Home இலக்கியம் கிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன்.

கிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன்.

by admin

ஆசிரியராக, கவிஞராக, கலைஞராக, ஆய்வறிவாளராக அடையாளங் காட்டும் கிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்.


பாரம்பரிய அறிவு முறைமைகள் மற்றும் பண்பாடுகள் சார்ந்தும் நவீன அறிவு முறை மற்றும் அதன் பண்பாடுகள் சார்ந்தும் ஆழமான புரிதலுடன் நம்மத்தியில் வாழ்ந்துவரும் மிகச்சில மூத்த தலைமுறையினருள் ஒருவராக மதிப்பிற்குரிய முதுபெரும் ஆசான் திரு.க.பரராஜசிங்கம் அவர்கள் விளங்கி வருகின்றார்.


பல்வேறு விடயங்கள் சார்ந்தும் அரிய தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கும் ஓர் அறிவுக் களஞ்சியமாக விளங்கும் இவர் ஒரு தகவல் வழங்கி மாத்திரமல்ல மாறாக தான் கூறும் தகவல்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னாலுள்ள வரலாற்றுப் பின்புலங்களை அதன் அரசியலை நன்குஉய்த்தறிந்து விபரிக்கும் ஆய்வறிவுத் தேடலுந் திறனும் நிரம்பிய மூத்த ஆய்வறிவாளராகவும் வாழுகின்றார்.
தனது 87 ஆவது வயதிலும் ஓர் இளைஞனைப்போல உற்சாகமாகவும் திடகாத்திரமாகவும் ஆக்கபூர்வமான ஆய்வறிவுத் தேடல்களைச் செய்பவராக, அவை குறித்து ஆழமாகக் கலந்துரையாடுபவராக இயங்கி வருகின்றார்.


வேத இலக்கியங்களை ஆழமாக வாசித்தவர், குறிப்பாக இருக்கு வேத சுலோகங்கள் தொடர்பாகவும் அவற்றின் உட்கருத்துக்கள் பற்றியும் விபரமாக எடுத்துக் காட்டத்தக்க அறிவாற்றல் நிரம்பிய, ஆரவாரமற்று வாழும் ஓர் அறிஞர் பெருமகன்.


ஓய்வுக் காலத்தில் பல வருடங்களாக பலநூறு ஆய்வுக் கட்டுரைகளையும் வேத இலக்கியங்களையும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் கற்று ஆராய்ந்து ‘சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்’எனும் ஆராய்ச்சி நூலை உருவாக்கி அதனை நமக்குப் பகிர்ந்துள்ளார். இந்த கனதியான ஆராய்ச்சி நூலை பிரபல்யமிக்க பதிப்பகங்களூடாக (உள்நாட்டு, வெளிநாட்டு) வெளிக்கொணரும் பொருளாதாரப் பலமுள்ள நிலையிலும் அந்நூலை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக மட்டுநகர் வணசிங்கா அச்சகத்திலிருந்து வெளிக்கொணர்ந்து உலகத்தரத்திலான உள்ளூர் நூல் வடிவமைப்புக்கும் வலுவாக்கத்திற்கும் பங்களித்திருக்கின்றார்.


இளமைக் காலம்


கிழக்கின் பண்டைய தமிழ் ஊர்களுள் ஒன்றான குறுமண்வெளியில் கணபதிப்பிள்ளை பிள்ளையம்மா தம்பதிகளுக்கு 1933 ஆகஸ்ட் 04 இல் குடும்பத்தின் நான்காவது மகனாக பரராஜசிங்கம் பிறந்தார்.மூன்று மூத்த சகோதரிகளுக்குத் தம்பியாகவும், மூன்று தங்கைகளுக்கும் ஒரு சகோதரனுக்கும் அண்ணாவாகவும் அழகான குடும்பத்தில் வாழ்ந்தார்.


குறுமண்வெளி மெதடிஸ்த மிசன் பாடசாலையில் ஆரம்பக்கல்வியைக் கற்று மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்து அரசாங்கத்தின் இலவசக் கல்வியைக் கற்பதற்கான புலமைப்பரிசில் பெற்றவர்.இவருடைய தந்தையார் மண்டூர் முருகன் கோவிலின் கணக்குப்பிள்ளையாகக் கடமையாற்றியவர். அனுபவம் வாய்ந்த விவசாயி,தனது மகன் தூரப்பிரதேசம் சென்று தங்கிப் படிப்பதை விரும்பாத தந்தையின் நடவடிக்கைகளால்காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்து கல்வி பெறும் வாய்ப்பைத் தவறவிட்டு ஊரிலேயே பாரம்பரிய விவசாயத்தையும் கற்று நவீன கல்வியையும் பெற்று வளர்ந்தார்.
பழுகாமம் வேல்முருகு வாத்தியாரின் உந்துதலாலும், தனது தாயாரின் ஆதரவாலும் ஊர்ப்பாடசாலையில் கற்று1950 களில் எஸ்.எஸ்.சி சித்தியடைந்தார். 1951 இல் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைத் தேர்வில் தேறி 1952 இல் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1953 இல் ஆசிரியராகத் தகுதி பெற்றவர். ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கவிஞர்களான நீலாவணன், தாமரைத்தீவான் முதலானோருடன் நட்புக்கொண்டு நவீன இலக்கியங்களை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கியவர். இக்காலத்தில் நாட்டுப்பாடல்கள் ஆக்குவதில் தேர்ச்சி பெற்றவரானார்.


ஆசிரியப்பணி


1955 இல் திகாரி, குருநாகல் நாகொல்லாகொட அரச பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலத்தில் தன்னுடன் கடமையாற்றிய சிறிசேன என்ற ஆசிரிய நண்பனின் தூண்டுதலால் ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்று 1957 இல் ஆங்கில மூலத்தில் எஸ்.எஸ்.சி பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்திபெற்றார். 1957 – 1959 வரை கண்டி பன்வில பாடசாலையில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தந்தையாரான கார்த்திகேசு வாத்தியார் தலைமையாசிரியராக கடமையாற்றிய காலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினார். இதனால் சிவத்தம்பி அவர்களுடன் நட்பும் தொடர்பும் இவருக்குக் கிடைத்தது கூடவே பேராசிரியர் க.கைலாசபதியும் நண்பனாகினார். இதனால் வார இறுதி நாடகளில் கா.சிவத்தம்பியுடன் நவீன ஆராய்ச்சிகள், இலக்கியம் தொடர்பாக கலந்துரையாடும் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.


மரபுக்கவிதை மற்றும் நாட்டுப் பாடலாக்கத்தில் ஈடுபடுவதற்கும் பாடசாலையில் நடனம், நாடகம், பாடல் நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்கும் இக்காலத்தில் சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன. வேடன் அனுமான் நடனம்,’பாரதியின் கனவு’ எனும் நாடகம் முதலியவற்றை பன்வில பாடசாலையில் எழுதித் தயாரித்துள்ளார்.
பின்னர் மண்டூர்-38ஆம்-கொலணி,ஈச்சிலம்பற்று, வாகரை-கண்டலடி, பால்சேனை, கருவேப்பன்கேணி, மட்டுநகர்-சென்மேரிஸ், தம்பிலுவில் மகா வித்தியாலயம் முதலியவற்றில் பதில் தலைமை ஆசிரியராகவும், ஆசிரியராகவும், கல்முனை கார்மேல் பற்றிமா, களுதாவளை மகா வித்தியாலயம், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், மட்-இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உயர்தர மாணவர்களுக்கு கலைப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் கடமையாற்றி1989 ஆம் ஆண்டு மகத்தான ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.


பல்கலைக்கழகக் கல்வி
1963 இல் மட்டுநகர் புனித மேரிஸ் பாடசாலையில் வணசிங்கா, இராசையா, மயில்வாகனம் முதலிய பெயர்பெற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து கடமையாற்றிய காலத்தில் கணபதிப்பிள்ளை வாத்தியாரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைப் பல்கலைக்கழக நுழைவுக்கான பரீட்சைக்குத் தோற்றி 1965 இல் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதி பெற்று கொழும்பு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களில் கலைத்துறையில் இளமாணிக் கற்கையினைப் பெற்றார். 1968 வரை பல்கலைக்கழகத்தில் கற்றார் இக்காலத்தில் பேராசிரியர்களான க.கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தன், வி.செல்வநாயகம், முத்துக்குமார், க.கைலாசபதி, அ.சண்முகதாஸ் ஆகியோரிடம் கற்றுள்ளார்.


தமிழில் ஆய்வுகளைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும், அயராத வாசிப்பு ஆர்வமும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கட்டுரை வகுப்புக்களில் பங்குகொண்டு விவாதித்த காலத்தில் கருக்கொண்டதாகக் கூறுகின்றார்.


1967,68 காலத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தனால் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட வாலிவதை வடமோடி நாடகத்திற்கான பயிற்றுவிப்பாளராக இவர் பங்குபற்றியுள்ளார். கூத்தின் ஆடல், பாடல் என்பவற்றில் இவரிடமிருந்த ஆற்றல்கள் காரணமாக பேராசிரியர் சு.வித்தியானந்தன் இவரை இனங்கண்டு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.


தினகரன் கவிதை விவாதத்தில்

1958 காலப்பகுதியில் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தினகரன் தேசிய பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றிய போது பாரதி பற்றிய கவிதைச் சமர் ஒன்று நடைபெற்றிருந்தது. அதில் ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர்களான தான்தோன்றிக் கவிராயர், முருகையன், பரமஹம்ஸதாசன், இராஜபாரதி, மஹாகவி, மு.பொ, நீலாவணன் ஆகியோர் விவாதம் புரிந்தனர் இவ்விவாதத்தில் கவிஞர் இராஜபாரதிக்கு பரராஜசிங்கம் எழுதிய நீண்ட கவிதையுடன் விவாதம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைலாசபதியுடனான தொடர்பும் நட்பும் அதிகரித்துள்ளது.

ஆய்வறிவுச் செயற்பாடுகள்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் நவீன ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் நெறி முறைகளைத் தெளிவாக விளங்கியதுடன் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டதாகக் கூறும் இவர். இந்த ஆர்வத்தினைச் செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் 1977 ஆம் ஆண்டு கல்வி டிப்ளோமா கற்கையினைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த போது இவருக்கு வாய்க்கப்பெற்றுள்ளது.அங்கு கற்பித்த ஆறுமுகம் எனும் விரிவுரையாளர் கிழக்கின் கல்வி குறித்து காத்திரமான ஆய்வின் தேவையினை வலியுறுத்திய போது,மண்டூரைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசேகரத்தின் மேற்பார்வையில்’மட்டக்களப்பின் கல்வி ஒரு வரலாற்றுப் பார்வை’ எனுந்தலைப்பில் தனது ஆய்வினை இவர் மேற்கொண்டார். மட்டக்களப்பில் கிறிஸ்தவ மிசனரிகள் வருமுன்னரான கல்வி நிலை, மிசனரிகள் வந்த பின்னரான நிலை என்ற வகையில் ஆய்வினைச் செய்துள்ளார்.


இந்த ஆய்வினூடாக மட்டக்களப்பின் நவீன கல்வி வளர்ச்சியில் நல்லையா மாஸ்டரின் காத்திரமான பங்களிப்புக்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.இத்துடன் இந்த ஆராய்ச்சியினூடாக மட்டக்களப்பில் வட இலங்கையிலிருந்து வருடாந்தம் கதிர்காம யாத்திரை செய்த சைவத் தமிழ் அறிஞர்களால் திண்ணைக்கல்விக்கான அடிப்படைகள் உருவாக்கப்பட்டதையும், அமெரிக்கன் சிலோன் மிசன் யாழ்ப்பாணத்தைப் போன்று மட்டக்களப்பில் நவீன கல்வியைப் பரவலாக்கஞ் செய்யாமைக்கான வரலாற்றுக் காரணிகளைக் கண்டறிய முடிந்ததாகவும் கூறுகின்றார்.

சிந்துவெளி நாகரிகமும் தமிழரும் எனும் ஆய்வு நூலின் ஆசிரியர்
திரு.க.பரராஜசிங்கம் அவர்களின் ஆராய்ச்சித் திறனை வெளிக்காட்டும் படைப்பாக ‘சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்’எனும் ஆராய்ச்சி நூல் விளங்குகின்றது. 406 பக்கங்களில் உயர்தரம்மிக்க நூலாக மட்டக்களப்பிலிருந்து உலகிற்கு பகிரப்படுவதாக இந்நூல் அமைந்துள்ளமை அதன் சிறப்பம்சமாகும்.


வேத இலக்கியங்களையும், சிந்துவெளி நாகரிக காலம், வேத நாகரிக காலம்பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளையும், அகழ்வாராய்ச்சி முடிவுகளையும், மராட்டியப் பேரறிஞரான தர்மானந்த கோசாம்பியின் எழுத்துக்களையும்ஆழமாகக் கற்று ஆராய்ந்து சிந்துவெளி நாகரிகம் பற்றிய தனது ஆராய்ச்சியினை ஒன்பது அத்தியாயங்களில் இந்நூலில் இவர் முன்வைத்துள்ளார்.


உயர்கல்வி நிறுவனமான பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஆய்வாளர் ஒருவருக்கு நிகராக இந்நூலினூடாக இவர் தன்னை வெளிக்காட்டியுள்ளார். இந்த ஆய்வினைத் தனது தனிப்பட்ட தேவைகளுக்காகச் செய்ய வேண்டிய அவசியங்கள் எதுவும் அவருக்கு இருக்கவில்லை. அதாவது இந்த ஆய்வு நூலால் அவருக்கு பட்டங்களோ! பதவி ஏற்றங்களோ விசேட கொடுப்பனவுகளோ எதுவும் வழங்கப்படும் வாய்ப்புக்கள் இருந்ததில்லை மாறாகத் தன்னுடைய ஓய்வுக்காலத்தில் ஆய்வின் மீது தனக்கிருந்த ஆர்வத்தின் மேலீட்டாலும், ஆரியப் பண்பாட்டு ஆக்கிரமிப்பின் உண்மைத்தன்மையினை ஆதாரபூர்வமாக, ஓர் ஆய்வறிவாளருக்கேயுரிய ஒழுக்க நெறிகளுடன் வெளிக்கொணர வேண்டும் எனும் நீண்ட கால உள்ளத்து வேட்கையின் காரணத்தினாலும்இந்த ஆய்வை அவர் மேற்கொண்டு நமக்குப் பகிர்ந்துள்ளார்.


இந்த ஆய்வு நூல் அவரை கிழக்கிலங்கையில் வாழும் குறிப்பிடத்தக்க ஒரு பொதுசனப் புலமையாளராக(Pரடிடiஉ ஐவெநடடநஉவரயட) அடையாளங்காட்டி நிற்பதாக கலாநிதி சி.ஜெயசங்கர் கூறுகின்றார்.


இந்த ஆய்வு நூலை பொது வெளியில் உரையாடலுக்குக் கொண்டுவந்து புதிய தலைமுறைகளுக்குப் பரவலாக்கம் செய்யும் போது நாம் திரு.க.பரராஜசிங்கம் என்னும் ஆய்வறிவாளரை மாண்பு செய்வது அர்த்தமுடையதாக அமைந்திருக்கும்.
இந்த ஆய்வும் அவருடைய பிற பணிகளும் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இலக்கிய கலாநிதி எனும் கௌரவப் பதவிக்குரிய ஆளுமையாக அவரை அடையாளங் காட்டி நிற்கின்றன.


கூத்துக்களைப் பாடியுள்ள புலவன்

திரு க. பரராஜசிங்கம் அவர்கள் கூத்துக்களைப் பாடும் வல்லமைகள் நிறைந்த வளதாரியாகக் காணப்படுகின்றார். சந்தங்கள் நிறைந்த பாடல்களை இயல்பாகவே ஆக்கிப்பாடும் சொல்வளங் கொண்ட ஒரு புலவராகக் திகழுகின்றார்.

இத்தகைய புலமைத்துவத்தின் காரணமாக ‘முதல் முழக்கம்’ அல்லது ‘ எல்லாளன் துட்டகைமுனு யுத்தம்’,(வடமோடி) ‘கண்டிராசன்’, (வடமோடி) ‘இராம தூதன்’ (வடமோடி),’வாலி வதை’ (வடமோடி) எனும் நான்கு கூத்துப்பனுவல்களை இவர் ஆக்கியுள்ளார். பழுகாமம் பாஞ்சாலி கலைக்கழகத்தினரின் வேண்டுகோளுக்கமையவே இக்கூத்துப் பனுவல்கள் இவரால் ஆக்கப்பட்டுள்ளன. இக்கூத்துப் பனுவல்கள் மூன்று மணி நேரத்திற்குள் ஆடக்கூடியதாக ஆக்கப்பட்டுள்ளன.


இவற்றுடன் மேலும் பல கவிதைகள், கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டுள்ளன இவருடைய ஆக்கங்களும் ஆய்வுகளும் ஆக்கபூர்வமான பணிகளும் பொது வெளிக்கு வரும் போது இவருடைய ஆளுமையினை மேலும் விளங்கிக்கொள்ள முடியும்.நமது சூழலில் பொதுசனப் புலமைத்துவங்களை வலுப்படுத்துவதற்கான ஏதுநிலைகள் அதிகரிக்கும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More