குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
எதிர்வரும் 2017ம் ஆண்டு அரசாங்கத்திற்கு சிக்கல் நிறைந்ததாக அமையும் என தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டுமான வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்துசெயற்படும் என்பது மக்களுக்கு புரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டின் முன்னேற்றத்திற்காக இரண்டு கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாகவும் இந்த முற்சிக்கு சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 2017ம் ஆண்டில் இந்த அரசாங்கம் வலுவானதாக அமையும் அல்லது கலைந்துவிடக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்தள்ளார்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் சவால்களை வென்றெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.