171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாணத்தின் பல்வேறு துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய முதலீடுகளை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதும், சிறிய நடுத்தர தொழில் முயற்சிகளுக்கூடாக மக்களின் வருமானத்தினை அதிகரிக்கச்செய்வதும் இவ்வரவு செலவுத் திட்டத்தினூடாக அடையப்படவேண்டிய இலக்குகளாக உள்ளன. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
வடமாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டதினை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்
வடக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான நான்காவது வரவு செலவுத்திட்டத்தினை இச்சபைமுன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். விதிமுறையாக அதனைச் சமர்ப்பிப்பதற்கு முன் தற்போதைய எமது நிலை பற்றி சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.
எம் மக்களின் பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டே நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்.
வட மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலை, கலாச்சார விழுமியங்களை உள்வாங்கி மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்து தேசிய ரீதியில் வடமாகாணம் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கியுள்ளது.
இம்மாகாணமானது 2015ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6% ஆன பங்களிப்பினை பதிவு செய்துள்ளது. தேசிய ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வடமாகாணத்தின் விவசாயத்துறையானது 5.8% பங்களிப்பினையும், கைத்தொழில் துறையானது 2.4% பங்களிப்பினையும், சேவைத்துறையானது 3.9% பங்களிப்பினையும் வழங்கியுள்ளன.
மாகாண ரீதியில் 2015 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை நோக்கும் போது வடமாகாணத்தின் விவசாயத்துறையானது 13% பங்களிப்பினையும், கைத்தொழில் துறையானது 19% பங்களிப்பினையும், சேவைத்துறையானது 68% பங்களிப்பினையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே 2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினூடாக அரச, தனியார்துறைகளில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய செயற்றிட்டங்கள் மற்றும் வருமான வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்தல், மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கக்கூடிய வகையிலான பெறுமதிசேர் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளூடாக வருமானத்தினை அதிகரிக்கச் செய்தல் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புக்களை விருத்தி செய்தல் போன்றவற்றினூடாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எமது மாகாணம் அதிகரித்த பங்களிப்பினை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திக்கான இலக்குகள் துறைசார் ரீதியாக இனங்காணப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் 5.3% ஆனோருக்கே வேலையில்லை.
இதே வேளையில் நாட்டின் மொத்த வேலைப்படையில் வட மாகாணம் 4.3% ஆன பங்களிப்பினை கொண்டிருக்கின்றது. வடமாகாணத்தின் மொத்த வேலைப்படையில் 94.7% ஆனோர் தற்போது பல்வேறு துறைகளில் வேலைப்படையாக இயங்கும் அதே வேளையில் 5.3% ஆனோர் வேலையற்றோராகக் காணப்படுகின்றனர்.
இலங்கையில் வறுமையான மாவட்டம் முல்லைத்தீவு.
வடமாகாணத்தின் வறுமை நிலையினை நோக்கும் போது 2013ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் அதாவது 28.8% வறுமைக்குறிகாட்டியை பதிவு செய்துள்ளது.
மேலும் மன்னார் மாவட்டம் 20.1% வறுமை நிலையினையும், கிளிநொச்சி மாவட்டம் 12.7% வறுமை நிலையினையும், யாழ்ப்பாண மாவட்டம் 8.3% வறுமை நிலையினையும், வவுனியா மாவட்டம் 3.4% வறுமை நிலையினையும் பதிவு செய்துள்ளன.
வேலை வாய்ப்பினை உருவாக்குவதே இலக்கு.
எனவே வட மாகாணத்தின் பல்வேறு துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய முதலீடுகளை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதும், சிறிய நடுத்தர தொழில் முயற்சிகளுக்கூடாக மக்களின் வருமானத்தினை அதிகரிக்கச்செய்வதும் இவ்வரவு செலவுத் திட்டத்தினூடாக அடையப்படவேண்டிய இலக்குகளாக உள்ளன.
