புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார தாபனத்தினால் நடத்தப்படும் விசேட மாநாட்டில் அதிதி உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (06) பிற்பகல் இந்தியா பயணமானார்.
இந்த மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் புது டில்லியில் நாளை (07) ஆரம்பமாகி இம்மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி நாளை (07) திங்கட்கிழமை மாநாட்டின் அங்குரார்ப்பண கூட்டத்தொடரிலேயே விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார தாபனத்தின் புகையிலை மற்றும் சிகரெட் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அனைத்து நாடுகளினதும் தலைவர்களும் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் ஒன்றுகூடுகின்றனர். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாடு ஏழாவது முறையாக இம்முறை இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் ஜனாதிபதி சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் இடையே ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது