304
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் மூன்று வேளையும் பிரியாணி சாப்பிட்டோம். தற்போது ஒரு வேளை கஞ்சி குடிக்க கூட வழியின்றி கஷ்டப்படுகின்றோம். என இராமேஸ்வர மீனவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவுக்கு இந்திய இராமேஸ்வரத்தில் இருந்து வந்திருந்த போது ஊடகவியலாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கையில் போர் முடிவடைந்து தமிழ் மக்கள் தற்போது சந்தோஷத்துடன் வாழ்கின்றார்கள். அவர்கள் இப்போது போல் எப்போதும் வாழ வேண்டும். இலங்கையில் போர் நடைபெற்று கொண்டிருந்த கால பகுதியில் நாம் சுதந்திரமாக கடலுக்கு சென்று மீன் பிடியில் ஈடுபட்டோம்.
அதன் மூலம் அதிக வருவாயை பெற்று மூன்று வேளை பிரியாணி சாப்பிட கூடிய நிலையில் உள்ளோம். தற்போது நாம் கடலுக்கு செல்ல பயப்படுகின்றோம். தொழிலுக்கு சென்றால் எல்லை தாண்டி வந்து விட்டாய் என கூறி இலங்கை கடற்படையினர் எம்மை கைது செய்து சிறையில் அடைக்கின்றார்கள். எமது படகுகளை பறிமுதல் செய்கின்றார்கள் அதனால் நாம் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் நாம் மிகுந்த கஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளோம். ஒரு வேளை கஞ்சி குடிக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வினை இரண்டு நாட்டு அரசாங்கமும் ஒத்துழைத்து வழங்க வேண்டும்.
எதிர்வரும் 2ஆம் திகதி ஒரு பேச்சு வார்த்தை நடாத்த இருக்கின்றார்கள். அதன் மூலம் இலங்கையில் உள்ள எமது 123 படகுகளையும் விடுவிக்க வேண்டும் அதேபோன்று மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். என கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் நேர்த்தி வைத்து விட்டு செல்கின்றோம். எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள திருவிழாவில் நாம் நன்றி திருபலியில் கலந்து கொள்வோம் என நம்புகின்றோம். என தெரிவித்தார்.
Spread the love