151
குளோபல் தமிழ் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு மக்களின் காணிகளில் பாரிய முகாமிட்டுள்ள இராணுவத்தினர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிடம் கேப்பாபுலவு மக்கள் இதை எடுத்துரைத்துள்ளனர். தமது நிலத்தை கோரி தொடர்ச்சியாக இந்த மக்கள் பல வகையிலான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கேப்பாபுலவு என்ற வளம் மிக்க பிரதேசத்தை அபகரித்துக்கொண்டு தம்மை மாதிரிக் கிராமம் ஒன்றில் குடியிருத்தியுள்ளதாகவும் தாம் காலம் காலமாக வசித்து வந்த பூர்வீக நிலத்தில் தம்மை மீள்குடியேற்றுமாறும் இந்த மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மாதிரிக் கிராமத்தில் சிறிய துண்டு காணியில் பலவீனமான வீடுகளை அமைத்து அகதி முகாம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் அங்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி தாம் வாழ்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தாம் காலம் காலமாக வாழ்ந்த காணிகளில் இராணுவம் முகாமிட்டுள்ளதாகவும் அங்கு வீடு, கிணறு, பயன்தரு மரங்கள் என பல பெறுமதி மிக்க சொத்துக்கள் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
தம்மை சிறுதுண்டு காணியில் இருத்திவிட்டு தமது பெறுமதி மிக்க காணிகளை அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிடும் கேப்பாபுலவு கிராம மக்கள் விரைவில் தமது காணிகளை விடுவிக்க கோருகின்றனர்.கடந்த அரசு நெல் பயிர் செய்யும் சில காணிகளை விடுவிப்பதாக காட்டியபோதும் இன்னமும் பல காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. அத்துடன் அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிடமே காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு மக்கள் கோரியிருந்தனர்.
கோயில்களில் தேங்காய் உடைத்து நிலம் கேட்டல், அரச தலைவர்களிடம் காணியை விடுவிக்க கோருதல் என பல்வேறு விதமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ள இந்த மக்கள் மைத்திரிபால சிறிசேன ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடர்ந்து காணிகளை கோரி வருகின்றனர். இந்த நிலையில் தமது காணியை விடுவிக்குமாறு கோரி சில பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். வழக்கினை மீளப்பெறுமாறு இராணுவத்தினர் அப் பெண்களை தொந்தரவு செய்து வருகின்றனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்த்து வாக்களித்தபோதும் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தமது காணிகளை அபகரிக்க பெண்களுக்கு தொந்தரவு செய்யும் கொடூரமான ஒடுக்குமுறை நடப்பதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எவ்வாறெனினும் தமது பூர்வீக நிலங்களை மீட்டுக்கொள்ளும் போராட்டம் தொடரும் என்றும் அரசாங்கம் விரையில் படைகளை தமது காணிகளிலிருந்து வெளியேற்றி தம்மை குடியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Spread the love