உலகம் பிரதான செய்திகள்

பள்ளிகள் பூட்டு! பரீட்சைகள் ரத்து!! ஆறுவார காலத்துக்குமுடக்கப்பட்டது பிரித்தானியா!

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தேசிய அளவில் நாட்டை முடக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறார்.நாளை செவ்வாய் முதல் அங்கு பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு பரீட்சைகள் ரத்தாகின்றன. உடனடியாக அமுலுக்குவருகின்ற கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதி வரை – சுமார் ஆறுவாரங்கள் – தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டவுணிங் வீதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து லண்டன் நேரப்படி இன்றிரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நாட்டை மூடி முடக்கவேண்டிய அவசியத்தை விவரித்தார். நாடு வைரஸ் நெருக்கடியின் இறுதி அத்தியாயத்தைக் கடந்துகொண்டிருக்கிறது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பத்தில்- மார்ச் மாதம் – அமுலுக்கு கொண்டுவரப்பட்ட தேசிய பொது முடக்கத்தை ஒத்த கட்டுப்பாடுகள் பிரித்தானியா முழுவதும் நடைமுறைக்கு வருகின்றன.

இதன்படி, வீடுகளில் இருந்தவாறு கடமையாற்றுமாறு பணியாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டு பரீட்சைகளும் ரத்துச் செய்யப்படுகின்றன. தவணை இறுதிப் பரீட்சைகளும் வழமை போன்று நடைபெறாது.

பல்கலைக்கழக மாணவர்களும் வீடுகளில் இருந்தவாறே கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வர். வரும் கோடை காலத்தில் நடக்கவுள்ள உயர்தரம் மற்றும் ஜிசிஎஸ்சி(A Level and GCSE) பரீட்சைகள் இரத்துச் செய்யப்படு கின்றன. இந்தப் பரீட்சைகள் தொடர்பில் “மாற்று ஏற்பாடுகள்” செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.

அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்படும். மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சில தேவைகளுக்காக மட்டுமே வெளியே நடமாட அனுமதிக்கப்படும். நாளொன்றுக்கு 50 ஆயிரம் தொற்றுக்கள் என்ற கணக்கில் புதிய மரபு மாறிய வைரஸ் தீவிரமாகப்பரவி வருவதை அடுத்தே பிரித்தானியா முடக்கப்படுகிறது.

மருத்துவமனை அனுமதிகள் பெருகி வருவதால் அடுத்துவரும் நாட்களில் மருத்துவப் பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

லண்டன் மருத்துவமனைகளுக்கு வெளியே அம்புலன்ஸ் வண்டிகள் நீண்ட வரிசைகளில் காத்து நிற்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இதேவேளை பிரித்தானியா போன்று ஸ்கொட்லாந்தை இன்று நள்ளிரவு முதல் முடக்கும் கட்டுப்பாடுகளை அதன் முதலமைச்சர் Nicola Sturgeon அம்மையார் அறிவித்திருக்கிறார்.-#பிரித்தானியா #பொறிஸ்_ஜோன்சன் #மருத்துவமனை

குமாரதாஸன். பாரிஸ் 04-01-2021

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap