Home இலங்கை ஐ.நா மெய்யாகவே மனித குலத்தை பாதுகாக்கும் அமைப்பா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

ஐ.நா மெய்யாகவே மனித குலத்தை பாதுகாக்கும் அமைப்பா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

by admin
ஒக்டோபர் 24. இன்று ஐ.நா தினமாகும். 1945 ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது. உலகில் உள்ள நாடுகளின் அமைதி, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு அமைப்பாக தேசங்களை ஒன்றிணைக்கும் ஒரு உலக அரசாக ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. இதன்படி ஐ.நாவில் 193 நாடுகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இன்னுமொரு உலகப் போர் நடைபெறாத வகையில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டோல் ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவித்தார். வொஷிங்டனில் நடந்த டெம்பார்ட்டன் ஒக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து இதுபோன்றதொரு நாளில் கலிபோனியாவில் உள்ள  சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது.1946இல் இலண்டனில் முதல் பொதுச்சபை கூடியது. இதில் 51 நாடுகள் பங்கெடுத்தன. 2010ஆம் ஆண்டில் 192 நாடுகள் அங்கம் வகித்த ஐ.நாவில் 2011இல் தென்சூடான் விடுதலை பெற்று ஐ.நாவுடன் இணைய 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாக பின்வருவன கூறப்படுகின்றன. 01. கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்; 02. பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல். 03. மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல் மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல். 04. இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே. 05. உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். 06. உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.
உரிமையை காக்கத் தவறியமை
ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரையில் மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல் மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் என்ற நோக்கை ஈழத் தமிழர்களின் போராட்ட விடயத்தில் எவ்வாறு அணுகியது என்பதை உலகறியும். சம உரிமை மறுக்கப்பட்டு, தமது சுய உரிமைக்காக போராடிய ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப்  போராட்டத்தை ஒடுக்குவதில் ஐ.நா வல்லாதிக்க நாடுகளின் நோக்கிற்கு துணைபோனது.
நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளை மாத்திரமின்றி, நாடுகளுக்குஉள்ளே நடக்கும் பிரச்சினைகளிலும், இனங்களின் ஒடுக்குமுறைகளிலும் ஐக்கிய நாடுகள் சபை அந்தந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் வல்லாதிக்க நாடுகளின் துணைக் கருவியாக செயற்படுகின்றன. ஈழத் தமிழர்கள் வரலாற்று ரீதியாக தனித்துவமான இனம். அவர்களை பாரம்பரியமாக தங்களை தாங்களே ஆண்டு வந்தனர். பிரித்தானியர் ஆட்சியின் பின்னர் தமிழர் அதிகாரம், உரிமை எல்லாம் சிங்கள மேலாதிக்கத்தின் வசமானது.
ஈழத் தமிழர்களையும் இலங்கையர் என்ற அடையாளத்திற்குள் தள்ளி அவர்களின் சம உரிமையை மறுத்து, அவர்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தி, அவர்களை இன அழிப்புச் செய்யும் ஒரு அரசின் பார்வையிலேயே ஐ.நா ஈழத் தமிழர்களையும் பார்ப்பதாக காட்டுகிறது. போராடும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஐ.நாவின் இப் பார்வையும் அணுமுறையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அத்துடன் பெரும் அரசியல் சூழச்சி கொண்ட அணுகுமுறையாகும்.

 ஈழ இனப்படுகொலை

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முப்பது ஆண்டுகளுக்க மேலாக இன ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1983இலும் அதற்குப் பிந்தைய கால போர் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் 2006இலிருந்து 2009 வரையான காலப் பகுதியில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடகிழக்குப் பகுதியில் இனப்படுகொலை நடவடிக்கை மிகவும் விஸ்தரிக்கப்பட்டது. இனவாத மேலாதிக்கப் போக்கின் கடும் விளைவாகவும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் பொருட்டும் 2008இன் இறுதிக் காலப் பகுதியிலும் 2009 மே வரையான காலப்பகுதியிலும் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை உச்சம் கண்டது.

இனப்படுகொலை என்பது நிகழும் காலத்துடன் மாத்திரம் தொடர்புடையதன்று. அது வரலாற்று ரீதியான அரசியல் காரணங்களுடன் நிகழ்த்தப்படுவது. அதனுடைய பாதிப்பு என்பதும் இனப்படுகொலை நிகழும் காலத்துடன் முடிவடைதில்லை. இனப்படுகொலை ஒரு இனத்தை வரலாறு முழுவதும் உத்தரிக்கும் காயத்தை ஏற்படுத்துகிறது. எனவே இனப்படுகொலையை சந்தித்த ஒரு மண்ணில் அதற்கான காரணங்களை கண்டறிந்து, அதற்குரிய பிரச்சினைகை தீர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கி அவர்களின் காயங்களை ஆற்றுதல் அவசியமாகிறது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட சமூகம் ஒரு உட்புண்ணுடன் வாழ நேரிடுகிறது. நியாயமான அணுகுமுறையும் நீதியுமே இங்கு அவசியமானது.

அனைத்துலக சமூகத்தின் கடமை

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் முப்பது வருடங்களாக இன ஒடுக்குதல் மற்றும் இனப்படுகொலையினால் சந்தித்த அனுபவங்கள் காரணமாக உள் நாட்டில் நீதி கிடைக்கும் என்பதில் ஒருபோதும் நம்பிக்கை கொண்டதில்லை. இதனால் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு மாத்திரமின்றி வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன ஒழிப்புச் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகத்தை நோக்கி நீதியை எதிர்பார்த்திருக்கிறார்கள். இப் பூமியில் ஒரு இனத்திற்கு எதிராக திட்டமிட்ட ரீதியாக, மிக கூர்மையாக முன்னெடுக்கப்படும் இன ரீதியான ஒடுக்குதல் செயற்பாடுகளை குறித்து அக்கறை கொள்வதும் அதனை தடுப்பதும் அதன் வேர்களை கண்டறிந்து தீர்ப்பதும் அனைத்துலக மக்கள் சமூகத்தின் கடமை.

ஏனெனில் உலகில் நடைபெறும் எல்லா ஒடுக்குமுறைகளும் பூமி எங்கும் வாழும் எல்லா மனிதர்களையும் பாதிக்கிறது. பூமிப் பந்தின் ஏதோ ஒரு மூலையில் இடம்பெறும் இனப்படுகொலையை தடுக்கத் தவறும் பட்சத்தில் அதுவே இன்னொரு மூலையில் வாழும் ஒரு இனத்தை ஒடுக்க ஊக்கமளிக்கிறது. எனவே இன ஒடுக்குதல் என்ற கொடுஞ்செயற்பாடு ஒரு இனத்தோடு முடிவதில்லை. கடந்த பல நூற்றாண்டுகளாக பூமியின் பல்வேறு பாகங்களிலும் பல இனங்கள் இன அழிப்பை சந்தித்து வந்துள்ளன. அதனை தடுக்கத் தவறிய செயற்பாடுகளும் அதற்கு நீதியை பெற்றுக்கொடுக்கச் தவறிய செயற்பாடுகளுமே இந்தப் பூமியில் மனித இனம் இன அழிப்பை மீண்டும் மீண்டும் சந்திக்கக் காரணமாகின்றது.

ஐ.நாவின் வெட்கம்

அவ் இன அழிப்புச் செயற்பாடு இப்போது ஈழத் தமிழ் மக்களின் விடயத்திலும் சூழல்கிறது. ஈழத் தமிழ் மக்கள் முப்பது ஆண்டுகளாக இன ஒடுக்குதல் மற்றும் இன அழிப்பை சந்தித்தபோது அதனை தடுக்கத் தவறிய விளையே முள்ளிவாய்க்காலில் உச்ச இனப்படுகொலை நிகழ்த்தக் காரணமானது. இப்போதும் தமிழ் இனம் சந்தித்த இனப்படுகொலையை எவ்வாறு இவ் உலகம் அணுகுகிறது என்பதற்கு ஐ.நாவின் செயற்பாடுகள் உதாரணமாகின்றன. தனது பூகோள நலன்களை மையாகக் கொண்டே தேசிய இனங்கள்மீதான ஒடுக்குமுறையையும் இன அழித்தல்களையும் உலகம் அணுகி வருகிறது. இன ஒடுக்குதல்களை மேற்கொள்ளும் மேலாதிக்க வாதிகளின் அணுகுமுறையைக்காட்டிலும் உலகின் இந்தச் செயற்பாடு படு பயங்கரமானதும், மனித உரிமைகளுக்கு விரோதமானதுமாகும்.

1994ஆம் ஆண்டில் ருவாண்டாவில் இனப்படுகொலை நடைபெற்றது மிகவும் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அந்நாட்டில் துட்சி இனத்தவர்களும் ஊட்டு மிதவாதிகளும் இன அழிப்புச் செய்யப்பட்டனர். அங்கு எட்டு லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். பெரும்மையினரான ஊட்டு அரசு இனவாதக் கொள்கைகளைப் பரப்பி இன அழிப்புக்கு வித்திட்டது. கடந்த 2015ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்ற விசாரணை தீர்ப்பாயம் சுமார் 24 ஆண்டுகளின் பின்னர் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனைணை அறிவித்தது. அத்துடன் ருவாண்டா இனப்படுகொலை விடயத்தில் ஐ.நா வெட்கப்படவேண்டும் என்று ஐ.நா செயலாளர் பான்கி மூன் கூறினார்.

உண்மையில் ருவாண்ட இனப்படுகொலையில் மாத்திரமல்ல, உலகின் அனைத்து ஒடுக்குமுறைகளுக்காகவும் ஐ.நா வெட்கப்படவேண்டும். வல்லாதிக்க நாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவும், அரசியல் நலன்களுக்காக ஒடுக்குமுறைகளுக்கு ஒத்துழைப்பு புரிவதனாலும் ஐ.நா நிறையவே வெட்கப்படவேண்டும். இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது பாரிய ஆயுதங்களால் போரிட வேண்டாம் என்று இலங்கை அரசுக்கு ஐ.நா ஆலோசனை கூறியது. இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றபோது பாரிய ஆயுதங்களால் மக்களை கொல்லாமல் சிறிய ஆயுதங்களால் மக்களை கொல்லுங்கள் என்று ஐ.நா இனப்படுகொலைக்கு ஆலோசனை அளித்தது?

இன அழிப்பு என்பது வெறுமனே ஆயுதங்களுடன் மாத்திரம் தொடர்புடையதா? ஐ.நா மேற்போந்த ஒத்துழைப்பை வழங்கியமையான் காரணத்தினால்தானா ஆயுதங்களை தவிர்த்து பாலியல் வன்முறை ஆயுதங்களும் காணாமல் போதல்களும் இடம்பெற்றன? இறுதியுத்தத்தில் ஈழத் தமிழ் மக்களால் ஆயுதங்களால் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் பல்வேறு வழிமுறைகளில் இனப்படுகொலை நடந்தது. இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது ஐ.நா தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டதாக சில ஆண்டுகளின் முன்னர் பான்கி மூன் கூறினார்.

இதேவேளை கடந்த 2013இல் ஐக்கிய நாடுகளின் 68ஆவது கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.நா செயலாளர் பான்கி மூன் இலங்கை விடயத்தில் ஐ.நா தோல்வியை தழுவியதாக குறிப்பிட்டார். இலங்கை இறுதி யுத்த உயிரிழப்புக்களுக்கு ஐ.நாவே பொறுப்புக் கூறவேண்டும் என்ற கருத்துக்கள் ஐ.நாவிற்குள் இருக்கும் மனித உரிமை சார்ந்த பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஐ.நாவின் பங்களிப்பும் இருக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக ஐ.நா வருந்துகிறது என்ற நிலைக்கு ஒரு நாள் அவ் அமைப்பு வரநேரிடும். அதுவும் பூகோள அரசியல் நலன் பொருட்டாய் இருக்கும் என்பதே கவலைக்குரியது.

ஒடுக்குமுறையை ஊக்குவிக்கும் உலகு

ஐ.நா உள்ளிட்ட உலகம் எவ்வாறு பூகோள அரசியலுக்காக தமிழ் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள தயங்குகிறதோ அதைப்போலவே இலங்கை அரசு தன்னுடைய அரச இருப்புக்காக தமிழ் மக்களுக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறது. இது இலங்கையின் பேரினவாதப் போக்கை பேணும் ஒரு செயலாகவும் ஈழத் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் செயலாகவும் தொடர்ந்தும் ஒடுக்குமுறையைக்கு வழி செய்யும் செயலாகவும் இருக்கிறது. அறுபது ஆண்டுகளாக இன ஒடுக்குதலை சந்தித்த இனம் உண்மையின் அடிப்படையிலும் நீதியின் அடிப்படையிலும் தீர்ப்பை எதிர்ப்பார்ப்பது மிகவும் அவசியமானது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இனப்படுகொலை விவகாரத்தை இலங்கை அரசுடன் அணுகிய விதமும் தற்போது அணுகும் விதமும் மிகவும் வேறுபாடுகளைக் கொண்டது. தமக்கு எதிரான பிரேரணைக்கு இணை அனுசரனை அளித்த இலங்கை இந்த விவகாரத்திலிருந்து எவ்வாறு தப்பிக்கொள்வது என்பதன் பொருட்டே தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொள்கிறது. போரில் ஈடுபட்டவர்களை மின்சாரக் கதிரைகளிலிருந்து பாதுகாத்ததாகவும் இனியும் ஏதும் நடக்க விடமாட்டோம் என்றும் கூறுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் நடந்த அநீதிகளுக்கான உண்மையான பொறுப்புக்கூறுதல் இடம் பெறாது என்பதையே உணர்த்துகிறது.

ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஐ.நாவின் செயற்பாடுகளும்  பெரும் காரணமாக அமைகின்றன. இலங்கையில் நிலவும் இன மேலாதிக்கம், இன ஒடுக்குமுறை, இதற்கு முன்னர் நடைபெற்ற இன அழிப்புப் போர், இனப்படுகொலைகள் என அனைத்தையும் தடுக்கத் தவறிய ஒரு அமைப்பாக இலங்கை இனப்பிரச்சினையில் தோல்வி கண்ட அமைப்பாக ஐ.நா காணப்படுகிறது. இலங்கை அரசின் ஒடுக்குமுறை கரங்களுக்கு கைலாகு கொடுத்து, ஊக்குவித்தது. ருவாண்டா இனப்படுகொலைக்கு இப்போது ஏற்பதுபோல் ஈழ இனப்படுகொலையை எப்போது ஏற்கும்?
ஈழத்தில் மாத்திரமல்ல உலகில் பல்வேறு நாடுகளிலும் ஐ.நாவின் அணுகுமுறை இவ்வாறே காணப்படுகிறது. தன்னுடைய சாசனத்தில் எழுதிய நோக்கங்களுக்கு மாறாகவும் நடந்து கொண்ட சந்தர்ப்பங்களும் தோல்வியை தழுவிய நிலைகளுமே உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் குருதி சிந்தக் காரணமானது. ஐக்கிய நாடுகள் சபை மனித குலத்தை பாதுகாக்கும் மெய்யான அமைப்பாக இருந்தால் ஈழ இனப்படுகொலையை தடுக்கத் தவறியதாக ஒப்புக்கொண்ட அவ் அமைப்பு ஈழத் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத் தந்து, எமது சம உரிமை, மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்க வேண்டும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More