யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்டையின் தேவேந்திரமுனை வரையிலான நடைபவனி, நான்காம் நாளாக இன்று 09-10-2016 கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியை வந்தடைந்துள்ளது.
காராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் விசேட நடைபவனியொன்று கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை புனித சேவியர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது
தேவேந்திரமுனை வரை 28 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நடைபவனி யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் ஆரம்பமாகி, மிருசுவில், எழுதுமட்டுவாள், முகமாலை, புதுக்காடு, கரந்தாய் ஊடாக இயக்கச்சியை வந்தடைந்துள்ளது.
உடலில் ஏற்பட்ட புற்றுநோயைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடைபவனி, மக்கள் மனங்களில் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள சந்தேகத்தை அகற்றுவதற்கு உதவும் என நடைபவனியை ஆரம்பித்து உரையாற்றும்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தெய்வேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை வரை மேற்கொள்ளப்பட்ட நடைபவனியில் சேகரிக்கப்பட்ட இரண்டு தசம் 6 மில்லியன் டொலர் நிதியில் யாழ். தெல்லிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாகவே மாத்தறை – கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு சுமார் 5 மில்லியன் டொலர்களை சேகரிக்கும் நோக்கில், கடந்த வியாழக்கிழமை காலை பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரையிலான பேரணி ஆரம்பமாகியது.
இன்றையதினம் இயக்கச்சியை வந்தடைந்த பேரணி நாளை இரணைமடு பகுதியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.