124
குளோபல் தமிழ் செய்தியாளர்
ஜம்மு – காஷ்மீர் எல்லையில் தொடரும் மோதல் நிலமை காரணமாக பாகிஸ்தான் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் அப் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக இந்திய இராணுவத்தின் தகவல்களின் பிரகாரம் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தாக்குதல்களை அடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய பாகிஸ்தான் ராணுவங்களின் மோதல் இடம்பெற்று வருகிறது. இந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் பதில் தாக்குதல் நடத்துவதாக கூறுகின்றது.
இந்நிலையில் ராம்கர், ஆர்னியா, நவ்சேரா பகுதிகளில் சர்வதேச எல்லை பகுதியில் பீரங்கிக் குண்டுகளால் நடத்திய தொடர் தாக்குதலில் ராம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.ஆர்னியா பகுதியில் பொதுமக்களில் 3 பேர் காயமடைந்தனர் என்றும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி உட்பட பல பகுதிகளில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும் இந்திய இராணுவத் தரப்பு குறிப்பிடுகிறது.
காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர் மான்ஜீத் சிங்கை தீவிரவாதிகள் எனக் கருதப்படுபவர்கள் சுட்டுக் கொன்று உடலைத் துண்டாக்கியிருந்தனர். இதனால் கோபமடைந்த இந்திய இராணுவத்தினர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது 2 நாட்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தினர்.
இதன்போது 4 முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் எல்லையில் 60-க்கு மேற்பட்ட முறை பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக இந்திய இராணுவத் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்றைய தினம் ஒரு மூதாட்டியும், இந்திய இராணுவ வீரர் ஒருவரும் பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் இன்று இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு அரசுகளும் போர் மனப்பான்மையிலேயே பேசி வருவதாக இந்திய அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Spread the love