இலங்கை பிரதான செய்திகள்

மாகாண சபையை அபிவிருத்திச் சபையாக்குங்கள் – தேர்தலை ரத்துச் செய்யுங்கள்!

பிரதேசசபை மட்டத்தில் முடிந்தளவு நிறைவேற்று அதிகாரத்தை பரவலாக்கல்
மற்றும் தொகுதி மட்டத்தில் மக்கள் சபைகளை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்ற விசேட குழு அதன் தலைவர், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் கூடியபோதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் ஊடாக உள்ளூராட்சிமன்ற தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளின் மாகாண சபையை மாகாண அபிவிருத்தி சபையாக மாற்ற வேண்டும். அந்த சபைகளுக்கு மக்கள் இறையாண்மையுடன் தொடர்புடைய அதிகாரங்களை மாத்திரம் வழங்குவது பொருத்தமானது எனவும், அதன் மூலம் மாகாண சபை தேர்தலை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியது.

உள்ளூராட்சி அதிகார பிரதேசமொன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையான வாக்காளர்களால் கையொப்பமிடப்பட்ட கோரிக்கையின் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதியின் உறுப்பினருக்கு வழங்கப்பட்ட ஆணையை இரத்துச் செய்தல் மற்றும் இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளது.

அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்குவதற்கு முன்னர் தேர்தல் ஆணையாளருக்கு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், தேர்தலுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளரால் அந்த தகவல்கள் வெளியிடப்படுவது பொருத்தமானது என்றும் ஜயந்த சமரவீர குழுவில் பிரேரணை முன்வைத்தார்.

மக்கள் பிரதிநிதி ஒருவரால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள் எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவற்றை சமூக உடன்படிக்கையாகக் கருதுவதற்குத் தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகள் செய்வது பொருத்தமாகும். அதனுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு நீதிபதிகள் குழுவை நியமித்தல் தொடர்பான சட்டரீதியான ஏற்பாடுகளின் தேவைப்பாடு தொடர்பிலும் அவர்
வலியுறுத்தினார்

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இறையாண்மை சிதைக்கப்படுவதைத் தடுக்க தேசியப் பட்டியலின் மூலம் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களில் 5 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.

தேர்தலின் போது செலவிட எதிர்பார்க்கும் நிதி மற்றும் அது எவ்வாறு செலவிடப்படும் என்பதைக் காட்டும் வரவு-செலவுத் திட்டத்தை உள்ளடக்கிய பிரகடனமொன்றை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர்.

இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை இரண்டு வாக்குச்சீட்டுக்கள் மூலம் ஒரே சந்தர்ப்பத்தில் நடத்துதல் மற்றும் அந்த தேர்தல்களை காபந்து அரசின் கீழ் நடத்துதல், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட அனைத்து தேர்தல்களுக்கும் தேர்தல் நடத்தும்
காலப்பகுதியை சட்டத்தின் மூலம் குறிப்பிடுதல் மற்றும் அரசியல் தீர்மானங்கள் மூலம் அவற்றை மாற்றுவதற்கு இடமளிக்காமை போன்ற பிரேரணைகள் தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சமர்ப்பித்த பிரேரணைகளில் உள்ளடங்குகின்றன.

ஜாதிக ஹெல உறுமய

இதேவேளை, பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தமது யோசனைகளை சமர்ப்பித்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி, பாராளுமன்ற, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி ஆகிய மூன்று ஆட்சி மட்டங்களிலும் தொகுதி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலான உறுப்பினர்கள் எண்ணிக்கை 60:40 எனும் விகிதத்தில் கலப்பு பிரதிநிதித்துவம் இடம்பெறவேண்டுமென வலியுறுத்தினர்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஆண்டில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் ஒரு தினத்தில் ஒரே தடவையில் நடத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய பிரேரணை முன்வைத்தது.

ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர் பட்டியலில் நூற்றுக்கு 25 சதவீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் போது அது மூன்றில் ஒரு பங்காக உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அக்கட்சி எடுத்துரைத்துள்ளது.

இக்குழுவின் அடுத்த கூட்டம் அடுத்த மாதம் 08ஆம் திகதி நடைபெறும் என குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.