குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தை கவிழ்ப்பது வெறும் கனவாகும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்ப்பதாக சிலர் செய்து வரும் பிரச்சாரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் 2017ம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக சிலர் கனவு காண்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் கவிழும் என கனவு காண்போருக்கும், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சிப்போருக்கும் தோல்வியே மிஞ்சும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த அரசாங்கத்தை எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் அசைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் பயணத்தை மேற்கொள்ளும் எனவும் அதனை தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 comment
‘2017 ம் ஆண்டில் நடப்பு ஆட்சியைக் கவிழ்ப்பேன்’, என்று திரு. மகிந்த ராஜபக்ஷ சூளுரைத்தது கனவாகவே இருக்கட்டும்! அதுதான் எமது விருப்பமுமாகும்! இங்கு அதுவல்ல பிரச்சனை! ராஜபக்ஷர்கள் ஆட்சிக் கவிழ்ப்பு மேற்கொள்ளப் போவதாக கூறிச் சதி செய்தாலும் சரி, பௌத்த மதபோதகர் வேஷமணிந்த இனவெறியர்கள் சிறுபான்மைத் தமிழரையும் இஸ்லாமியரையும் நாட்டை விட்டுப் போகும்படி இனவெறிக் கூச்சலிட்டாலும் சரி, அவற்றைக் கண்டுகொள்ளாத, நல்லாட்சியாளர்கள் உட்பட எல்லாச் சிங்கள அரசுகளும், தமிழர் தமது உரிமைகளைக் கோரினால் மட்டும் நிலத்துக்கும் வானத்துக்குமாகத் தாவுவதுதான் ஏனென்று புரியவில்லை?
ஆட்சிக் கவிழ்ப்புச் சதி செய்பவர்களைக் கைது செய்ய இலங்கைச் சட்டத்தில் இடமில்லையா அல்லது அதைச் செய்யும் துணிவு ஆட்சியாளர்களுக்கு இல்லையா?
பல கோடி ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தைச் செலவழித்துத் தேர்தல் மூலமாக, மக்கள் தமக்கெனத் தெரிவு செய்த மாகாண சபைகள் நிராகரித்தாலும், ‘அபிவிருத்திகள் விஷேட அமைச்சுப்பதவி மூலம் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும்’, என ஒரு அமைச்சர் சூளுரைக்கின்றார்! தமது மாகாணங்களில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதை மாகாண அரசுகளோ மக்களோ ஏன் வெறுக்கப் போகின்றார்கள்? அப்பிரேரணையில் காணப்படும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சித் திட்டங்களைத்தான் எல்லா மாகாண சபைகளும் எதிர்க்கின்றன! இது கூடப் புரியாதவர்கள் மக்களுக்குச் சவால் விடுவது, ‘கடந்த கால ஆட்சியாளர்களின் நிலையை இவர்கள் மறந்துவிட்டதையே காட்டுகின்றது’?
போகின்ற போக்கைப் பார்த்தால், ஒரு நாள் ஓநாய் வரப்போவது உறுதிதான் போலும்?