கனேடிய வெளிவகார அமைச்சரிடம் வடக்கு முதல்வர் – குளோபல் தமிழ் செய்தியாளர்
நாட்டின் ஒருமைப்பாட்டை எதிர்க்கவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தமிழர்களாகிய எங்களின் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்றே தாம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டைனிற்கு இது தொடர்பில் எடுத்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் நேற்று யாழில் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டில் உள்ள ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கில் அபிவிருத்தியின் உத்வேகம் குறைந்து காணப்படுவதாகவும் வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் உள்ள பல காணிகள் இராணுவத்திடம் இருப்பதால் அந்த காணி உரிமையாளர்கள் இடம்பெயர்ந்த நிலையில் வசிப்பதாக குறிப்பிட்ட முதல்வர் இதுபோன்ற காரணங்களால் மக்கள் 26 வருடங்களாக அகதிமுகாங்களில் வசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரிவினை வாதத்தை ஆதரிக்கவில்லை என்று கனேடிய வெளிவிவகார அமைச்சருக்கு சுட்டிக்காட்டியதாக தெரிவித்த முதல்வர் எமது தனித்துவமான மொழி, மதம், பண்பாடு, பாரம்பரியம், வாழ்க்கை முறை என்பன நாட்டின் ஏனைய மக்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவத்தை கொண்டன என்றும் கூறியுள்ளார்.
நீங்கள் தமிழர் எனக்கூறுவதிலா? இலங்கையர் எனக்கூறுவதிலா பெருமையடைகிறீர்கள் என தன்னிடம் வெளிவிவகார அமைச்சர் கோரியபோது எங்கள் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியதாக தெரிவித்த சி.வி, வட மாகாணத்திற்கு வெளியில் இருந்து இரகசிய திட்டங்களின் மூலம் வெளி மாகாணத்தினர் கொண்டு வந்து குடியேற்றப்படுவது தமது தனித்துவத்தை அழிக்கும் செயல் என்றும் தெரிவித்தார்.