192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
பொன் அணிகளின் போரில் கொல்லப்பட்ட இளைஞனின் வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் பொன்அணிகளின் போர் என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் மைதானத்தில் வைத்து ஜெயரட்ணம் தனுசன் அமலன் எனும் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன், நாகராஜா காந்தரூபன், சுந்தரலிங்கம் பிரகாஷ் ஆகிய 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொலைக் குற்றம் சுமத்தி யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை தொடர் விசாரணைகளாக 26ம், 27ம், 28ம் ஆகிய திகதிகளில் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் குறித்த வழக்கு விளக்கத்திற்காக இன்றைய தினம் புதன் கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது மன்றில் முதலாம் எதிரி சார்பில் ஆஜரான சட்டத்தரணி குற்றம் நடைபெற்ற இடத்தின் வரைபடம் , உள்ளிட்ட சில ஆவணங்கள் எதிரிக்கு வாசித்து காட்டவில்லை எனவும் , அதனை தமக்கு தருமாறும் கோரினார். அவை இருந்தாலே தாம் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய ஏதுவாக இருக்கும் என மன்றில் கோரிக்கையை முன் வைத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதிக்கு முன்னர் மன்றில் கேட்ட ஆவணங்கள் அனைத்து வழங்கப்படும் எனவும், அதன் பின்னரும் ஏதேனும் ஆவணங்கள் தேவைப்படின் எதிர்வரும் ஜனவரி 5ம் திகதிக்கு முன்னர் உரிய நடவடிக்கைகள் மூலம் அதனை பெற்றுக் கொள்ளுமாறும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளுக்கு கூறினார்.
அதனை தொடர்ந்து 26ம் , 27ம் , 28ம் ஆகிய திகதிகளில் நடைபெற இருந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ம், 2ம், மற்றும் 3ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேவேளை 26ம், 27ம், 28ம் திகதிகளில் சாட்சியங்களுக்கு அழைக்கப்பட்டவர்கள் முறையே 1ம் , 2ம் , மற்றும் 3ம் திகதி மன்றிற்கு சமூகம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு இட்டார்.
Spread the love