குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அவன்ட் கார்ட் கப்பலில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன கூறியது பொய்யா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதனால் அவற்றின் இலக்கங்கள் அழிந்து விட்டதாக அமைச்சர் தெரிவித்த கருத்து முற்று முழுவதும் பொய்யானது என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதக் கப்பலில் காணப்பட்ட ஆயுதங்கள் தொடர்பிலான அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இந்த அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் அமைச்சர் கூறியது போன்று இலக்கங்கள் அழிந்து விட்டதாக குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் என்ன என்பதனை அறிந்து கொள்ள விரும்பினால் நீதிமன்றின் அனுமதியுடன் அறிக்கையை பார்வையிட முடியும் எனவும், இன்னமும் நீதிமன்றமே இந்த அறிக்கை குறித்து முழுக் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒர் பின்னணியில் அமைச்சர் ஆயுதங்களின் இலக்கங்கள் அழிந்துள்ளதாக வெளியிட்ட கருத்து வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.