சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் ஹாஸ் கிராமத்தின் மீது நேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டது சிரிய அரசுப்படைகளா அல்லது ரஸ்யப்படைகளா என உறுதிப்படுத்தபடாத நிலையினைத் தொடர்ந்து தாக்குதல் தொடங்கியதினை அடுத்து ஹாஸ் கிராமத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட வேளை ஒரு ரொக்கெட் குண்டு பாடசாலை முன்பாக விழுந்ததில் மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விமான தாக்குதல் தொடர்ந்து ஆறு முறை நடைபெற்றதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ள அதேவேளை இந்தத் தாக்குதல், வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருந்தால் அது போர்க் குற்றமாகக் கருதப்படும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகிய 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.