இலங்கை பிரதான செய்திகள்

தடுப்பூசியை அச்சமின்றி பெற்றுக்கொள்ளுங்கள்

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது.
எனவே மக்கள்கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து விடுபட அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொவிட் – 19 உலகளாவிய தொற்றின் மூன்றாவது அலை இன்று இலங்கையில் வெகு தீவிரமாகப் பரவி வருவதுடன் இவ்வேளையில் இறப்பு வீதமும் மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எமக்கு முன்னால் உள்ள தெரிவுகள் மிகச்சிலவே.

அவையாவன மக்கள் பொதுச் சுகாதார நடைமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், சரியான முறையில் கைகளைக் கழுவுதல் என்பவற்றைக் கடைப்பிடித்தல், நடமாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் நடமாட்டத்தடை, தடுப்பூசியை அதிகளவு மக்களுக்கு பெற்றுக் கொடுத்தல் இவ்வகையில் மக்கள் பொதுச் சுகாதார நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிப்பது போதாமையால் இன்று வரை கொவிட் – 19 தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது உள்ளது.

அதே வேளை நடமாட்டத்தடைகள் மக்களை பொருளாதார அடிப்படையில் கடுமையாகப் பாதிப்படையச் செய்கின்றன. நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை நடமாட்டத்தடையை பேணுவது என்பது பல குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மீள முடியா
அழிவுக்கு இட்டுச் சென்றுவிடலாம்.

இந்நிலையில் எமக்கு மீதமாக உள்ள ஒரே ஒரு உபாயம் தடுப்பூசிகளை அதிகளவு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதுவே. அரசு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுக்க தன்னாலான முயற்சிகளைச் செய்து வருகின்றது. அவ்வகையில் இலங்கையில் தொற்று அதிகம் எனத் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடங்குவதால்,
சினோபாம் தடுப்பூசிகள் முன்னிலை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக எமக்குக் கிடைத்த 50,000 தடுப்பூசிகள் 30.05.2021 ஞாயிற்றுக் கிழமை முதல்
யாழ்ப்பாண மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் வருந்தத்தக்க வகையில் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. சினோபாம் தடுப்பூசியானது நோய் ஏற்படுத்த முடியாத செயலிழக்கச் செய்யப்பட்ட கோவிட் -19 வைரசைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அத் தடுப்பூசியானது எமது உடலில் செலுத்தப்பட்டவுடன் கொவிட் – 19 வைரசிற்கெதிரானா பிறபொருள் எதிரிகளை எமது உடலின் நீர்ப்பீடனத் தொகுதி உற்பத்தி செய்வதற்குரிய பொறிமுறையை உருவாக்கும். இவ்வாறு பழக்கப்பட்ட எமது நீர்ப்பீடனத் தொகுதியானது
செயற்திறன் உள்ள நோயை உருவாக்கும் வைரஸ் தொற்றும் போது அதற்கெதிராக செயற்படும். பிறபொருளெதிரிகளை உருவாக்கி உடனடியாக அவ் வைரசை அழிக்கும்.

இதன் மூலம் எமக்கு நோய் ஏற்படுவது அல்லது நோயினால் ஏற்படும் பாதிப்புக்கள் அற்றுப்போகின்றது. இதுவரை உலகம் முழுவதும் 180 கோடி மக்கள் இக் கொவிட் -19 நோய்கெதிராக ஏதாவது ஒரு வகை தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சினோபாம் தடுப்பூசியானது சீனாவின் சனத்தொகையில் 67 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இத் தடுப்பூசியானது இலங்கையுடன் சேர்த்து இதுவரை 69 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் 15 இலட்சம் மக்கள் கொவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளனர். அதில் 6 இலட்சம் பேருக்கு சினோபோம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எமது நாட்டின் ஏனைய பாகங்களிலும், கடந்த இரண்டு நாள்களாக யாழ்ப்பாணத்திலும் வழங்கப்பட்ட தடுப்பூசிகளினால் எந்தவொரு பாதகமான விளைவும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.

மேலும், பாலூட்டும் தாய்மார் மிகவும் பாதுகாப்பாக இத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள இயலும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது.

தடுப்பூசிக்குப் பிறகு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை. இத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர் சிலருக்கு கொவிட் -19 நோய்தொற்று ஏற்பட்ட போதிலும் மிக மெல்லிய நோய் அறிகுறிகளே ஏற்பட்டுள்ளன.
பெரும்பாலான வேளைகளில் அறிகுறிகள் ஏதும் இன்றியே இந்நோய் குணமடைந்து விடுகின்றது.
எனவே தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களில் கொவிட் -19 நோய் தொற்றினால் இறப்பு ஏற்படுவது இல்லை.

மேலும் சீனாவின் சினோபாம் தடுப்பூசிகளினால் ஏற்படும் பாதகமான விளைவுகளின் வீதம் மிகக் குறைவாகும். இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள், நோய் ஏற்பட்டால் வரும் ஆபத்துக்களை விட மிக அதிகம் என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

சினோபாம் தடுப்பூசிகளினால் ஏற்படக்கூடிய பொதுவான பக்க விளைவுகளாக காய்ச்சல்,
உடற்சோர்வு மற்றும் தடுப்பூசி வழங்கப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்படலாம். ஆனால் இவை மிக மிக அரிதாகவே ஏற்படும்.

மக்கள் தொகையில் குறைந்தது 70 வீதமானோர் தடுப்பூசிகளைப் போட்டால் மட்டுமே நாட்டில் கொவிட் -19 நோய்த் தொற்றை இல்லாதொழிக்க முடியும். அதன் மூலமே தடுப்பூசி போடுவதற்கு விருப்பமிருந்தும் உடல் நோய் நிலமைகளினால் போடாதவர்களை பாதுகாக்க முடியும்.

கர்ப்பிணிப் பெண்கள், குருதியுறைதல் தொடர்பான நோய் உடையவர்கள்,
மற்றும் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வாமை ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமே இக் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியாது.

சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள வைத்தியசாலைகளில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரையும் அச்சமின்றி தமக்கென அறிவிக்கப்பட்ட நாட்களில் உரிய இடத்திற்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றேன்.

கொவிட் – 19 தொற்றுநோய்க்கொதிரான தடுப்பூசியைக் பெற்றுக் கொள்வது உங்களையும் உங்களுக்கு பிரியமானவர்களையும் இக் கொவிட் -19 தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதுடன் எமது சமூகத்தையும் பாதுகாப்பதாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.