உலகம் பிரதான செய்திகள்

வியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்!

வியட்நாம் காடுகள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய இரசாயனக் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக் குப் பொறுப்புக் கூறல் தொடர்பான முக்கிய வழக்கு விசாரணை பிரான்ஸில் தொடங்கி உள்ளது.


பாரிஸ் புற நகரான எஸோன் (Essonne) மாவட்டத்தில் எவ்றி (Evry) நீதிமன்றத்தில் கடந்த திங்களன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.


வியட்நாம் போர்க் காலத்தில் அமெரிக்க இராணுவத்துக்கு இரசாயனக் களை கொல்லி மருந்துகளை விநியோகித்த நிறுவனங்களுக்கு எதிரான இந்த முக்கிய வழக்கை பிரான்ஸில் வசிக்கும் வியட்நாமிய செயற்பாட்டாளரான பெண் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்தார்.


தெற்கு வியட்நாமில் 1942 இல் பிறந்த டிரான் தோ என்கா(Tran To Nga) என்ற பெண்ணே இரசாயன ஆயுதங்களால் தனக்கும் அடுத்த தலைமுறைக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகப் பொறுப்புக் கூறலுடன் இழப்பீடு கோரும் வழக்கை ஒரு டசினுக்கும் மேற்பட்ட இரசாயனக் களைகொல்லித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு (agrochemical companie) எதிராகத் தாக்கல் செய்திருந் தார்.வியட்நாம் போர்க்காலத்தில் தனது இருபதாவது வயதில் அங்கு ஓர் கம்யூனிஸ்ட் போராளியாகவும் ஊகவியலாளராகவும் மனிதநேயப் பணியாளராகவும் செயற்பட்டிருந்தவர் டிரான் தோ என்கா.


அமெரிக்காவின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் அவரது நீண்ட காலப் போராட்டங்கள் தற்போது குற்றவாளிகளைப் பொறுப்புக் கூற வைக்கின்ற சட்ட நடவடிக்கையை எட்டியுள்ளது.


அந்நாட்களில் Monsanto என அழைக்கப் பட்ட ஜேர்மனியின் ‘பயர்’ (Bayer) நிறுவனம் உட்பட 14 இரசாயனக் களைகொல்லி மருந்துத் தயாரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2014 இல் அவர் தாக்கல் செய்த வழக்கே விசாரணைக்கு வந்துள்ளது.


1961-1971 காலப்பகுதியில் வியட்நாம் மற்றும் லாவோஸ் காடுகள் மீது அமெரிக்க வான்படை விமானங்கள் லட்சக்கணக்கான லீற்றர்கள் என்ற கணக்கில் (20 million gallons) செறிவு கூடிய இரசாயனக் களை நாசனிகளை வீசின.


கெரில்லா போர் முறைகளில் கைதேர்ந்த வியட்நாம் கம்யூனிஸ்ட் போராளிகள் மறைந்திருந்து செயற்பட உதவிய அடர்ந்த வனங்களை அழிப்பதன் ஊடாக அவர்களைத் தோற்கடிக்க அமெரிக்கா நச்சு இரசாயனங்களைக் காடுகள் மீது விசிறியது. அமெரிக்காவுக்கு அச்சமயம் நச்சுக் களை நாசனிகளை விநியோகித்த நிறுவனங்கள் அவை ஏற்படுத்திய பேரழிவுகளின் பங்குதாரர்கள் என்ற குற்றச் சாட்டை எதிர்கொள்கின்றன.


“ஏஜென்ட் ஒரேஞ்” (“Agent Orange”) என்று அழைக்கப்படுகின்ற அந்த நச்சு ஆயுதத் தாக்குதலினால் அடர்ந்த காடுகள் அழிவுண்டன. மனிதர்களும் காட்டு உயிரினங்களும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.


வியட்நாம், கம்போடியா, லாவோஸ் நாடுகளை உள்ளடக்கிய காடுகளில் இரசாயனக் குண்டுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் தலைமுறை கடந்து இன்றைக்கும் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு மூலமாக மாறியுள்ளன.


இரசாயனக் குண்டுகளால் பாதிக்கப்பட்ட முன்னாள் வெளிநாட்டுப் போர் வீரர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்ட போதிலும் சிவிலியன்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்ற தாக்கங்களுக்குப் பொறுப்புக் கூறலோ அன்றி நஷ்டஈடுகளோ இதுவரை கிடைக்கவில்லை.


“ஏஜென்ட் ஒரேஞ்” தாக்குதல்கள் வரலாற்றில் அமெரிக்கா மேற்கொண்ட மிக மோசமான “இயற்கை மீதான குற்றம்” (Ecocide) என்று இன்றைக்கும் குறிப்பிடப் படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.
26-01-2021

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap