உலகம் பிரதான செய்திகள்

பிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்…

துருக்கிக்கான தமது நாட்டு உயர்ஸ்தானிகரை பிரான்ஸ் மீள அழைத்துள்ளது.

துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன், பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மெக்ரோனின் சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து அவருக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து மெக்ரோன் வௌியிட்ட கருத்தினால் சர்ச்சை உருவாகியுள்ளது.

மக்ரோன் மீது துருக்கி அதிபர் சீற்றம்! பிரெஞ்சுத் தயாரிப்புப் பொருள்களை புறக்கணிக்க அரபு நாடுகள் முஸ்தீபு!!

மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் பிரெஞ்சுப் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.


இஸ்லாம் தொடர்பாக அதிபர் மக்ரோன் வெளியிட்ட கூற்றுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே சில இஸ்லாமிய நாடுகளில் பிரெஞ்சுப்பொருள்களைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று ஏஎப்பி(AFP) செய்தி தெரிவிக்கிறது.
கட்டார் பல்கலைக்கழகம் தனது பிரான்ஸ் கலாச்சார வார நிகழ்வுகளை ஒத்திவைத்திருக்கிறது. குவைத் பயண முகவர்கள் பிரான்ஸுக்கான உல்லாசப் பயணச் சலுகைகளை நிறுத்தியிருக்கின்றனர்.

பிரெஞ்சு நாட்டு உற்பத்திப் பொருள்கள் பெரிய வணிக வளாகங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. வெண்ணெய்க் கட்டிகள், மற்றும் பிரான்ஸின் பிரபலமான பால்பொருள் உற்பத்திகள் அவற்றின் பெரு விநியோகஸ்தர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்று குவைத்தின் முக்கிய விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.


பாரிஸில் கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட புவியியல்-வரலாற்று ஆசிரியர் சாமுவல் பட்டியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய மக்ரோன், “பிரான்ஸ் தனது கேலிச்சித்திரங்களையும் ஓவியங்களையும் கைவிட்டுவிடமாட்டாது” என்று உறுதியளித்திருந்தார்.


முகமது நபியை இழிவுபடுத்தும் வகையிலானவை என்று குற்றம் சாட்டப்படும் “சார்ளி ஹெப்டோ” கேலிச் சித்திரங்களுக்கு ஆதரவாகவே அவர் அந்தக் கூற்றை வெளியிட்டிருக்கிறார் என்று முஸ்லிம் நாடுகள் சிலவற்றில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படையில் நபியை இழிவு படுத்தும் கேலிச்சித்திரங்களை தொடர்ந்து வெளியிடுவது “கண்மூடித்தனமானதும், இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தும் முயற்சிகளைத் தூண்டக்கூடியதுமாகும்” என்று ஜோர்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வெளியிடுவது இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை முஸ்லிம்கள் தொடர்பான மக்ரோனின் அணுகுமுறைகளை துருக்கிய அதிபர் Tayyip Erdogan கடுமையாகச் சாடியுள்ளார்.


“பல்வேறு மத சமூகங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்களை இவ்வாறு வழிநடத்தும் ஒரு தலைவரிடம் சொல்லக்கூடியது என்னவென்றால் முதலில் மனநலச் சிகிச்சைக்குச் செல்லுங்கள் என்பதுதான்” என்று மக்ரோனைக் குறிப்பிட்டு துருக்கிய அதிபர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.


துருக்கிய அதிபரது இந்த வார்த்தைப் பிரயோகம்” ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பிரெஞ்சு அதிபரின் மாளிகையில் இருந்து உடனடியாகவே கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஏஎப்பி செய்தி குறிப்பிட்டுள்ளது.


இஸ்லாமியப் பிரிவினைவாதத்தை ஒடுக்குவதற்காக பிரெஞ்சு அரசு அறிமுகப்படுத்த இருக்கும் சட்டங்கள் தொடர்பில் துருக்கி அதிபர் ஏற்கனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மத்தியதரைக்கடல் போர் பதற்றம், லிபியாவின் உள்நாட்டுக் குழப்பங்கள், ஆர்மீனியா, அஜர்பைஜான் போர் போன்ற விவகாரங்களில் துருக்கியுடனான பிரான்ஸின் உறவு பெரும் முறுகல் நிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Kumarathasan Karthigesu – FB.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link