குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கயஸ் வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், கயஸ் வாகனத்தில் பயணித்த ஏனையோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த 10 பேரது உடல்களும் ; சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனத்தின் சில்லு காற்று போனதனால் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்று உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.