தேர்தல்முறை மாற்றங்களில்
முஸ்லிம் சமூகத்தின் நலனை வென்றெடுப்பதற்கு
வேறுபாடுகளை மறந்து முஸ்லிம்
சமூகம் செயற்படவேண்டும்
காத்தான்குடி பள்ளிவாசலில்
முஸ்லிம் கவுன்சில் தலைவர்
என்.எம்.அமீன்
தேர்தல்முறை மாற்றம் அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பவற்றை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் நலன்களை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் வேறுபாடுகளை மறந்து செயற்படத் தவறினால் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமையலாம் என முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாசலில் வெள்ளியன்று ஜும்ஆத் தொழுகையின் பின் சமகால முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
நாட்டின் அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேர்தல் முறை தொடர்பாக மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் அரசுக்குள்ளே மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த மாற்றங்களின் போது ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களதும் நலனைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களுக்கப்பாலிருந்து செயற்படுவது அவசியமாகும். அரசு முன் வைக்கவுள்ள தேர்தல் முறை குறித்து இரு பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முன் வைத்த பிரேரணைகளை அரசியலமைப்புத் திட்ட வழிகாட்டல்குழு நல்லாட்சி அரசில் முஸ்லிம்களது நலன்கள் சரியாகக் கவனத்திலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்ற ஒரு கருத்து சமூகத்தின் மத்தியில் நிலவி வருகிறது. இந்த அரசினைப் பதவிக்குக் கொண்டு வருவதற்கு முஸ்லிம்கள் 95 சதவீதமான ஆதரவினை வழங்கியுள்ளார்கள். அப்படியிருந்தும் முஸ்லிம்களது தேவைகள் நிறைவேற்றுவதில் தாமதம் நிலவுகிறது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் 21முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தும் தொழில் வாய்ப்புக்களை வழங்குவது உட்பட்ட விடயங்களில் முஸ்லிம்களது நலன்கள் சரியாக கவனிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வில்லை என்றும் கூறப்படுகின்றது.
தேர்தல் முறை மாற்றத்தில் பிரதான கட்சிகளது நலனைப்பேணுவது குறித்தே கூடுதலான அக்கறை காட்டப்படுவதாகவும் கூறப்படுகின்றது. புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படுமாயின் முஸ்லிம்களது பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் 10க்குக் குறையலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்குக்கு வெளியே முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையலாம் எனக் கூறப்படுகின்றது.
முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இந்த விடயத்தில் மிக விழிப்பாக இருக்க வேண்டும். சிவில் அமைப்புக்கள் இந்த விடயங்களில் பலத்த அழுத்தத்தைக் கொடுப்பது அவசியமாகும்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிதரப்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதிகூட இல்லாமை துரதிஷ்டவசமாகும். முஸ்லிம் சமூகத்துக்கு நடக்கும் அநீதிகள் பாராளுமன்றத்தில் எட்டாதிருக்கின்றது.
கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் வெறுத்த சக்திகளை முஸ்லிம் சமூகம் அரவணைக்க முற்படுவதேன் என்பது பற்றி அரசு தேடிப்பார்க்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம் தொடர்பாக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படாதுள்ளது. மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாகக் கூட கல்வி அமைச்சு மௌனம் சாதித்துவருவதாகக் குற்றச் சாட்டுகள் எழப்படுகின்றன.
இந்த விடயங்களில் அரசினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகளது துரித செயற்பாட்டினை சமூகம் எதிர்பார்க்கின்றது. பல விடயங்கள் பற்றி அவர்கள் பேசினாலும் கூட பிரதிபலன்கள் குறைவாகவே கிடைக்கின்றதனைக் காணக் கூடியதாகவுள்ளது.
தமிழ் சமூகங்களது விடயங்களில் காட்டப்படும் அக்கறை முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் காட்டப்படுவதில்லை என்ற ஒரு குறையும் சமூகத்தின் மத்தியிலும் காணப்படுகின்றது.
சமூகத்தின் தேவைகளில் புறக்கணிப்பு தொடர்வது இளைய தலைமுறையினருக்கு தவறான சமீக்ஞையை வழங்கலாம்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த அரசு முன் வைத்திருந்த முறையினால் கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக் காட்டிய பின் மீண்டும் உள்ளூராட்சித் தேர்தல் முறையை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மூலமாவது முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் அக்கறை காட்ட வேண்டும்.
சிறுபான்மை சமூகங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியமானது. உள்ளூராட்சி மன்றங்களிலோ, மாகாண சபைகளிலோ, பாராளுமன்றத்திலோ பிரதிநிதித்துவம் இருப்பது சமூகத்துக்குரிய பங்கினை வென்றெடுப்பதற்கு உதவியாக அமையும். எனவே, இந்த விடயத்தில் சமூகம் கூடுதலான அக்கறை காட்ட வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வித்தரம் மீண்டும் குறைந்து செல்கின்றதா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. வெளிநாட்டுத் தொழில் மோகம் காரணமாக ஆண்கள் உயர்கல்வி பெறுவதனைக் கைவிட்டு புலம் பெயர்ந்து தொழில்களைச் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்த்தால் கூடுதலாகப் பெண்களே சித்தி பெறுகிறார்கள். அரசு தொழிகளில் கூட முஸ்லிம் ஆண்களில் விகிதாசாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சாதாரண தொழில்களை நாடிச் செல்லும் எண்ணம் சமூகத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள நெருக்கடி நிலை நீடித்தால் எமது இளைஞர்களுக்கு நாடு திரும்ப வேண்டியேற்படலாம். எனவே, ஆண் பிள்ளைகளுக்குக் கூடுதலான கல்வி அறிவு வழங்குவது குறித்து சமூகம் கூடுதலாகச் சிந்திக்க வேண்டும். தொழில் தகைமையுடையவர்களாக எமது பிள்ளைகளை மாற்றினால் உலகில் எங்கும் சென்று வாழும் சூழல் ஏற்படும். இன்று திறமை ஆற்றலுள்ளோருக்கு உலகின் கதவு திறக்கப்பட்டுள்ளது. சமூகம் இது பற்றி சிந்திக்க வேண்டும்.
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி முதல் பத்து இடங்களில் ஒரு முஸ்லிம் மாணவர் இல்லை. இது சமூகத்தின் கல்விநிலை எங்கே இருப்பது என்பதனைக் காட்டுகின்றது.
அரச துறையில் மூன்று சதவீதமான சிறுபான்மையினர்களே இருக்கிறார்கள். குறைந்த பட்சம் இன விகிதாசாரத்தைப் பேணியாவது தொழில்வாய்ப்புக்கள் வழங்கும் முறையை ஏற்படுத்துவதற்கு சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்துக்குள் தீவிரவாதப்போக்கு அதிகரித்து வருவதாக பெரும்பான்மை சமூகத்தினர் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். தமது சமயக் கடமைகளை சீராகச் செய்யும் போது அவற்றைத் தீவிரவாதமாக நோக்குகிறார்கள். இது தொடர்பாக விளக்கங்களை வழங்குவதற்கு முஸ்லிம் சமூகத்தின் கையில் ஊடகங்கள் இல்லை. தப்பபிப்பிராயங்களைக் களைவதற்கு முஸ்லிம்கள் மத்தியில் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் வெளிவரவேண்டும். தொலைக்காட்சி சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதே நேரம் முஸ்லிம்களுக்காக வெளியிடப்படும் ஊடகங்களுக்காக சமூகம் கைகொடுத்து உதவவேண்டும். இன்று முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை முஸ்லிம் ஊடகங்களே வெளியிட்டு வருகின்றன. முஸ்லிம்களது பிரச்சினைகள் உலகுக்குச் சொல்வதற்கு முஸ்லிம் ஊடகங்களே காரணமாக இருக்கின்றன. இந்த ஊடகங்களுக்கு விளம்பரங்கள் வழங்குவதோடு, அவற்றை வாங்கிப் படிப்பதற்கு சமூகத்தை தூண்ட வேண்டும். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.