248
வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசமாகும். இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். ஆயினும் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை பேரினவாத சிந்தனையில் தோய்ந்துள்ள சிங்களவர்கள் விரும்பவில்லை. அதனை அவர்கள் முழுமையாக எதிர்க்கின்றார்கள்.
சிறுபான்மையினராகிய தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேச கோட்பாட்டையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.
இந்தக் கோட்பாட்டை ஏற்று வடக்கையும் கிழக்கையும் இணைத்தால், அந்த இணைப்பின் ஊடாக ஒரு தமிழ்ப் பிராந்தியம் உருவாகுமானால், அதுவே நாளை தனித் தமிழ் நாடாக, தமிழ் ஈழமாக மலர்ந்துவிடும், நாடு இரண்டாகப் பிளந்துவிடும் என்று அவர்கள் அரசியல் ரீதியாக அச்சம் கொண்டிருக்கின்றார்கள்.
இது நியாயமானதோர் அச்ச உணர்வுதானா என்பது சிந்தனைக்கும் விவாதத்திற்கும் உரியது. தமிழ் பேசும் மக்கள் தமது தாயகப் பிரதேசத்தில் தமது நிர்வாகக் கடமைகiளைத் தாங்களே நிறைவேற்றி, சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். தனி நிர்வாக அலகாகப் பிரிந்திருக்க அவர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.
பெரும்பான்மை இன அரசியல்வாதிகள், சிறுபான்மை இன மக்களை பெரும்பான்மையினத்தவராகிய சிங்கள மக்களைப் போன்று அனைத்து உரிமைகளையும் இறைமையையும் கொண்டவர்களாக வாழ விடுவதற்கு விருப்பமற்றவர்களாக இருக்கின்றார்கள். அத்தகைய அரசியல் உரிமைகளை அவர்கள் பெற்றிருந்தால், பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களை அடக்கி ஆளத்தொடங்கிவிடுவார்கள் என்பது அவர்களுடைய அச்சமாகக் காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல், சிங்கள மக்களுக்கு இலங்கை மாத்திரமே உலகத்தில் உள்ள ஒரேயொரு நாடாக அவர்கள் கருதுகின்றார்கள். தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில், வடமேற்கே தலை மன்னாரில் இருந்து சுமார் 28 மைல் தொலைவில் அமைந்துள்ள தமிழ்நாட்டுடன் அவர்கள் இணைந்து வாழ வழியிருக்கின்றது.
அத்தகைய ந்pல அமைப்பு இலங்கையின் வடபகுதிக்கும் தமிழ் நாட்டுக்கும் அமைந்திருக்கின்றது. இதனால். கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கியதாக வடக்கு தனிநாடாக மாறுமேயானால், அது தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கவும், அதன் ஊடாக சிங்கள மக்களுக்கும் நாட்டின் சிங்களப் பிரதேசங்களுக்கும் அரசியல் ரீதியில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதும் அவர்களுடைய சிந்தனையாக உள்ளது.
அதேபோன்று இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற முஸ்லிம்களும், முஸ்லிம் நாடுகளும் உதவ முற்படுவார்கள். இலங்கையில் அவர்கள் தனி;துவம் பெற்றால், அதன் ஊடாக உலக முஸ்லிம் சமூகத்திடமிருந்து தங்களுக்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தல்கள் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற எண்ணமும் காணப்படுகின்றது,
இந்த வகையில் தமிழ் மக்களையோ அல்லது முஸ்லிம் மக்களையோ தன்னாட்சி அதிகாரம் கொண்டவர்களாக மாறுவதற்கு இடமளித்தால், சிங்கள மக்கள் தமக்கென தனித்துவமான ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு நாட்டையோ கொண்டிருக்க முடியாது.
தமது இனம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்ற சிந்தனைப் போக்கும் சிங்கள மக்களிடம் இருக்கின்றது. இதன் காரணமாகவே சிறுபான்மையினங்களாகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களுக்குப் பணிந்தவர்களாக, தங்களை மேவிச் செல்ல முடியாதவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு சிங்கள தேசியவாதிகளிடம் காணப்படுகின்றது.
எனவேதான், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் பிடிவாதமான போக்கைக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.
வடக்கும் கிழக்கும் இணைவதன் ஊடாகவோ அல்லது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான தனியான நிர்வாக அலகாக அது மாறுவதனால் சிங்கள தேசியவாதிகள் அஞ்சுவதைப் போன்று சிறுபான்மையின மக்கள் சிங்கள மக்களை அடக்கியாளப் போவதில்லை. மாறாக சிங்கள மக்களுடன் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஐக்கியமாகவும், அமைதியாகவும் வாழக்கூடியதோர் ஆரோக்கியமான சூழல் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
சிங்கள மக்கள் எவ்வாறு தங்களுடைய மொழி கலாசாரம், மதம் என்பன தனித்துவமாகப் பேணப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அதேபோன்றுதான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் விரும்புகின்றார்கள். சிங்கள மக்களை ஆக்கிரமிக்க வேண்:டும் என்றோ அல்லது அவர்களுடைய மொழி மதம் கலாசாரம் என்பவற்றை இல்லாமற் செய்ய வேண்டும் என்றோ அவர்கள் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
ஆனால் மறுபுறத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் சிங்கள தேசியவாதிகள் உறுதியாக இருப்பதைப் போலவே, முஸ்லிம் தரப்பிலும் சில அரசியல் சக்திகள் வடக்கு கிழக்கு இணைந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்ற ஒரு போக்கையும் காண முடிகின்றது.
முஸ்லிம்கள் தமக்கென தனியான நிர்வாக அலகு ஒன்றை எதிர்பார்ப்பது ஒரு புறமிருக்க, தமிழ் மக்களிலும்பார்க்க, சிங்கள மக்களுடன் அவர்கள் இணைந்து வாழலாம் என்பதற்காகவே, அவர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடாது என குரல் எழுப்புகின்றார்கள் என்று கருத வேண்டியிருக்கின்றது.
தமிழ் முஸ்லிம் இனங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டியதன் அவசியம்
பேரினவாதம் மற்றும் மதவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் வரையிலும் வடக்கையும் கிழக்கையும் தமது பூர்வீகப் பிரதேசங்களாகக் கொண்டுள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது முக்கியமாகும்.
பௌத்த மதமே இந்த நாட்டில் மேன்மையுடையது. அதற்கே முன்னுரிமையும், முழு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு வருகின்ற பேரின மதவாத சிந்தனை கொண்டவர்கள், ஒரு போதும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
தங்களுடன் இணைந்து வாழாவிட்டாலும்கூட, முஸ்லிம்கள் தமது மத கலாசார அடையாளங்களுடன் தனித்துவமாக வாழட்டும் என்று அவர்கள் வாழ விடுவார்களா என்பது கேள்விக்குரியதாகும்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மத ரீதியான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள சிங்கள பேரின மதவாதிகளின் செயற்பாடுகள் வழங்கியுள்ள பல கசப்பான அனுபவங்களை முஸ்லிம் மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது.
ஆனால் தமிழ் மக்களிடமிருந்து முஸ்லிம் மக்களுக்கு இத்தகைய கசப்பான அனுபவங்கள் எற்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் காலம் காலமாக வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் புட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து வாழ்ந்த வரலாறு பதிவாகியிருக்கின்றது.
அவர்கள் தங்களுக்குள் அந்நியோன்னியத்தையும், பிரிக்க முடியாத அளவிலான ஐக்கியத்தையும் கொண்டிருந்தார்கள். கொண்டிருக்கின்றார்கள் என்பதை எவரும் புறந்தள்ளிவிட முடியாது.
இந்த நிலையில் சுய அரசியல் இலாபத்திற்காகவே வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடாது என்று முஸ்லிம்களில் சிலர் குரல் எழுப்பி வருகின்றார்கள். இவ்வாறு குரல் எழுப்புவதற்கு அவர்கள் முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு முக்கிய ஆதாரமாகக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.
விடுதலைப்புலிகளின் மக்களை வெளியேற்றிய நடவடிக்கைகள்
தமிழ் முஸ்லிம் மக்களிடையே குறிப்பாக வட மாகாணத்தில் நிலவி வந்த இறுக்கமான சமூக உறவு கடந்த 1990 ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் முழுமையாக விடுதலைப்புலிகளினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட துன்பியல் சம்பவத்தினால் மோசமாகக் குலைந்து போகக் காரணமாகியிருப்பதை எவரும் மறுக்க முடியாது.
முஸ்லிம் மக்களுக்கு அத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கக் கூடாது என்பது தமிழ் மக்களில் அநேகமானவர்களின் கருத்தாகும்.
விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, இவர்கள் செய்வதறியாமல், மனம் கலங்கி துயருற்றிருந்தார்கள். சிலர் விடுதலைப்புலி முக்கியஸ்தர்களுடன் இது தொடர்பில் விவாதித்திருக்கின்றார்கள். வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார்கள்.
ஆயினும் விடுதலைப்புலிகளின் தலைமை முஸ்லிம் மக்களை முற்றாக வெளியேற்ற வேண்டும் என்று எடுத்திருந்த முடிவுக்கு மாறாக எவராலும் எதையும் செய்ய முடியாத நிலைமையே நிலவியது.
இவ்வாறு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கை என சுட்டிக்காட்டி, அதனைக் கண்டிப்பது மட்டுமல்லாமல் காலம் கடந்த நிலையிலும் விமர்சனம் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 26 ஆவது ஆண்டு நினைவுகூரலின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மிகவும் காத்திரமானவை.
‘வடக்கு மாகாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முஸ்லிம்கள்
வெளியேற்றப்பட்டமையானது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அது ஒரு பாரதூரமான விடயம். அவ்விதமான கருமம் இடம்பெற்றிருக்கக் கூடாது. அதனை ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறுவதன் மூலம் மாத்திரம் அதற்கான தீர்வு காண முடியாது’ என அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மொத்தத்தில் அந்தச் சம்பவமானது, பரிகாரம் காண முடியாத ஒரு சம்பவமாகவே அமைந்திருக்கின்றது. ஆயினும் முஸ்லிம் மக்களுடன் தமிழ் மக்களுக்கோ, விடுதலைப்புலிகளுக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள அரசியல் தலைவர்களுக்கோ முஸ்லிம் மக்களுடன் எந்தவிதமான பகைமை உணர்வும் கிடையாது.
அரசியல் ரீதியான பகையுணர்வும் அவர்களிடம் இல்லை என்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
பிரதேசங்கள் அழிக்கப்படவில்லை
இருப்பினும் முஸ்லிம் மக்கள் அன்று நிலவிய இராணுவ அரசியல் சூழல் காரணமாகவே வெளியேற்றப்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் இன அழிப்பு நோக்கத்துடன் வெளியேற்றப்பட்டிருந்தால், கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தையும் வன்னிப் பிரதேசத்தையும், தமது பூரணமான கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப்பகுதியில் முஸ்லிம் மக்களுடைய பிரதேசங்களை தரை மட்டமாக்கியிருக்கலாம்.
அவர்களுடைய வணக்கத் தலங்களாகிய பள்ளிவாசல்களை இடித்து அழித்திருக்கலாம். அல்லது முஸ்லிம் மக்களுடைய வீடுகள் காணிகள் என்பவற்றைத் தமிழ் மக்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கலாம்.
அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை. மாறாக முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த போதிலும், என்றோ ஒரு நாள் அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருவார்கள் என்ற நிலைப்பாட்டில், அவர்களுடைய பிரதேசங்கள் அப்படியே விடப்பட்டிருந்தன.
முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் அடுத்தடுத்த வீடுகளில் அல்லது ஒரே வீதியில் வசித்திருந்த பகுதிகளில் சில வீடுகளில் தமிழ் மக்கள் இடப்பெயர்வு காரணமாகத் தற்காலிகமாகத் தங்கியிருந்தார்கள். ஆனால் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்த போது, அந்த வீடுகளை அவர்கள் உரியவர்களிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.
யுத்த மோதல்களின்போதும், வான் வழி தாக்குதல்கள் காரணமாகவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களுடைய பிரதேசம் அழிவுக்கு உள்ளாகியதே தவிர, அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய விடுதலைப்புலிகளோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களோ அந்தப் பிரதேசத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இதன் காரணமாகத்தான் முஸ்லிம் மக்கள் வெள்யேற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்த மக்களுடைய அழிவக்குள்ளாகிய வீடுகள், சிறிய சேதங்களுடன் மிஞ்சியிருந்த வீடுகள் என்பன அப்படியே இருந்தன. அவர்களுடைய பள்ளவாசல்கள், பாடசாலைகள் என்பனவும் எந்தவிதமான திட்டமிடப்பட்ட சேத நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் மிஞ்சிஙிருந்தன.
இன அழிப்பு நோக்கத்துடன் முஸ்லிம் மக்கள் அன்று வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், அவர்களுடைய பிரதேசங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கக் கூடும். அடையாளம் தெரியாத வகையில் மாற்றப்பட்டிருக்கக் கூடும்.
அது மட்டுமல்லாமல் அன்றைய யுத்த மோதல்கள் நிறைந்த அரசியல் சூழலில் முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதன் காரணமாகவே, அந்த மக்கள் பெரும் உயிரிழப்புக்களில் இருந்து தப்ப முடிந்திருக்கின்றது. முஸ்லிம் மக்களில் சிலர் சிங்கள மொழி தெரிந்திருந்த காரணத்தினாலும், சுய இலாபம் கருதியும் சில வேளைகளில் சுய அரசியல் இலாபம் கருதியும் இராணுவத்தினருடன் நெருங்கிச் செயற்பட்டு, அதன் மூலம் தமது ஆயுத போராட்டத்திற்குப் பங்கம் எற்படலாம் என்ற காரணத்தி;ற்காகவே விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக வடக்கில் இருந்து வெளியேற்றியிருந்தார்கள்.
அக்காலப் பகுதியில் இராணுவத்திற்கான உளவு வேலைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்திலும், அவ்வாறு செயற்பட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தும் தமிழர்கள் பலர் விடுதலைப்புலிகளின் தண்டனைக்கு உள்ளாகியிருந்தார்கள்.
அப்போது முஸ்லிம் மக்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் , பல விரும்பத்தகாத வகையில் பல உயிரிழப்புக்கள் எற்பட்டிருக்கவும் கூடும்.
அத்துடன் விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான மோதல்களில் சிக்கி தமிழ் மக்களுக்கு நேர்ந்தது போன்று முஸ்லிம் மக்களுக்கும் உயிரிழப்புக்கள் நேர்ந்திருக்கவும் கூடும்.
இத்தகைய இழப்புக்கள், முஸ்லிம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் ஊடாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதை இன அழி;ப்பாக நோக்குபவர்கள் கவனத்திற்கொள்வது அவசியமாகும்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதனால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களில் பலர் பெரும் இன்னல்களுக்கும் கஸ்டங்களுக்கும் உள்ளாகினார்கள் என்பது உண்மை. அதேபோன்று அவ்வாறு வெளியேறியதனால், போர்ச்சூழலற்ற பகுதியில் வாழ்ந்த அவர்களில் பலர் கல்வி, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
அது மட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்கள் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் இந்த இடப்பெயர்வே ஏற்படுத்தியிருந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
காலச்சூழலே காரணம்
எனவே, ஒரு காலச் சூழல் காரணமாகவே முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து முற்றாக வெளியேற நேர்ந்தது. அவர்கள் மீது கொண்டிருந்த பகை உணர்வு காரணமாகவோ அல்லது அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காகவோ அவர்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்படவில்லை.
அவ்வாறு அவர்கள் மீது பகைமை கொண்டாடுவதற்கோ அல்லது அவர்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதற்கான தேவையோ அப்போது விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
முஸ்லிம் மக்களைப் போலவே, 1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் இருந்து லட்சக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் முற்றாக வன்னிப் பெருநிலப்பகுதிக்கு வெளியேற்றியிருந்தார்கள். முஸ்லிம் மக்களை எவ்வாறு வெளியேற்றினார்களோ அதேபோன்றுதான் தமிழ் மக்களும் யாழ் குடாநாட்டில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார்கள்.