வட மாகாணம் தனது உள்ளக வள வாய்ப்புக்கள் ஊடாக வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், மக்களுக்கான வருமான மட்டத்தினை அதிகரிக்கச்செய்தல், கிராமிய பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்தல், மாகாண மட்டத்தில் உணவுப்பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், சிறிய நடுத்தர விவசாயிகள் மற்றும் முயற்சியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஊக்குவித்தல், சிறிய நடுத்தர முயற்சியாளர்களது திறன்களை விருத்தி செய்தல், சுற்றுலா கைத்தொழிலை ஊக்குவித்தல், வறுமைத்தணிப்பு திட்டங்களை அமுலாக்குதல், போதைப்பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள், சிறுநீரக நோய்த்தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்கள், போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டினை நோக்காகக்கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு பொருத்தமான அபிவிருத்தித்திட்டங்களை அமுல் படுத்தல் போன்ற முக்கியமான விடயங்களிலும் 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அபிவிருத்தியும் எமது இலக்கு.
அத்துடன் 70ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக 2030ஆம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப்படும் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளையும் கவனத்திற்கொண்டு எமது அபிவிருத்தி பாதையை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது.
வறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, நற்சுகாதாரம், தரமான கல்வி, பாலினச் சமத்துவம், தூய நீரும் துப்புரவும், மலிவான சக்தி, கண்ணியமான வேலைவாய்ப்பும் பொருளாதார மேம்பாடும், கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்புக்களை உருவாக்கல், சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல், நிலையான நகரங்கள் – சமூகங்களை உருவாக்கல், பொறுப்புடைய உற்பத்தியும் நுகர்வும், காலநிலை நடவடிக்கை, நீர் வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், தரை வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், சமதானம், நீதி போன்றவற்றை மேம்படுத்தி உறுதியான சமூகங்களையும் அமைப்புக்களையும் உருவாக்கல் மற்றும் இலக்குகளை அடைய கூட்டுப் பங்காண்மையை உருவாக்கல் போன்ற 17 இலக்குகளை ஐக்கிய நாடுகள் அடுத்த 15 வருடங்களில் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளாக 2015ம் ஆண்டில் அடையாளம் கண்டுள்ளது.
இவற்றிக்கு எமது நாடும் கையெழுத்திட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாறான இலக்குகளை அடைவதில் எமக்கும் எமது நாட்டு அரசாங்கத்திற்கும் கூட்டுப் பொறுப்புள்ளது. முக்கியமாக 16வது இலக்கு எமக்கு மிகவும் பொருந்தும்.
நீதியான சமூகத்தை உருவாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்.
அதாவது நிலைத்த அபிவிருத்திக்காக சமாதானத்துடன் எல்லோரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கல் மற்றும் யாவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல் மேலும் தக்க உறுதியான அமைப்புக்களை சகல மட்டங்களிலும் உருவாக்கல் என்பன. இவற்றை மத்தியும் மாகாணமும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உள்ளது.
எல்லோரையும் மதித்து உள்ளடக்கக் கூடிய நீதியுடனான சமூகங்களை உருவாக்க நாம் யாவரும் இணைந்தால் நாட்டில் சமாதானம் உருவாகும் என்பதில் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
ஆளணி நிரப்பப்படும்.
அடுத்து வடமாகாணத்தின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் செயற்படுத்துவதற்கு ஆளணிகள் முக்கியமானவையாவன. வடமாகாணத்திற்கு தேவைப்படும் ஆளணிகள் தொடர்பாக சேவைப்பிரமாணக்குறிப்புக்களைத் தயாரித்து மாகாண சபைக்குட்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவது இன்றியமையாததாகும்.
அந்த வகையில் 2016ம் ஆண்டில் 2,005 வெற்றிடங்கள் பல்வேறு பதவிநிலைகளிலும் நிரப்பப்பட்டுள்ளன. மிகுதியாகவுள்ள வெற்றிடங்கள் சம்பந்தமாக சேவைப் பிரமாணக்குறிப்புக்கள் மற்றும் ஆட்சேர்ப்புத்திட்டத்தை தயாரித்து அவ் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு 2017ல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை மத்திய அரசினது வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவையும் உள்ளது. எனவே 2017ம் ஆண்டு மத்திய மாகாண அரசுகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது இன்றியமையாததாகும்;.
மாகாண சபைக்கு ஒதுக்கிய நிதியில் 92 % செலவழிக்கப்பட்டு உள்ளது.
