய ஒரு விஷயம், என்னால் நீதித்துறைக்கு ஆற்ற வேண்டிய கடமையாக பார்க்கப்படும் விவகாரத்தில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரவும் எனக்கு உரிமை உண்டு. என்றாலும், மிகவும் மரியாதையுடன் தீர்ப்பை மதித்து அபராதத்தை செலுத்துவேன்” என்றார்.

எனது டிவிட்டர் பதிவுகள், உச்ச நீதிமன்றத்தையோ அதன் நீதிபதிகளையோ அவமதிப்பதாக கருதப்படத்கூடாது. அவை நீதித்துறை, உயரிய உச்ச நீதிமன்றத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்ற எனது உள்ளூர வேதனையின் வெளிப்பாடு. இது, கருத்துச் சுதந்திரத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது. நீதிமன்றம் பலவனம் அடைந்தால், அது குடியரசை பலவீனப்படுத்தும் என்று பிரசாந்த் பூஷண் கூறினார்.

நீதிமன்ற அவமதிப்பு

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷணை நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் குற்றவாளியாக ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிவித்தது.

இதையடுத்து நீதிபதிகள், தண்டனை விதிக்கப்படும் முன்பாக, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷண் தனது செயலுக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்வது குறித்து இரண்டு, மூன்று நாட்களில் முடிவெடுக்க அவகாசம் தருவதாக கூறியிருந்தனர்.

ஆனால் பிரசாந்த் பூஷண் தமது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் மனசாட்சிக்கு விரோதமாக மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்தார்.

என்ன நடந்தது, ஏன் இந்த வழக்கு?

பிரசாந்த் பூஷண்

கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், கடந்த ஜூன் 29-ஆம் தேதி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில் என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த டிவிட்டர் சர்ச்சை தகவல் தொடர்பாக பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பிரசாந்த் பூஷண்

முன்னதாக, ஜூன் 27-ஆம் தேதி “எதிர்கால வரலாற்றாய்வாளர்கள், கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறையான அவசரநிலை இல்லாமல் கூட இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டுவிட்டது என்பதைப் பார்க்கும்போது, அவர்கள் குறிப்பாக இந்த அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கை, மேலும் குறிப்பாக தலைமை நீதிபதிகளாக இருந்த நால்வரின் பங்கை பார்ப்பார்கள்” என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை டிவிட்டர் தகவல்கள் தொடர்பாக பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தமது டிவிட்டர் தகவல்கள் நியாயமானவை என்று கூறி, அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

தனக்கு எதிரான மனுவை, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் பட்டியலில் சேர்த்த உச்ச நீதிமன்ற செகரட்டரி ஜெனரலின் நடவடிக்கைக்கு எதிராக மற்றொரு மனுவையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி, தகுதி அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்த உச்ச நீதிமன்றம், தற்போது அவரது நடவடிக்கையைக் குற்றமாகக் கருதி அவரை குற்றவாளியாக அறிவித்திருக்கிறது.

இதற்கிடையே,சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் பதிவிட்டிருந்த டிவிட்டர் பதிவுகள் இரண்டும் தற்போது சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதால் டிவிட்டர் நிறுவனம் முடக்கியிருப்பதாகக் கூறியுள்ளது.

BBC – Tamil

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap