குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்னசிங்க தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட 12ஆயிரத்து 600 முன்னாள் போராளிகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் இந்த முன்னாள் போராளிகள் தொடர்பில் கண்காணித்து குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தால் அவர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வடக்கில் இயங்கி வரும் பிரதான பாதாள உலகக் குழுக்களான ஹாவா மற்றும் பாவா ஆகிய குழுக்களை முன்னாள் போராளிகளே வழிநடத்தி வருவதாகவும் நீண்ட ஆயுத பயிற்சிகளை முடித்துக் கொண்டு படையினருடன் போராடிய முன்னாள் போராளிகளை சில மாத புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்வது பொருத்தமாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் போராளிகளின் எண்ணங்கள் நோக்கங்கள் துரித கதியில் மாற்றமடைந்துவிடாது எனவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் வருத்தமளிக்கின்றது எனவும் நாட்டின் அனைத்து இடங்களிலும் இன மத மொழி பேதமின்றி சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.