189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
புகைத்தல் பொருட்களின் விற்பனை தெல்லிப்பளை சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பா.நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழில்.புகையிலை உற்பத்தியினை விவசாயிகள் கைவிட வேண்டும். தற்போது யாழ்.மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பல விவசாயிகள் புகையிலை உற்பத்தியினை கைவிட்டு உள்ள போதிலும் சில இடங்களில் சில விவசாயிகள் மாத்திரமே உற்பத்தியினை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களும் அதனை கைவிட்டு மாற்று பயிர் செய்கைகளை செய்ய முன் வரவேண்டும்.
புகையிலை பண பயிர் என சிலர் கூறுகின்றார்கள். மற்றவர்களுக்கு கேடு தரும் பயிர்செய்கையை செய்து தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? பண பயிர்செய்கையாக மிளகாய், மஞ்சள். வெங்காயம் போன்றவற்றையும் செய்யலாம். புகையிலை பாவனையால் வாய் புற்றுநோய் ஏற்படுகின்றது. அவ்வாறு புகையிலை பாவனையால் வாய் புற்றுநோய்க்கு உள்ளானவர்கள் பெரும்பாலனவர்கள் வடமாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக்கபட்டு உள்ளனர்.
அதேவேளை புகைத்தல் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் போது அவற்றின் பாதிப்பு தொடர்பான விளக்கப்படம் 80 வீதம் காட்சி படுத்தப்பட வேண்டும் எனும் சட்டம் அமுலில் இருக்கின்றது. அந்நிலையில் புகைத்தல் பொருட்களை சில்லறை விலைக்கு விற்பனை செய்யும் போது காட்சி படுத்தப்படுவதில்லை. ஏனெனில் புகைத்தல் பொருளின் பெட்டிகளில் மாத்திரமே பாதிப்பு விளக்க படங்கள் இருக்கும். சில்லறை விலைக்கு விற்பனை செய்யும் போது இருக்காது. எனவே புகைத்தல் பொருளான சிகரட் போன்ற பொருட்களை சில்லறை விலைக்கு விற்பனை செய்யும் போது அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேபோன்று வெற்றிலை கூடு விற்பனை செய்யும் போது அதனுள் புகையிலை இருந்தால் நிச்சயமாக பாதிப்பு படங்கள் விற்பனை செய்யும் வெற்றிலை கூட்டின் மீது காட்சி படுத்தப்பட்டு இருக்க வேண்டும். இதேபோன்றே பீடி கட்டுகளிலும், பீடி கட்டுகளில் விளக்க படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
இதேவேளை புகை பிடிப்பவர்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் விசாலமான பரப்பளவு கொண்ட இடமாகவும், 30க்கு குறையாத ஆசனங்கள் இருக்க கூடிய இடமாகவும் இருக்க வேண்டும். இலங்கையில் அவ்வாறு இருக்கும் ஒரே இடம் இலங்கை சர்வதேச விமான நிலையம் மாத்திரமே. ஏனைய இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் சட்டத்திற்கு புறம்பாக ஒதுக்கப்பட்ட இடங்கள் ஆகும்.
எனவே சட்டத்தை உரிய முறைகளில் கடைப்பிடிப்பதனாலும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் உரிய முறையில் சட்டத்தை பின்பற்றி சட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் ஆயின் புகைத்தல் பாவனையை இல்லாதொழிக்க முடியும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
Spread the love