Home இலங்கை சர்வதேச மனித உரிமைகள் தினம் – பிரதம அதிதியுரை

சர்வதேச மனித உரிமைகள் தினம் – பிரதம அதிதியுரை

by admin

சர்வதேச மனித உரிமைகள் தினம்
2016 மார்கழி 10ம் திகதி
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை மண்டபம்
பிரதம அதிதியுரை
குருர் ப்ரம்மா…………………………………

ஒவ்வொரு வருடமும் மார்கழி 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் வடமாகாணத்தில் இவ்வருடம் கௌரவ அனந்தி சசிதரன் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இவ் விழாவில் சிறப்பு அதிதிகளாக வருகை தந்திருக்கும் அருட்தந்தை மங்களராஜா அடிகளார் அவர்களே, அருட்தந்தை செபமாலை அடிகளார் அவர்களே, சட்ட வல்லுனர்களான திரு. குருபரன், திரு. சுகாஸ் அவர்களே, மற்றும் இந்த நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக வருகைதந்திருக்கும் பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

தனிமனித உரிமைகள் என்பது ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச மனித உரிமை பிரகடனம் மூலமாக 30 வகைகளுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மக்கள் யாவருக்குமான சம உரிமை, சட்டத்தின் முன் ஒவ்வொருவருக்கும் சம உரிமை, தான்தோன்றித்தனமான கைது, தடுத்து வைத்தல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு, உயிர் வாழ்வதற்கான உரிமை, தனிமனித சுதந்திரம், விரும்பிய இடத்திற்கு நகர்ந்து செல்வதற்கான உரிமை, ஒரு தேசிய இன அங்கத்தினராக ஏற்றுக் கொள்ளப்படும் உரிமை, கருத்துச் சுதந்திரம், அதனை வெளிப்படுத்தும் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கல்வி கற்பதற்கான உரிமை, சொத்துக்களை வைத்திருப்பதற்கான உரிமை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதான ஒரு சட்டமூலமாக அப்பிரகடனம் கொள்ளப்படலாம்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் சாம்பல் மேட்டிலிருந்து, யுத்தங்களுக்கு எதிரான சிந்தனைகளில் இருந்து உதயமாகியதே ஐக்கிய நாடுகள். 1948ம் ஆண்டில் முதன் முதலில் 58 நாடுகளின் உறுப்புரிமையுடன் உருவாக்கப்பட்டதே சர்வதேச மனித உரிமை பிரகடனம். இன்று 193 நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் சர்வதேச சட்டங்களை உள்ளடக்கி மனித உரிமைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு மனித உரிமை சாசனமாக அது உருவகித்துள்ளது. உலகளாவிய ரீதியில் இடம்பெறக்கூடிய இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், ஆக்கிரமிப்புக்குற்றங்கள் என அபாயம் மிகுந்த பல குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துவதற்கும் அவ்வாறான செயல்கள் இடம்பெறாது இருப்பதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு சட்டவாக்கமாகவே இதனைப் பார்க்கின்றோம்.

உலகளாவிய ரீதியில் சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை இனங்களால் ஒடுக்கப்படுவதும் அவர்களின் வாழும் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது கருத்து வேற்றுமைகள் உருவாவதும் அவற்றின் விளைவாக தேவையற்ற சண்டை சச்சரவுகள் உருவாவதும் உலகில் தொன்று தொட்டு அவதானிக்கப்பட்டுள்ளன. ஆனால் அக் கருத்து வேற்றுமைகளை நீக்குவதற்கான அடிப்படைக் கொள்கைகளை மேற்படி சர்வதேச பிரகடனங்கள், ஒப்பந்தங்கள் போன்றன அடையாளங் கண்டுள்ளன. சகலருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று நாட்டின் அரசாங்கங்கள் தீர்மானம் எடுத்தால் பக்கச்சார்பான சட்டங்களை இயற்ற முடியாது போய்விடும். இந்தப் பிரகடனங்களின், ஒப்பந்தங்களின், உடன்பாடுகளின் முக்கியத்துவம் இதிலிருந்து புரிகின்றது.

ஆனால் இலங்கையில் தமிழ் இனத்தின் மனித உரிமைகள் மனிதத்தை ஏற்க மறுக்கும் இனவாத சக்திகளினால் மறுக்கப்பட்ட போது எம்மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டது. சர்வதேச சட்டங்கள் இருந்தும் அவை இங்கு சக்தியற்றதாக்கப்பட்டன. தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை, மொழிப்பயன்பாட்டில் இரண்டாம் தரப்பிரஜைகளாக்கல், கல்வியில் ஓரங்கட்டுதல், அரச நியமனங்களில் பாகுபாடு, எனத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பக்கச் சார்பான நடவடிக்கைகளுக்கு எதிராக வீறுகொண்டெழுந்த இளைஞர் அணிகளினால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையே ஆயுத கலாச்சாரமாக

விரிவடைந்து இந்நாட்டின் பாரிய இனக் கலவரங்களுக்கும் அநியாய உயிரிழப்புக்களுக்கும் சொத்து அழிப்புக்களுக்கும் காரணிகளாக அமைந்தன. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சிங்கள தமிழ் சமூகங்கள் ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்குரிய போராட்டங்களில் ஒற்றுமையாக ஈடுபட்ட போதும் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறப் போகின்றார்கள் என்று தெரிய வந்த மிகச் சொற்ப காலத்துக்குள்ளேயே தமிழ் சிங்கள இனங்களுக்கிடையேயான வேற்றுமை உணர்வுகள் வளரத் தொடங்கி விட்டன. சிங்களப் பெரும்பான்மை இனத் தலைவர்கள் தமிழர்களை ஒடுக்குவதற்கும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், வழிபாட்டுத்தலங்கள், வியாபார நிலையங்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றை காலத்துக்குக் காலம் அழித்தொழிக்கவும் தமிழ் மக்களை தொடர்ந்தும் நலிவடைந்த ஒரு இனமாக மாற்றவும் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக ஏற்பட்ட நீண்ட கால யுத்தத்தின் பெறுபேறாக இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை தற்போது சர்வதேச நாடுகளால் கையாளப்படுகின்ற ஒரு விடயமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் ஐ.நா சபையில் தற்போது அவதானிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எங்கள் பிரச்சினைகள் வல்லரசு நாடுகளின் சொந்த அரசியலுக்கும் ஒரு காரணியாக அமைந்துவிட்டது. எங்கள் பிரச்சனைகளைக் காரணங்காட்டியே வல்லரசு நாடுகளின் பனிப்போர்கள் நடைபெறுகின்றன. தங்களிடையே இருக்கும் சகல அரசியல் முரண்பாடுகளுக்கும் மனித உரிமைகளையே நாடுகள் பல பாவித்து வருகின்றன.

அதே போல் நாங்கள் எங்கள் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக் காட்டினால் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் சிலர் தமது மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தம்மை ஆத்திரமூட்டுவதாக எமது கருத்துக்கள் அமைவதாகவும் கூறுகின்றார்கள். தவறான செய்திகளை உள்வாங்கி கௌரவ அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் வாய்க்கு வந்தபடி கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் கௌரவ அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் எனக்கு மிகவும் அறிமுகமானவர்.

புத்தர் சிலைகளை வடக்கில் அமைக்க இடமளிக்கக் கூடாது என்று எப்போதாவது கூறினீர்களா என்று நேரடியாகவே என்னிடம் கேட்டிருக்கலாம். தவறான தகவல்களை வைத்துத் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் கௌரவ அமைச்சர் அவர்கள். சட்டவிரோதமாக சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் தனியார் காணிகளில் புத்தர் சிலை அமைப்பதையே நாங்கள் கண்டித்தோம். அதை வேறு விதமாகத் திசை திருப்பியுள்ளார் கௌரவ அமைச்சர் அவர்கள்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த சிங்கள கலைச் சொல்லகராதியின் ஆசிரியர் கலாநிதி அகுரடியே நந்தா தேரோ அவர்கள் கூட புத்தர் சிலைகளை பௌத்தர்கள் வாழாத இடங்களில் சட்ட விரோதமாக அமைப்பதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று கூறினார். எனவே போலிக் காரணங்களை வைத்து மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுவதை நாங்கள் யாவரும் தவிர்த்துக் கொள்வோமாக!

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் மற்றும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கூட்டிணைப்பில் உருவாக்கப்பட்ட இன்றைய அரசு தமிழ் மக்கள் பிரச்சனைகளை ஓரளவுக்காவது தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது என்று தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். இவர்களால் உருவாக்கப்படுகின்ற அரசியல் திருத்த சட்டமூலங்களில் எமது பிரச்சனைகள் நீதியான முறையில் ஆராயப்படும் என அவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த அரசின் புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்களுக்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அனுசரணைகளையும் நல்கிவருகின்றார் என எண்ணுகின்றேன். எனினும் புதிய அரசியல் யாப்பு அங்கீகாரந் தொடர்பில் பேசப்படுகின்ற புதிய புதிய விடயங்களும் அமைச்சர் சிலரின் கருத்துக்களும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைக் கேள்விக்குறியானதாக மாற்றிவிடுமோ என எண்ணத்தோன்றுகின்றது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும் கௌரவ பிரதம் மந்திரி அவர்களினதும் தமிழ் மக்கள் பற்றிய தனிப்பட்ட சிந்தனைகள் வரவேற்புக்குரியன. இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் கரிசனைகளைக் காட்டிவருகின்றார்கள். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும்; இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற நல்ல கொள்கைகளை முன்னெடுக்க முயல்பவர்களாக அவர்கள் எங்களுக்;குக் காட்டி வருகின்றார்கள். ஆனால் வார்த்தைகள் வலியுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது புரியாத புதிராகவே அமைந்திருக்கின்றது.

இந்த அரசு இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பல்வேறு தனியார் நிலங்களையும் அவர்களின் வீடுகளையும் மீள ஒப்படைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் பல விடுவிக்கப்படாதிருக்கின்றன. அறுபத்தேழாயிரம் ஏக்கர் காணிகளில் சுமார் மூவாயிரத்து ஐந்நூறு ஏக்கர்களே விடுவிக்கப்பட்டுள்ளன. மற்றும் மீன்பிடி கேந்திர ஸ்தானங்களை தம்வசமே படையினர் வைத்திருக்கின்றார்கள். புதிய புதிய பௌத்த மதக் கோவில்கள் சட்டத்திற்கு மாறாக வடமாகாணத்தில் உருவாக்கப்படும் போது அவற்றை நிறுத்துமாறு நாம் கோரிக்கை விடுகின்ற போது எம்மை அடிப்படைவாதிகள் எனக் கூறுவது இவர்களின் நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் எல்லாம் ஐயங்களைத் தோற்றுவிக்கின்றன.

எனவே இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களுந் தாம் விட்ட தவறுகளை உணர்ந்து கொண்டு அனைத்து மக்களுக்குங் கிடைக்க வேண்டிய உரித்துக்களை அவர்களுக்கு வழங்கக் கூடியவாறு இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும். அதற்கு முன்னேற்பாடாக

1. வடக்கு கிழக்கில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.
2. பௌத்த இன மக்கள் எவருமே வாழாத பகுதிகளிலும், இராணுவ முகாம்கள் அற்ற பகுதிகளிலும் இராணுவத்தினரின் உதவியுடன் புதிய பௌத்த கோவில்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும்.
3. எதுவித குற்றச்சாட்டுக்களும் இன்றி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து நீண்ட காலம் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனே கைவாங்கினால் மேற்படி இளைஞர்களை தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டிவரும்.
4. போர்க்குற்ற விசாரணை சர்வதேச உள்ளீடல்களுடன் ஆரம்பிக்கப்பட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த போராளிகள் மற்றும் யுத்தக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
6. வீடுகளை இழந்த மக்களுக்கான புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
7. மீன்பிடி முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையங்களை உடனடியாக விடுவித்து மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.
8. எமது வளங்களைத் தெற்கில் இருந்து வந்து கவர்ந்து செல்வதை நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு முன்னேற்பாடுகளை உடனே நடைமுறைப்படுத்தினால்த் தான் எம் நாடு மனித உரிமைகள் மீது கரிசனையுள்ள நாடு என்று கணிக்கப்படலாம்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

தேசிய நல்லிணக்கம் மீதான வடக்கு கிழக்கு மாகாண மக்களின் விதந்துரைகள், எதிர்பார்ப்புக்கள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட வைபவம் – 2016ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ந் திகதி

காலை 10 மணி முதல்
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்
முதலமைச்சர் கூற்று

குருர் ப்ரம்மா …………
என் நீண்டகால நண்பர் கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, வடக்குக் கிழக்கில் இருந்து வந்திருக்கும் தேசோதய சபை பிரதிநிதிகளே, அங்கத்தவர்களே, சகோதர சகோதரிகளே,

உங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆவலுடன் எதிர் பார்த்திருந்தேன். ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தினால் கலந்து கொள்ள  முடியாமைக்கு வருந்துகின்றேன். கௌரவ அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களை என் சார்பில் கலந்து கொண்டு என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கோரியுள்ளேன். உண்மையில் சென்ற மாதம் 19ந் திகதியே கலாநிதி ஆரியரத்ன அவர்கள் யாழ்ப்பாணத்தில் என்னைச் சந்திப்பதாக இருந்தது. வேறு நிகழ்வுகளால் அவர் தம் வருகையை தினம் மாற்றிக் கொண்டார். இன்று அவருடன் அளவளாவ முடியாது இருப்பினும் உங்கள் கூட்டத்திற்கு எனது கூற்றொன்றினை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.
தேசோதய சபைகள் கூடி தேசிய நல்லிணக்கத்திற்கான தேவைகளைத் தேடித் தரும் சந்தர்ப்பம் இது.
உங்கள் கருத்துரையாடல்களின்போது நீங்கள் சில அடிப்படை விடயங்களில் ஒற்றுமை கண்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. அவையாவன –
01.    தேசிய நல்லிணக்க செயன்முறையொன்று அவசியம்.
02.    இனவாத அடிப்படையில் அல்லாமல் சகல மக்களையும் ஒன்றிணைத்துச் செயற்படும் கலாச்சாரம் அவசியம்.
03.    அரசியலமைப்பு ரீதியான திருத்தங்கள் அவசியம்.
04.    கடந்தகால குற்றங்களுக்குப் பக்கச்சார்பற்ற நீதி விசாரணை அவசியம்.
05.    பாதிக்கப்பட்டவர்களின் வாழ்கையில் மறுசீரமைப்பு அவசியம்.
06.    மக்கள் பங்கேற்புடன் நில மட்ட அபிவிருத்தித் திட்டமானது விரயமின்றி நடைமுறைப்படுத்தப்படல் அவசியம்.
07.    காணாமற் போனோர்களைத் துரிதமாகக் கண்டுபிடித்தல் அவசியம்.
08.    சமூகச் சீரழிவைக் கட்டுப்படுத்த துரித வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தல் அவசியம்.
09.    உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருப்போருக்கு உரிய சிகிச்சையும் நிவாரணங்களும் அளித்தல் அவசியம்.
10.    அரச குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் சகல இன  மக்களின் பிரதிநிதித்துவம் அவசியம்.
11.    மரணித்த உறவுகளை நினைவு கூர சகலருக்கும் சமவாய்ப்பு அளித்தல் அவசியம்.
12.    பாடசாலைப் பாடவிதானங்களில் நல்லிணக்கத்தை பலப்படுத்தக்கூடிய பாடங்களை உள்ளடக்குதல் அவசியம்.
13.    ஆணைக்குழுக்கள் இதுகாறும் போலல்லாது மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் அவசியம்.
14.    மக்கள் மட்டத்தில் நல்லிணக்கம் சம்பந்தமான கலந்துரையாடல்களை ஏற்படுத்துதல் அவசியம்.
15.    இன, மத அடிப்படை அல்லாது இலங்கைப் பிரஜைகள் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு தலைமைத்துவத்தை உருவாக்கல் அவசியம்.
16.    புதிய அரசியல் கலாசாரமொன்றை ஏற்படுத்தல் அவசியம்.
மேற்கண்ட 16 விடயங்களும் எம்மால் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டியவையே. அவற்றை முன்மொழியப் போகின்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
உங்கள் சிந்தனைகளுக்கும் எங்கள் சிந்தனைகளுக்கும் இடையில் பாரிய வேற்றுமைகள் இல்லை. எனினும் சில விடயங்களை நாங்கள் சற்று வித்தியாசமாகப் பார்க்கின்றோம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

இனரீதியான சித்தனைகளைத் தவிர்த்து தேசிய ரீதியில் சிந்திக்க வேண்டும் என்றும் அதற்கான கலாசாரம் உண்டாக்கப்பட வேண்டும் என்றும் நீங்கள் முடிவு எடுத்துள்ளீர்கள். உங்கள் முடிவு 1919ம் ஆண்டில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் எடுத்த முடிவையொட்டி உள்ளது. அவரும் நாம் யாவரும் இலங்கையர் என்ற சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தார்.

அதனால்த்தான் அவர் பிரிந்திருந்த இனங்களை ஒன்று சேர்க்கும் எண்ணத்துடன் இலங்கை சீர்திருத்தக் கழகம்  Ceylon Reform League  இலங்கை தேசிய சங்கம் Ceylon National Association யாழ்ப்பாண சங்கம் Jaffna Association   ஆகியவற்றை ஒன்று சேர்த்து இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress) என்ற சங்கத்தை அமைத்தார். அவர் மனித குலத்தின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மதித்தார்.

அந்தக் காலத்தில் ஆங்கிலம் சகல இன படித்த மக்களாலும் பேசப்பட்டு வந்ததால் ஆங்கில மொழி சகலரையும் அவர்கள் மட்டத்தில் ஒன்றிணைத்தது. இலங்கை மக்களின் அரசியல் ரீதியான கோரிக்கைகளில் எம் மக்கள் மத்தியில் ஒற்றுமையிருந்தால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் எமக்குத் தன்னாட்சி தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று கூறியிருந்தார்கள். அதனால்த்தான் மிகவும் பிரயாசப்பட்டு ஒற்றுமையை உருவாக்கினார் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள். இன ரீதியாகச் செயற்பட்ட யாழ்ப்பாண சங்கத்தை இனரீதியான சட்டசபை பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக பிரதேச ரீதியான சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை ஏற்கச் செய்தார். யாழ் சங்க உறுப்பினர்கள் இனரீதியான பிரதிநிதித்துவத்தையே Communal Representation வேண்டி நின்றார்கள். அதற்குப் பதிலாகப் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை அவர்கள் வுநசசவைழசயைட Territorial Representation ஏற்க வேண்டும் என்று அவர் வலிந்து கேட்டதற்கிணங்க அவர்கள் அதற்கு உடன்பட்டார்கள். ஆனால் யாழ் சங்கத்தவர்களுக்குப் புரிந்த ஒரு விடயம் சேர் பொன்னம்பலம் அருணாசலத்திற்குப் புரியவில்லை. இலங்கையின் ஐக்கியத்தை மட்டுமே அவர் பார்த்தாரே ஒளிய சில இனத்தவர்களின் உள்ளக் கிடக்கைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை.

கொழும்பில் அப்போது பெருமளவு தமிழர்கள் வாழ்ந்தார்கள். கொழும்பில் தமிழ்ப் பேசும் மக்களுக்கென்று ஒரு ஆசனம் வழங்குவதாக எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்த சிங்களத் தலைவர்கள் சேர் ஜேம்ஸ் பீரிஸ், திரு. நு.து.சமரவிக்கிரம ஆகியோர் ஆங்கிலேயர் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்ட உடனேயே தமது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டனர். இதை சேர் அருணாசலம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்பொழுதிருந்தே தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விட்டார்கள். மனவருத்தத்தில் ஒரு சில வருடங்களில் சேர் அருணாசலம் மதுரை சென்ற போது அங்கு உயிர் நீத்தார்.

மேற்கண்ட இன ரீதியான பிரதிநிதித்துவம் (Communal Representation) பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் (Territorial Representation) என்ற பதங்களின் வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனரீதியாகச் சிந்திப்பது தவறு என்றே எமக்குக் கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் அவ்வாறான சிந்தனை இல்லை என்றால் ஒரு சிறிய இனம் பெரிய இனத்தினுள் சங்கமமாகிவிடும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கௌரவ சபாபதி அவர்களால் வழி நடத்தப்பட்ட யாழ் சங்கமானது அரசாங்கம் சகல இனங்களையும் சமமாகப் பாவித்து அந்த இனங்கள் சார்பாகப் பிரதிநிதிகளை நியமித்துச் சகல இனங்களையும் பாகுபாடு இல்லாமல் நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்தது. பெரும்பான்மையினத் தலைவர்கள் நாட்டைப் பிரதேசங்களாகப் பிரித்து அந்தந்தப் பிரதேச மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனை யாழ் மக்கள் ஏற்க வேண்டும் என்று சேர் அருணாசலம் வலிந்து கேட்டதால் அவர்கள் இன ரீதியான தமது கோரிக்கைகளைக் கைவிட்டனர்.

ஆனால் பிரதேச பிரதிநிதித்துவமானது பெரும்பான்மையினத்தவர்கள் நாட்டின் முழு அரசாங்க இயந்திரத்தையுந் தம் கைவசம் எடுத்தக் கொள்ள உதவியது. அதாவது பிரதேச மட்டத்தில் பெரும்பான்மையினர்தான் அரசாங்கத்தை உருவாக்கி அரசாண்டார்கள். இன்றும் அதே நிலைதான். பாராளுமன்றத்தில் ஒரு சிலரே எம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள். அவர்கள் சிறுபான்மையினர். பெரும்பான்மையினரின் தயவிலேயே அவர்கள் வாழவேண்டி வந்துள்ளது. எமது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

ஆகவே நீங்கள் உங்கள் கோரிக்கையில் இனவாத அடிப்படையைத் தவிர்ப்போம் என்று கூறும் போது அது பெரும்பான்மை மக்களுக்கு எமது உரித்துக்களைத் தாரை வார்த்துக் கொடுப்பது போல் ஆகிவிடுகின்றது. சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்து அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்கிய பின்னரே தேசிய ரீதியில் நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பெரும்பான்மைச் சமூகங்களின் ஒரு அங்கமாக மாறி விடுவோம். உதாரணத்திற்கு ஒரு கூட்டத்திற்கு செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.  பெரும்பான்மையான மக்கள் அங்கு ஆங்கிலத்திலேயே பேசுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். தமிழர்களாகிய நாங்களும் ஆங்கிலத்திலேயே பேசுவோம். அதே போல் சிங்கள மக்களிடையே சிங்களத்தில்த்தான் பேசுவோம். காலக்கிரமத்தில் தமிழ் மறந்து போய்விடும்.

மேலும் ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன். டொன் ஜுவான் தர்மபால என்ற அரசனுக்கு முடிசூட்ட மதுரையில் இருந்து 400 வருடங்களுக்கு மன்னர் வந்த தமிழர்கள் பலர் இங்கு குடியேறியதால் இன்று அம்பலாங்கொட-:பலபிற்றிய போன்ற இடங்களில் அவர்கள் சிங்களவர்களாக மாறி நிற்கின்றார்கள். மலைநாட்டில் இருந்து அண்மையில் வத்தளை, நீர்கொழும்பு போன்ற இடங்களில் குடியேறியவர்கள் சிங்களவர்களாகவே தம்மைப் பெயர் மாற்றியுள்ளார்கள். தென்னாபிரிக்காவில் அரசியல் பிணக்கைத் தீர்த்த பிறகே நல்லிணக்க நடவடிக்கைகளில் இறங்கினார்கள். அரசியல் ரீதியான அடையாளமும் உரிமைகளும் உத்தரவாதப்பட்ட பின்னரே நாங்கள் தேசிய ரீதியில் செயலாற்ற வேண்டும்.

அதனால்த்தான் நாங்கள் எங்கள் அரசியல் முன்மொழிவுகளில் சமஷ்டி முறையை வலியுறுத்துகின்றோம். வடக்குக் கிழக்கு தமிழ்ப் பேசும் பிராந்தியங்களாக சட்டப்படி ஏற்கப்பட்டு விட்டால் அங்கு தமிழ் வாழும்; தமிழர்கள் வாழ்வார்கள்; தமிழ்க் கலாசாரம் வளரும். இல்லை என்றால் பெரும்பான்மை மொழி, கலை, கலாசாரத்தினுள் நாம் அமிழ்ந்து விடுவோம் என்று அஞ்சுகின்றோம். அவ்வாறு அமிழ்ந்து விடவைப்பது இனப்படுகொலைக்கு ஒப்பாகும் என்று சட்டம் சொல்லுகின்றது.

எமது இனத் தனித்துவத்தை வலியுறுத்திக் கொண்டே தேசிய ரீதியாக நாங்கள் நடந்து கொள்ள முன்வர வேண்டும். சிறுபான்மையினர் தமக்கு உரித்துக்கள் கிடைக்க முன்னர் தேசிய ரீதியாக நடக்க முற்பட்டால் அவர்கள் பெரும்பான்மையினத்துடன் இரண்டறக் கலந்து விடுவார்கள். அதனால் என்ன என்று சிலர் கேட்கலாம். கிறீஸ்துவுக்கு முன்னர் இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் வளர்ந்து வந்த செம்மொழி, அதன் கலை, கலாசாரத்தை நாம் கொச்சைப்படுத்த வேண்டுமா? அவற்றை மறந்து விட வேண்டுமா? என்பதை மக்களாகிய நீங்களே தீர்மானிக்க வேண்டும்.

இந்தக் கருத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து உங்கள் முயற்சிகளைப் பாராட்டி நண்பர் கலாநிதி ஆரியரத்ன அவர்கள் பல வருடகாலம் வாழ்ந்து எம்மையெல்லாம் வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்தி எனக்கு இந்த நீண்ட செய்தியை உங்கள் முன் சமர்ப்பிக்க உதவிய சகலருக்கும் நன்றி தெரிவித்து என் செய்தியை முடிவுறுத்திக் கொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More