2016ம் ஆண்டுக்கு அதாவது இவ்வருடம் வடமாகாணத்தின் அபிவிருத்தித்தேவைகள் மற்றும் நடைமுறைச்செலவினங்களுக்காக நிதி ஆணைக்குழுவினால் நிதி ஏற்பாடுகள் கீழ்வருமாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு கார்த்திகை மாதம் வரையான காலப்பகுதியை நோக்கும் போது மீண்டுவரும் செலவினத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 19,157.16 மில்லியன் தொகையில் ரூபா 17,522.29 மில்லியன் (92%) செலவு செய்யப்பட்டுள்ளது.
பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 475.00 மில்லியன் தொகையில் ரூபா 311.45 மில்லியன் (66%) 30.11.2016 வரைசெலவு செய்யப்பட்டுள்ளது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 3,199.3 மில்லியன் தொகையில் ரூபா 1,941.78 மில்லியன் 30.11.2016 வரையில் (60%)செலவு செய்யப்பட்டுள்ளது.
எல்லா அமைச்சுக்களையுஞ் சேர்த்தெடுத்துப் பார்த்தால் நடைமுறை முன்னேற்றம் 83% வரை நடந்துள்ளது. எனினும் சுமார் 1548 மில்லியன் எமக்கு இன்னமும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்க வேண்டியுள்ளது.
வெளிநாட்டு நிதி உதவியின் கீழான மத்திய, மாகாண நிதி ஆளுகைக்குட்பட்ட அபிவிருத்தித்திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 4,993.7 மில்லியன் தொகையில் ரூபா 2,862.51 மில்லியன் (57%) செலவு செய்யப்பட்டுள்ளது.
விவசாய , கால்நடை துறையில் பாரிய முன்னேற்றம்.
வடமாகாணத்தின் முக்கிய துறைகளை கவனத்திற்கொள்ளும்போது விவசாயத்துறையில் விவசாய உற்பத்திகளில் அதிகளவு வெளியீட்டுத்தன்மையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தரமான உயர்ந்த இனவிதை வகைகள், நவீன தொழிநுட்ப வசதிகள், காலத்தின் தேவைக்கேற்ப விவசாயிகள், விவசாயத்துறை அலுவலர்களிற்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் உட்கட்டுமான வசதிகளின் விருத்தி ஆகியவற்றின் மூலம் இவ்வருடம் கணிசமான முன்னேற்றத்தினை காணக்கூடியதாகவுள்ளது.
இதேபோல் கால்நடைத்துறையும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தக்கூடிய துறையாக காணப்படுகின்றது. நாட்டின் தேசியக்கொள்கைக்கு அமைவாக உணவுப்பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் போசாக்கான உணவு வகைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய முறையில் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள், சந்தைப்படுத்தல் வசதிகள், நவீன பால்பதனிடும் முறைகள் மற்றும் நவீன நுட்பங்கள் உள்வாங்கப்பட்டு கால்நடைத்துறையானது வடமாகாண நடுத்தர மற்றும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கச்செய்துள்ளது.
விவசாயம் மற்றும் கால்நடை ஆகிய துறைகளை மேலும் வலுவூட்டக்கூடிய வகையில் நடுத்தர மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்தியும் முக்கிய பங்காற்றுவதை இவ்விடத்தில் கூறிவைக்க வேண்டியுள்ளது.
வட மாகாணத்தில் பெரிய நீர்ப்பாசனத் திட்டமான இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டமானது துரிதமாக புனரமைப்புச்செய்யப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எதிர்காலத்திலும் இவை அனைத்தும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமைவன என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை.
கல்வித்துறையில் கவனம் தேவை.
வடமாகாணத்தில் கல்வித்துறையினை நோக்கும் போது பல்வேறு நிதிமூலங்களூடாக உட்கட்டுமான வசதிகள், நவீன தொழிநுட்ப வசதிகளை உட்புகுத்தல், தளபாடங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் கல்வித்துறைசார் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் குறிப்பிடத்தக்களவில் ஆசிரியர் பற்றாக்குறையும் வருடாந்தம் நிவர்த்தி செய்யப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் வடமாகாணத்தின் கல்வி நிலையினை ஏனைய மாகாணங்களுடன் ஒப்படும் போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவைப்பாடு இன்றியமையாததாகவுள்ளது.
