குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபாலவும், அணியின் முகாமையாளர் சரித் சேனாநயாக்கவும் முரளிதரனை கடுமையான விமர்சனம் செய்திருந்தனர்.
முரளிதரன் சொந்த நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், அவுஸ்திரேலிய அணிக்கு சார்பாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு முரளிதரன் நேற்றைய தினம் பதிலளித்திருந்தார்.
மேலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான மஹல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் முரளிக்கு சார்பாக குரல் கொடுத்துள்ளனர்.
முரளிதரன் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கட் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மஹல தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முரளிதரன் தன்னைப் பற்றி விளக்கவோ நியாயப்படுத்தவோ வேண்டியதில்லை எனவும் அவர் நாட்டுக்காக அளப்பரிய சேவை ஆற்றியவர் எனவும் மஹல தெரிவித்துள்ளார்.
ஒரு சம்பவத்தின் இரண்டு பக்கங்களை கண்டறியும் அதன் பின்னரே கருத்து வெளியிட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முரளி நாட்டுப் பற்றுடையவர் என அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் உதவி கோரியிருந்தால் முரளி இலவசமாகவே தனது சேவையை வழங்கியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நாட்டுக்கும் சேவைகளை வழங்க அவருக்கு உரிமையுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முரளிதரன் தொடர்பில் நாடு பெருமிதம் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் பிரச்சினை இருந்தால் முரளியுடன் பேசி அதனை தீர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முரளி வெளிநாடு ஒன்றுக்கு பயிற்றுவிப்பது தவறில்லை என முன்னாள் அணித் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தம்மை பயிற்றுவிக்க அழைத்திருந்தால் தாம் சென்றிருக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி அளிப்பது என்பது அவரர் தனிப்பட்ட சுதந்திரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகம் தவறானது எனவும் அங்கு விளையாட்டு பற்றி தெரிந்தவர்கள் இல்லை எனவும் முதலளிமாரே இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சென்றால் இலங்கை கிரிக்கட் துறை பாரிய பின்னடைவை எதிர்நோக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தொழில்சார் ரீதியில் தமது சேவையை முரளிதரன் வழங்குவதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என தற்போதைய தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.