Home கட்டுரைகள் 1956- அறுபதாண்டுகளின் பின்னும் தாக்கம் செலுத்தும் தனிச்சிங்கள சட்டம்!

1956- அறுபதாண்டுகளின் பின்னும் தாக்கம் செலுத்தும் தனிச்சிங்கள சட்டம்!

by admin

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு தவறவிடப்பட்ட எனது அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தேன். என்னிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்தவர் ஒரு சிங்களப் பெண் பொலிஸார். கொச்சையான தமிழில் உரையாடியபடி எனது வாக்மூலுத்தை சிங்களத்தில் எழுதினார். அந்த சிங்கள முறைப்பாட்டின் நடுவில் எனது தமிழ் கையெழுத்தை இட்டேன். இலங்கையில் தமிழ்மொழியின் நிலமையை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் வெளிப்பாடாக 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே வடகிழக்கை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது.

ஒரு இனத்தின் அடிப்படை அடையாளமும் உரிமையும் மொழி.  அதனை மறுக்கும் விதமாகவும் இலங்கையில் இன முரண்பாடுகளுக்கு வித்திட்ட சம்பவங்களில் ஒன்றாகவும் இன மேலாதிக்கத்தை மேற்கொண்ட சம்பவங்களில் ஒன்றாகவும் நடந்த தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்ட கடந்த ஜூன் 5உடன் அறுபது வருடங்கள் ஆகும். அதாவது ஜூன் ஐந்து 1956இல் தனிச் சிங்கள சட்டம் அன்றைய இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்டது. அன்றைய நாள் இலங்கையின் பாராளுமன்றத்தில் சிங்களம் மட்டுமே அரச கரும மொழி என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசிலும் இலங்கைப் பாராளுமன்றத்திலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது.

இலங்கையில் பெரும்மையானரான சிங்கள மொழிபேசும் மக்கள் 70 வீதமும் சிறுபான்மையினரான தமிழ் மொழி பேசும் மக்கள் 30 வீதமமும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையின் ஆட்சி மொழியை சிங்கள மொழியாக்கிய சட்டம் சிறுபான்மை தமிழ் பேசும் மக்களினால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர், பாராளுமன்றம் ஒன்றின் மூலம், பிரதிநிதிகள்சபை ஒன்றின் மூலம், தமிழ் மொழிக்கு எதிரான சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டு இனப் பகையை ஏற்படுத்திய, வரலாற்று வடுவை ஏற்படுபடுத்திய, கரைபடிந்த நிகழ்வாக தனிச் சிங்கள சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.

தனிச்சிங்கள சட்டத்தை கடுமையாக எதிர்த்த இடதுசாரிகள் அக் காலத்தில் இது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் பிற்காலத்தில் நடந்ததேறிய தீர்க்கசரினங்களாகின. “திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிறுபான்மையினர் ஆழமாக எண்ணுவார்களெனின் அது எதிர்ப்பையும் போராட்டத்தையும் விளைவிக்கும். நான், இனக் கலவரம் எனும் ஆபத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைவிடப் பாராதூரமான ஆபத்தாக இந்நாடு பிரிவினையை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர், அம்மக்கள் தமக்கு மாற்றமுடியாத அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் இந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது” என்று லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லெஸ்லி குணவர்த்தன, 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.

அத்துடன் ‘உங்களுக்கு இருமொழிகள் – ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி – இரு நாடு வேண்டுமா’ என்று வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அன்று நாடாளுமன்றத்தை அதிரப் பண்ணினார். “சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை, அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா? எமக்கு ஓர் இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா? மொழிப் பிரச்சினை என்ற வெளித் தோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.நீங்கள் தமிழர்களை பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும்” என்று தனிச்சிங்கள சட்டம் பற்றி அவர் எச்சரித்தார்.

ஆனால் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது. மொழியுரிமை என்ற பிரச்சினையை ஏற்படுத்தி, அதனை இனப்பிரச்சினையாக்கி இலங்கை தீவில் பெரும் அழிவுகளும் இடர்களும் ஏற்படுவதற்கு பண்டாரநாயக்காவின் தனிச்சிங்கள சட்டம் அடிப்படையானது. பௌத்த, சிங்கள கொள்கைமீதான தனது விசுவாசத்தை காட்ட முற்பட்ட அவரது செயல் மாபெரும் பிரச்சினைகளுக்கு வித்திட்டது. தனிச்சிங்கள சட்டம் தவறான செயல் என்று தற்போது, பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிக்கா பண்டார நாயக்கா ஏற்றுக் கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழர்களுக்கு சம உரிமையை மறுக்கும் செயற்பாட்டுக்கு அதுவே அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். வடகிழக்கில் இருந்த அரச அலுவலங்களில் முற்றுகைப் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ் தலைவரான தந்தை செல்வநாயம் இதற்கு எதிராக பலத்த கண்டனங்களை வெளிப்படுத்தி போராட்டங்களை முன்னெடுத்தார். தமிழ் மக்களை சிங்கள மயப்படுத்தி அவர்களின் மொழியை அழிக்கும் இந்தச் செயல் தமிழர்களின் விடுதலை கோரிய, தனியாடு கோரிய பிற்காலப் போராட்டங்களுக்கும் வித்திட்டது எனலாம். தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து, பண்டாரநாயக்கா அரசு 1958இல் திருத்தச் சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்தது.