முஸ்லிம் மக்களை வெளியேற்றியது விடுதலைப்புலிகளின் இன அழிப்பு நடவடிக்கை என்றால், யாழ் குடாநாட்டில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியதையும் ஓர் இன அழிப்பு நடவடிக்கை என்று கொள்ளலாம் அல்லவா? முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி விமர்சிப்பவர்கள், தமிழ் மக்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகளின் நடவடிக்கையை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.
எனவே, முஸ்லிம் மக்களையும்சரி, தமிழ் மக்களையும் சரி விடுதலைப்புலிகள் இராணுவச் சூழல் – யுத்தச் சூழல் காரணமாகவே வெளியேற்றினார்கள் என்பது புலனாகின்றது.
இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகின்றன. இந்த நிலையில் இப்போதைய அரசியல் சூழலில் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு, அரசியல் ரீதியான முன்யோசனையுடன் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்;தினர் செயற்பட வேண்டியதே முக்கியமாகும்.
மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் எழுந்தமானமாக வடமாகாண சபை மீதோ அல்லது வேறு அரசியல்வாதிகள் மீதோ குற்றம் சுமத்துவது பொருத்தமானதாகத் தெரியவில்லை.
சொந்தக்காணிகளில் சென்று மீள் குடியேறுபவர்களுக்கு அரசியல் ரீதியாகவோ சமூக ரீதயாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ தடைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அல்லது அத்தகைய தடைகளை யாரும் வேண்டுமென்று ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரியவில்லை.
ஆனாலும் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மீள்குடியேற்றத்தில் பல பிரச்சினைகளும் நிர்வாக ரீதியான தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இத்தகைய பிரச்சினைகளையும், தiடைகளையும் நீக்குவதற்கு முன்னைய அரசாங்கத்தில் அதிகார பலம் பெற்றிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முறையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.
முஸ்லிம் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு முறையான பொறி முறையொன்றை அரசாங்கம் வகுப்பதற்கு அரசியல் அதிகார பலம் கொண்டுள்ள முஸ்லிம் தலைவர்கள் ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு அவர்கள் செயற்படுவதற்கு தமிழ் அரசியல் தலைவர்களின் ஆதரவையும் பெற்;றுக் கொள்வதிலும் எந்தவிதத் தடையும் இருக்கமாட்டாது.
ஆனால், சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் உத்தேசித்துள்ள பொறிமுறையானது அரசியல் நோக்கம் கொண்டதொரு செயற்படாகும். முஸ்லிம் மக்களைப் போலவே நீண்ட காலமாக மீள் குடியேற்றப்படாமல் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் இந்தப் பொறிமுறை உள்ளடக்கப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதன் காரணமாகத்தான் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தப் பொறி முறையை சந்தேகக் கண்கொண்டு நோக்குகின்றார்கள். அதற்கு எதிராகக் குரல் எழுப்பியிருக்கின்றார்கள்.
இடம்பெயர்ந்தவர்கள் என்றால் அவர்கள் யாராகவும் இருக்கலாம். இன, மத அரசியல் பேதங்களைக் கடந்து அவர்களை மனிதர்களாக – இடப்பெயர்வு காரணமாக அவலப்பட்டவர்களாக, அனுதாபத்திற்குரியவர்களாகக் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அதேநேரம் வடக்கையும் கிழக்கையும் தாயகப் பிரதேசமாகக் கொண்டுள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் முக்கியமாகும்.
அதேபோன்று வடக்கும் கிழக்கும் பூகோள ரீதியாக மட்டுமல்ல. சமூக ரீதியாகவும் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அரசியல் ரீதியான வேறுபாடுகளைக் கடந்து, எதிர்கால நன்மைகளைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும், அரசியல் தலைவர்களினதும் பொறுப்பாகும்.
இல்லையேல் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய சம்பந்தன் கூறியிருப்பதைப் போன்று கிழக்கு கைநழுவிப் போக நேரிடலாம்.
Spread the love