குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கி தனியார் மயப்படுத்தப்படக் கூடாது எனவும் மத்திய வங்கி தனியார் மயப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த நிதி முறைமையிலும் பாரியளவில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியினால் ஆற்றப்பட வேண்டிய கருமங்கள் வெளித் தரப்புக்களுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறு தனியார்துறையினருக்கு வழங்குவதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியளவில் அழிவுகள் ஏற்படக் கூடுமென தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியினை தனியார் மயப்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் தடுத்து நிறுத்த வேண்டுமென கோரியுள்ள அவர் இவ்வாறு தனியார் மயப்படுத்துவதனால் பாரியளவு மோசடிகள் இடம்பெறக்கூடும் எனவும் மத்திய வங்கியின் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாகவே கொடுக்கல் வாங்கல்கள் மத்திய வங்கியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.