அதில், தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பாடசாலைகளில் போதனாமொழியாகத் தமிழ், தமிழர்கள் அரச சேவையில் சேர்வதற்கான போட்டிச் சோதனைகள் தமிழில் நடத்தப்படல், அரச நிறுவன தொடர்பு மொழி தமிழ், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நடவடிக்கைகள் தமிழில் இடம்பெறல் என்பன உள்ளடக்கப்பட்டன. இன்றுகூட வடகிழக்கு மாகாண அரசுகளில்கூட சிங்கள மொழியில் படிவங்கள், கடிதங்கள் அனுப்பும் அளவில் சிங்கள மொழியாக்கம் உள்ளமையால் இந்த திருத்த சட்டமூலம் ஒரு கண்துடைப்பாகவே காணப்பட்டது.

வடகிழக்கு மக்களுடன் வடகிழக்கிற்கு வெளியில் உள்ள தமிழ் பேசும் மக்கள் இதனால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகினார்கள். மருத்துவமனைக்குச் சென்று ஒரு மருத்துவரிடம் தனக்கு உள்ள நோயை புரிய வைக்க முடியாமலும் காவல் நிலையம் ஒன்றில் சென்று தனக்குள்ள முறைப்பாட்டை தெரிவிக்க முடியாத நிலையும் ஏற்படும்போது, இது எனது நாடா? இங்கு நடப்பது எமக்கான ஆட்சியா போன்ற கேள்விகள் எழுவது இயல்பானது. இன்று வடகிழக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும், வடகிழக்கில் உள்ள வைத்தியசாலைகளிலும் இப்படியான நிலமை காணப்படுவதற்கு இந்த சட்டமே காரணமாகும்.

இதன் காரணமாகவே நாட்டில் இரு மொழி அரசுகளுக்கான தேவை உருவானது. இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பிரிந்து செல்லவும், தமது பாரம்பரியயமான நிலத்தில் தம்மை தாமே ஆளவும் நிர்பந்தித்த சட்டம் இதுவாகும்.பண்டைய காலத்தில் வடகிழக்கில் மாத்திரமின்றி வடகிழக்கிற்கு வெளியிலும் தமிழ் ஆட்சி மொழியாக இருந்திருக்கிறது. இந்த நிலையிலேயே தனிச் சிங்கள சட்டம் தமிழை ஆட்சி மொழியாக கொண்ட தமிழ் அரசு ஒன்றுக்கான தேவையை உருவாக்கியது. வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழை ஆட்சி மொழியாக கொண்ட தமிழ் தேசம் ஒன்று தமிழ் அரசியல் தலைமைகளாலும் பின்னர் அது தமிழீழமாக போராளிகளாலும் கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த காலத்தில் வடகிழக்கில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ அரசில் தமிழ்மொழியில் ஆட்சி  சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ காவல்துறை போன்ற தமிழ் அரச நிறுவாகங்கள் உருவாக்கப்பட்டன. தனிச் சிங்கள சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தமிழ் ஆட்சி நிர்வாக நடைமுறைகள் தமது பாரம்பரிய ஆட்சி முறைகளை நினைவுபடுத்தின. ஒரு மக்கள்கூட்டம் தாம் பேசும் மொழியிலான நிர்வாகம் மற்றும் ஆட்சியையே விரும்புவர். இலங்கையில் தற்போதும் சிங்களத்தில் சித்தியடைந்து தடை தாண்ட வேண்டிய நிலையிலேயே அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர்.

இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு இதுவரையில் ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் பலர் இதில் சித்தியடையாத நிலையில் உள்ளதுடன் இந்த தடை தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகின்றது. இனப்பிரச்சினைக்கும் மொழிப் பிரச்சினைக்கும் உள்ளான இரு சமூகங்களினால் தாண்ட முடியாத தடையாகவும் பிரச்சினையாகவும் இது இருக்கிறது என்பதே இங்கு வெளிப்படுகிறது. இனப்பிரச்சினையை தீர்த்தல், இனங்களின் சுய உரிமைகளை வழங்குதல், இனங்களின், மொழிகளின் பாதுகாப்பை வழங்குதல் என்பதே இலங்கையில் ஒரு மொழி நல்லிணக்கத்தை உருவாக்கும்.

1958இல் தனிச் சிங்கள சட்டம் தொடர்பில் திருத்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டாலும், பின்னர் இலங்கையின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அது மெய்யான மனநிலையால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் வடகிழக்கிலும் வடகிழக்கிற்கு வெளியிலும் தமிழ் மக்கள் மொழி ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. இன சமத்துவமின்மையின் வெளிப்பாடே மொழிப் பிரச்சினை. தமிழ் மொழியில் அலுவல்களில் ஈடுபடுபவர்களும், தமிழ் மொழியில் நிறுவாகங்களுக்கு இடமமாளிக்காத, அலுவலகங்கள், நிறுவனங்களில் தமிழ் சிங்கள சமத்துவம் –  இன சமத்துவமற்ற நிலை உள்ளவரை மொழிப்பிரச்சினை என்பது இலங்கையில் தொடரும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More