குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-
கூட்டு எதிர்க்கட்சியின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விடுப்பதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டே நீதிமன்றம் இவ்வாறு நிராகரித்துள்ளது.
கொழும்பு கோட்டே காவல்துறையினர் குறித்த பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் போராட்டம் நடத்தியமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் உரிய முறையில் சுமத்தப்பட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லை என நீதவான் லங்கா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பிழையானது எனவும், இவ்வாறான பிழையான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நீதவான் வலியுறுத்தியுள்ளார்.
பிழையான செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் எதிர்ப்பை வெளியிடுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.