குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது என சுவிட்சர்லாந்தின் சபாநாயகர் Christa Markwalder தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் தமக்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளதாகவும் அனைத்து கட்சிகளினதும் சிவில் சமூகத்தினதும் கருத்துக்களை உள்ளடக்கி அரசியல் சாசனத்தை அமைக்க வழியமைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிகவும் வெற்றிகரமான அரசியல் சாசனமொன்று உருவாக்கப்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர் பாரியளவிலான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகவும் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த பொருளாதார உறவுகள் காணப்படுவதாகவும் இன்னமும் மேம்படுத்த சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.