அர்ஜென்டினாவின் முதல் டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர் என்ற சிறப்பை நொயில்லா கரெல்லா பெற்றிருக்கிறார். 3 வயது குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராக கடமை புரியும் நொயில்லாவை பாடசாலையின் அதிபர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் உற்சாகப்படுத்துகின்றார்கள். 2012ஆம் ஆண்டு முதல் நொயில்லா ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.
குழந்தைகளோடு குழந்தையாக பழகுவதும் பாடம் சொல்லிக் கொடுப்பதும், குழந்தைகளின் விருப்பத்துக்குரிய ஆசிரியராக நொயில்லாவை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டவுன் சிண்ட்ரோம் குழந்தை என்பதால், தன்னைப் பாடசாலையில் ஒரு வேண்டாதவரைப் போல் பார்த்ததாகவும் பாடசாலைகளில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள நொயில்லா தனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் எனவும் சிறுவயதிலிருந்தே ஆசிரியராக வருவதே தனது கனவு எனவும் தனது 31 வது வயதில் அது நிறைவேறியுள்ளது எனவும்தெரிவித்துள்ளார்.
தன்னைப் பார்த்து, டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவர்களைப் பற்றிய அபிப்பிராயம் மாறி வருவதில் தனக்கு மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.