198
ஒரு சோடி பட்டாம் பூச்சிகள்
திரும்பாத திசையிற்
சன்னம் தைத்துக் கிடந்தது
கனவு உப்பிய நெஞ்சறை.
உயிருக்கு மதிப்பற்ற நகரில்
சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும்
நசிந்தொட்டிய வெற்றுடல்கள்.
அவர்கள் நினைத்திருக்கக்கூடும்
இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல
சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல
கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை.
குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன
உருளும் பந்துகளும்
சில்லுடைந்த மோட்டார் வண்டிகளும்.
துவட்டி வளர்த்த பிள்ளையின் தலையை
சுவருடன் அடித்துப் பிளந்தவர்கள்
தாயிடம் உயிருக்கு ஈடுபேசினர்
ஒரு சவப்பெட்டியை தருவதாய்
கல்லிருக்கையில் விரிந்து பறக்கும்
அப்பியாசப் புத்தங்கள்போல்
படபடக்கும் இவ் நகரம்
துப்பாக்கிகளுக்கே பரிசளிக்கப்பட்டது.
போர் சக்கரத்தில் தப்பிய பிள்ளையை
நசித்தது யானை
காலம்தோறும்
கழுத்துக்களை திருகும் சீருடைகளே வேறுவேறு
துப்பாக்கிகளும் சிந்தப்பட்ட குருதியும் ஒன்றுதான்.
ஓவியம் – வசந்தரூபன்
Spread the love