
பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வுக்குச் சென்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அமர்வின் பக்க அம்சமாக நடைபெறும் சந்திப்புகளில் கலந்துகொண்டார்.
அதில், இலங்கைப் பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய செயலகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக புலமைச்சொத்து அமைப்பின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.
ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐ.நா. மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு உடனான சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம், மற்றும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் அரசாங்கத்தின் விரிவான முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கையின் முயற்சிகளைப் புரிந்துகொண்டு, அங்கிகரிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பரோனஸ் பெட்ரிசியா ஸ்கொட்லாந்துடனான சந்திப்பில், பொருளாதார முன்னணி, சுற்றுலா மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி போன்ற வாய்ப்புக்கள் உட்பட பொதுநலவாய நாடுகளுடனான இலங்கையின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார். பொதுநலவாய செயலாளர் நாயகம் நீலப் பொருளாதாரத்தில் இலங்கையின் முக்கிய பங்கைப் பாராட்டியதுடன், இந்தப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஈடுபாட்டைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment