221
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
வடமாகாண சபையில் தான் அவைத்தலைவராக இருக்கும் வரை எந்த சந்தர்ப்பத்திலும் எந்த விடயத்திற்காகவும் வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க மாட்டேன் என கூறி வந்த அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வியாழக்கிழமை பிரதி அவைத்தலைவர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடாத்தினர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
முதலில் உயிரிழந்த யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரி வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபை நடுவில் சென்று நின்றார். அதனை தொடர்ந்து அனைத்து ஆளும் கட்சி எதிர்கட்சி என பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் சபை நடுவில் நின்று இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இரண்டு நிமிட மௌன அஞ்சலியை தொடர்ந்து எழுந்த கூச்சல் குழப்பம்.
மாணவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியை முடித்துக்கொண்டு அடுத்த பிரதி அவைத்தலைவர் யார் எனும் சர்ச்சையை சபையில் எழுப்பினார்கள். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் வெளிநாட்டில் நிற்பதாகவும் , தான் வந்த பின்னர் பிரதி அவைத்தலைவரை நியமிப்போம் என கடிதம் மூலம் அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கு தெரிய படுத்தி இருந்தார்.
இதனால் முதலமைச்சர் வந்த பின்னர் பிரதி அவைத்தலைவர் யார் என தெரிவு செய்வோம் என ஒரு குழு விவாதித்தது. மற்றைய குழு முதலமைச்சர் எதற்காக அவர் தேவையில்லை. தற்போது அவைத்தலைவருக்கு ஏதேனும் நடந்து விட்டால் யார் சபையை நடத்துவது.
பிரதி அவைத்தலைவர் உயிரிழந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை பிரதி அவைத்தலைவரை நாம் தெரிவு செய்யவில்லை அதனால் இன்றைய தினமே தெரிவு செய்ய வேண்டும் என இன்னுமொரு குழு விவாதித்தது.
வாராந்த சந்தையே தோற்று போகும்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கடுமையான விவாதம் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்றது. ஒரு கட்டத்தில் மீன் பிடித்துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன் எழுந்து ” வாராந்த சந்தையே தோற்று போகும் அளவுக்கு சபை அமர்வு நடைபெறுகின்றது. ” என கூறினார்.
நக்கல் நையாண்டி கருத்துக்கும் குறைவில்லை.
அதனை தொடர்ந்து சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இடை இடையில் காரசாசமாக உறுப்பினர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கும் போது சில உறுப்பினர்கள் எழுந்து நக்கல் நையாண்டி கருத்துக்களை சொல்லி அமர்வார்கள். அதனை தொடர்ந்து காரசாமாக விவாதித்துக் கொண்டு இருந்த உறுப்பினர்கள் விவாதித்த விடயத்தை விடுத்து மற்றைய உறுப்பினர் கூறிய நக்கல் நையாண்டி கருத்துக்கு விளக்கம் கூறி கருத்து மோதலில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு கடுமையான விவாதம் சில உறுப்பினர்களுக்கு இடையில் மாத்திரமே நடைபெற்றது. ஏனைய உறுப்பினர்கள் எந்த விதமான கருத்துக்களையும் கூறாது அமைதியாக இருந்தனர்.
வடமாகாண சபையின் முதல் வாக்கெடுப்பு.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்த கடுமையான விவாதத்தை அடுத்து மதியம் 12 மணியளவில் இன்றைய தினமே பிரதி அவைத்தலைவர் தெரிவு நடக்கும் எனவும் , அதற்காக வாக்கெடுப்பு நடாத்த தயார் எனவும் அவைத்தலைவர் கூறினார்.
கடந்த மூன்று வருட காலமாக சபை அமர்வுகளின் போது பல விடயங்களுக்காக வாக்கெடுப்பு நடாத்துவோம் என உறுப்பினர்கள் கேட்கும் போது அவைத்தலைவர் இந்த உயரிய சபையில் நமக்குள் பிளவு பட்டு நின்று வாக்கெடுப்பு கோராமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கதைத்து பேசி முடிவுக்கு வர வேண்டும். நான் எக்காரணத்திற்காகவும் வாக்கெடுப்பு நடாத்த மாட்டேன் என சபையில் பல தடவைகள் அவைத்தலைவர் கூறி இருந்தார்.
அந்நிலையில் இன்றைய தினம் பிரதி அவைத்தலைவர் தெரிவுக்கு வாக்கெடுப்புக்கு நடாத்த உள்ளதாக கூறினார். அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் என கூறி வாக்கெடுப்பு நாடத்துவது கடினம் அதற்கு வாக்கு சீட்டு எல்லாம் தயாரிக்க வேண்டும். எனவே சபையை ஒத்தி வைத்து வாக்கெடுப்பு நடாத்துவோம் என கூறினார்.
வாக்கெடுப்புக்கு தயாராகவே வந்த சி.வீ.கே.
அதற்கு பதில் அளித்த அவைத்தலைவர் வாக்கெடுப்புக்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் தான் இருக்கின்றன. என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பிரதி அவைத்தலைவர் தெரிவுக்கு க.வ.கமலேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற நான்கு கட்சிகளில் பிரதி அவைத்தலைவருக்கு பெயர் பரிந்துரைக்கப் பட்ட இருவரும் ஒரே கட்சியை சார்ந்தவர்கள் ஆவார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது அவைத்தலைவருக்கு முன்பாக வாக்கு பெட்டி வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு முடிவில் கமலேஸ்வரன் 18 வாக்குகளை பெற்று பிரதி அவைத்தலைவராக தெரிவானார். அவருடன் போட்டியிட்ட அனந்தி சசிதரன் 13 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.
Spread the love