சுகாதாரக்குறிகாட்டிகள் முன்னேற்றம்.
சுகாதாரத்துறையும் வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகின்றது. 2016ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினூடாக வைத்தியசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், கிராமிய சுகாதார நிலையங்கள் அபிவிருத்தி, மருத்துவர்கள் மற்றும் தாதிகளுக்கான விடுதிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களுக்கான உட்கட்டுமான அபிவிருத்திகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இம்மாகாணத்தின் சுகாதாரக்குறிகாட்டிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. எதிர்காலத்தில் வடமாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாட்டினை தொடர்ச்சியாகப் பேணும் வகையில் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவன.
7917 கிலோ மீற்றர் தூரமான வீதி புனரமைப்பு செய்ய வேண்டும்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியளிப்புக்களுக்கூடாக வட மாகாணத்தின் வீதி அபிவிருத்திச்செயற்பாடுகளும் கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இருப்பினும் வடமாகாணத்தில் காணப்படும் C மற்றும் D தரத்திலான 1,747.77 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்க வேண்டியிருப்பதுடன் 6,170.42 கிலோ மீற்றர் கிராமிய வீதிகளும் புனரமைக்கப்படவேண்டியுள்ளன. 2017ம் ஆண்டு வீதி அபிவிருத்திப்பணிகள், கிராமியப்பாலங்கள் அமைத்தல் போன்றவற்றிற்கான ஐரோட் போன்ற புதிய முதலீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறை, வீடமைப்பு போன்றவற்றுக்கு நிதி தேவை.
சுற்றுலாத்துறை, வீடமைப்பு போன்றவற்றுக்கான அதிக தேவைப்பாடுகள் காணப்படினும் எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிமூலம் சிறிய அளவிலானதான தேவைப்பாட்டினையே எம்மால் பூர்த்தி செய்ய முடிகின்றது. இவற்றிற்காக இனங்காட்டப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகும்.
இனி விதிமுறையாக 2017ம் ஆண்டிற்கான 4வது வரவு செலவுத் திட்டத்தினை ஆராய்வோமாக
2017ம் ஆண்டுக்கான நிதி.
கேட்டதில் 86.5% மாத்திரமே ஒதுக்கீடு.
கேட்டதில் 86.5% மாத்திரமே ஒதுக்கீடு.
வட மாகாணசபையில் ஒருங்கிணைந்த கட்டமைப்புக்கூடாக ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி ஆணைக்குழுவினால் 2017ம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரங்கள் வருமாறு.
வட மாகாணசபைக்கு 2017ஆம் ஆண்டுக்கு மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 19,321.73 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 2,208.38 மில்லியனும், வெளிநாட்டு-உள்நாட்டு நிதியளிப்புகளுக்கூடான கருத்திட்டங்களுக்கு ரூபா 3,409.73 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மீண்டுடெழும் செலவின நிதியீட்டமாக மத்திய அரசின் தொகுதிக்கொடையிலிருந்து ரூபா 16,476.3 மில்லியனும், மத்திய அரச சேகரிப்பு நிதியிலிருந்து ரூபா 2,300.00 மில்லியனும், மாகாணசபை வருமான சேகரிப்பு நிதியிலிருந்து ரூபா 545.00 மில்லியனும் ஒதுக்கீடாக கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறாக ரூபா 19,321.73 மில்லியன் வடக்கு மாகாண சபையின் மீண்டெழும் செலவினங்களுக்காக 2017ம் ஆண்டு பயன்படுத்தப்படும்.
மூலதன செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 2,208.38 மில்லியனில் பிரமாண அடிப்படையிலான கொடையின் கீழ் ரூபா 551.2 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நன்கொடையின் கீழ் ரூபா 1,657.18 மில்லியனும் ஒதுக்கீடாக கிடைக்கப்பெற்றுள்ளது.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 1,657.18 மில்லியனில் பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூபா 788.0 மில்லியனும், சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூபா 737.0 மில்லியனும், பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக ரூபா 120.0 மில்லியனும், முன்னுரிமைப் படுத்தப்பட்ட அவசிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூபா 12.18 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இணை நிதியளிப்புக்களுக்கூடான அபிவிருத்தித்திட்டங்களுக்கென அனுமதிக்கப்பட்ட தொகையில் பாடசாலைக்கல்வியை ஒரு அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காக ரூபா 315.0 மில்லியனும், சுகாதாரத்துறை அபிவிருத்தித்திட்டங்களுக்காக ரூபா 360.0 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வடக்கு வீதி இணைப்பு அபிவிருத்தித்திட்டத்திற்காக ரூபா 748.73 மில்லியனும், இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்திற்காக ரூபா 1,077.0 மில்லியனும், யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர்விநியோகத்துக்கும், சுகாதார மேம்பாட்டு கருத்திட்டங்களுக்குமாக ரூபா 909.0 மில்லியனும் மத்திய அரசின் நேரடியான நிதி ஆளுகையினால் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2017ம் ஆண்டுக்கு வட மாகாண சபையினால் கோரப்பட்ட நிதித்தேவையின் பிரகாரம் மீண்டெழும் செலவினத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட நிதித்தேவை ரூபா 22,329.613 மில்லியன்களாக இருந்தபோதிலும், ரூபா 19,321.737 மில்லியன்களே இம்மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப்பெற்றுள்ளது. இது கோரப்பட்ட தொகையின் 86.5% மட்டுமே ஆகும்.
இதேவேளை மூலதனச்செலவின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட மூலதன நன்கொடையின் மூலம் ரூபா 10,672.48 மில்லியன் நிதித்தேவைகள் சமர்ப்பிக்கப்பட்டபோதும் ரூபா 1,657.18 மில்லியன்களே அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது 16% ஆன நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையினை பொறுத்தவரையில் 2016ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும் போது 16%ஆன நிதி 2017ம் ஆண்டுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர்களுக்கான பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு.
ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீடாக ரூபா 6 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. இத்தொகையே 2017ம் ஆண்டும் வழங்கப்படும்.
குறித்த 6 மில்லியன் ரூபாவில் ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை 2017ம் ஆண்டின் சித்திரை மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் திட்டங்களில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அம் மாற்றங்களுக்கான திட்டத்தினை ஆனி மாதத்தின் இறுதிப் பகுதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் எந்தவிதமான திட்ட மாற்றங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. காரணம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் 2016ம் ஆண்டில் பல திணைக்களங்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் உறுப்பினர்களால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படாது நிதி இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் என்னிடம் உதவி கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பொருத்தமானவை தெரிவு செய்யப்பட்டு அந்நிதி அனைத்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படும்.
மாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்கான பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீடான ரூபா 6 மில்லியனை அதிகரித்துத் தருமாறு கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் அக்கோரிக்கை என்னால் ஆராயப்பட்டு வழங்கப்படவிருக்கின்ற ரூபா 6 மில்லியனுக்கு மேலதிகமாக தலா ஒரு மில்லியன் ரூபாவினை ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் இதற்காக ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினரும் காத்திரமான ஒரு திட்ட முன்மொழிவை அதாவது அவர்களுடைய வழமையான 6 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளும் சிறிய திட்டங்களைப் போல் இல்லாது தனி ஒரு திட்டமாக குறித்த ஒரு மில்லியன் ரூபாவில் மேற்கொள்ள உத்தேசித்துள்ள அபிவிருத்தித் திட்டத்தைத் தர வேண்டும்.
இதனைப் பல உறுப்பினர்கள் சேர்ந்தும் ஒரு திட்டமாகச் சமர்ப்பிக்கலாம் (உதாரணம் :- வீதி அமைத்தல்). அவ்வாறான திட்டத்தினை சமர்ப்பித்தால் மட்டுமே நிதி ஒதுக்குவது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். திட்டமானது குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் மேலதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது
திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் எந்தத் துறைக்கு ஊடாக அதனை முன்னெடுப்பதற்கு திட்டத்தினை சமர்ப்பித்துள்ளார்களோ அத்துறைக்கு ஊடாக சமர்ப்பித்த உறுப்பினரின் பெயரில் அத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மேற்குறிப்பிடப்படும் திட்ட முன்மொழிவானது 6 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 2017ம் ஆண்டின் வைகாசி மாதத்தின் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் எந்தவிதமான திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
உறுப்பினர்கள் திட்டங்களைத் தயாரிக்கும் முன்னர் உதாரணமாக :- கோழி வளர்ப்பு, வீதி அமைத்தல் அல்லது திருத்துதல், கணனி கொள்வனவு செய்தல் போன்றவற்றை, துறை சார்ந்த திணைக்களங்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மதிப்பீடுகளைப் பெற்ற பின்னர் திட்டத்தினைத் தயாரித்தால் பின்னர் அவற்றை மாற்றவேண்டிய தேவை ஏற்படாது என்பதுடன் அவற்றை இலகுவாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
உறுப்பினர்கள் கூடிய தொகையை பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீடாக எதிர்பார்த்திருப்பதை நான் அறிவேன். ஆனால் தரப்படும் நிதிகளை நாங்கள் முன்கவனத்துடன் செலவழிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”
என்றார் ஒளவையார். தரப்படும் நிதி ஒதுக்கீட்டில் ஒரு தொகைப் பணத்தைச் சேமித்து வைத்து அவசர தேவைகளுக்குப் பயன் படுத்துவதில் பிழையில்லை என்பதே எமது கருத்து. உதாரணத்திற்கு புனர்வாழ்வளித்தல், மகளிர் விவகாரம் போன்றவற்றிற்கு எமக்குப் பணம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. இந்த மிகுதிப் பணத்தில் ஒரு பகுதியையே அவற்றிற்குப் பயன்படுத்த இருக்கின்றோம்.
குறித்த பணம் அத்தியாவசிய அல்லது அவசர தேவைக்குப் பயன் படுத்தப் படுகின்றதா என்பதைக் கூர்ந்து அவதானித்து வருவது எங்கள் எல்லோரதும் பொறுப்பாகும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்திற்கு அனைத்து மாகண சபை உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக பணம் வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்காது ஆறு மில்லியனை உரிய பயனாளிகளுக்குச் சென்றடைய வழி அமைப்போமாக!
2017ம் ஆண்டில் மேலும் பல நிதிமூலங்களூடான புதிய திட்டங்கள் உள்வாங்கப்படவுள்ளன.
ஜப்பான் அரசின் ரூபா 3,200.00 மில்லியன் உதவியினூடான சுநுயுஊர் திட்டம் – இத்திட்டமானது ஐந்து ஆண்டுகளை கொண்டதாகும் (2016-2020). கிராமிய வீதிகள், நீர்ப்பாசன வசதிகள், சிறந்த குடிநீர் வசதிகள் ஆகிய திட்டங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
ஒருங்கிணைக்கப்பட்ட வீதி அபிவிருத்தித்திட்டம் (i-சுழயன) – 683.02 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.
உலக வங்கியின் நிதியீட்டத்தின் கீழ் 1,000 கிராமிய பாலங்களை அமைக்கும் திட்டத்தில், வடமாகாணத்தில் 87 பாலங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின் றன.
விவசாயத்துறையினை நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் 25.0 மில்லியன் மதிப்பீட்டில் ஐந்து ஆண்டுத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூபா 20.0 மில்லியன் தொகையில் வடமாகாணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் நிறுவனங்களின் இயலளவை அபிவிருத்தி செய்தல் எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வினைத்திறனுடன் நடவடிக்கையை முன்னெடுப்போம்.
எனவே வரவு செலவுத்திட்டத்தின் மூலமான நிதி ஏற்பாடுகளுக்கமைய சிறந்தமுறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும்.
வரும் புத்தாண்டில் கூடிய வினைத்திறனுடன் எமது நடவடிக்கைகளைக் கொண்டு நடத்த யாவருடைய ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
உறுப்பினர்கள் பல தேவைகளை வலியுறுத்தி வருகின்றார்கள். அவை மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவன. முதலமைச்சரின் அமைச்சின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பின்னர் ஆராயப்படும். என மேலும் தெரிவித்தார்.
Spread the love