165
யுத்தம் முடிவுற்று ஏழரை வருடங்கள் கடந்துவிட்டன. முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நம்பத் தகுந்த வகையில் எப்படி நடத்துவது என்று நல்லாட்சி அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. அதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பில் இப்போது கவனம் செலத்தப்பட்டு வருகின்றது,
சர்வதேச பங்களிப்புடன் இந்தப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று ஐநாவும் சர்வதேசமும், கோரியிருக்கின்றன. அந்தக் கோரிக்கை இன்னும் வலுவிழந்து போகவில்லை. ஆயினும் சர்வதேச பங்களிப்போ, சர்வதேச நீதிபதிகளோ அல்லது வழக்குத் தொடுனர்களையோ நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. ஐநா முன்வைத்த கலப்பு விசாரணை பொறிமுறையையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை உள்ளக விசாரணைகளே நடத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியாகக் கூறியிருக்கின்றது.
எனினும், ஐநா மனித உரிமை மன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கையில் இன்னும் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்படவில்லை. முன்னேற்றம் காணவில்லை என்று தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
ஆயினும் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்று அரசாங்கம் கூறி வருகின்றது. ஐநா மன்றத்தில் இருந்து மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்போது, நல்லாட்சி அரசாங்கம் ஓடியோடி உபசரிக்கின்றது.
அவர்களை எல்லா இடங்களுக்கும் – விசேடமாக இறுதியாக யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியின் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று நிலைமைகளை நீங்களே பாருங்கள். சம்பந்தப்பட்டவர்களுடன் கேட்டுப் பாருங்கள் என்ற ரீதியில் மிகவம் பவ்வியமாக நடந்து கொள்கின்றது.
.இந்த நிலைமையில்தான், யாழ்ப்பாணத்தில் தலைவிரித்தாடத் தொடங்கிய ஆவா குழுவினரை அடக்குவதற்காக இரவு நேர கண்காணிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் தாக்குதலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டார்கள். ஆவா குழுவைச் சேர்ந்தவர்களை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்யத் தொடங்கினார்கள்.
இதனையடுத்து, ஆவா குழு பற்றிய பிரச்சினைகள் தேசிய மட்ட விவகாரமாக விசுவரூபமெடுத்தது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படாமல், கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டமையானது, இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும் விரோதமானது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஊர்காவற்றுறை பகுதிக்குத் தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிபதி இளஞ்செழியன் இதனைக் கூறியிருக்கின்றார்.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும் மற்றும் இடங்களிலும் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களை கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதனால், இங்கு நீதிமன்றங்கள் இல்லையா என்ற எண்ணம் மக்கள் மனங்களில் எழுந்திருக்கின்றது. இது குறித்து அவர்கள் மத்தியில் கேள்விகளும் எழுந்திருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் தொடர்பான வழக்குகள் அந்த நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்ற நிலையில் தற்போது கைது செய்யப்படுபவர்கள் வெளிமாவட்ட நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்படுவது இலங்கை அரசியலமைப்புச் சட்டம் மட்டுமல்லாமல், சர்வதேச மனித உரிமைச் சட்டத்தையும், சர்வதேச அரசியல் சிவில் சட்டத்தையும் மீறிய செயற்பாடாகும் என அவர் தெரிவி;த்திருக்கின்றார்.
இலங்கையின் அரசியல் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அனைவரும் கடைப்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் மிகவும் முக்கியமானவை. நீதித்துறை சார்ந்தவர்கள் அனைவரும் இந்த விடயத்தில் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்திலும்கூட, வடமாகாணத்தில் வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் நீதிமன்றங்கள் இயங்கின. மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து நீதி கோரி, அந்த நீதிமன்றங்களை நாடியிருந்தார்கள்.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் நான்கு வருடங்கள் நீடித்திருந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்தவர்களும் கூட, இந்த நீதிமன்றங்களுக்குச் சென்றால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து செயற்பட்டிருந்தார்கள். சில வழக்குகளில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும்கூட நம்பிக்கை வைத்து இந்த நீதிமன்றங்களுக்குச் சென்றிருந்த தகவலும் உண்டு.
நெருக்கடிகள் மிகுந்த நேரங்களிலும் இந்த நீதிமன்றங்கள் தம்முடைய பொறுப்புக்களை உணர்ந்து உரிய முறையில் செயற்பட்டிருந்தன. அதேபோன்று யுத்தம் முடிவுக்கு வந்து இடம் பெயர்ந்தவர்கள் மீள்குடியேறத் தொடங்கியதும், கிளிநொச்சி, முல்லைத்திவு மாவட்டங்களின் நீதிமன்றங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியிருந்தன.
அந்த நீதிமன்றங்கள் உள்ளடங்கலாக வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்கள் யுத்தத்தின் பின்னரான கடந்த பல வருடங்களாக நல்ல முறையில் செயற்பட்டு வருகின்றன. பழைய நீதிமன்றங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல் நீதிமன்றங்களும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் சீராகச் செயற்பட்டு வருகின்றன.
இத்தகைய ஒரு சூழலில்தான் இந்த நீதிமன்றங்களைப் புறந்தள்ளிய வகையில் ஆவா குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் தாங்கள் கைது செய்த சந்தேக நபர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருக்கின் றனர்.
முறையற்ற வகையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்து அதனைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறையிட்டிருக்கின்றனர்.
இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இந்தக் கைதுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயே இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலைமையை அறியும் வரையில் அவர்களைப் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆவா குழுவினர் என்ற அடையாளத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அத்தகைய நடவடிக்கைகள் இலங்கையில் இடம்பெறவில்லை என்று ஐநாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
இலங்கையில் யுத்த மோதல்கள் இல்லாத நிலையிலும் சித்திரவதைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வெள்ளைவான் கடத்தல் தொடர்ந்து இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டி, அந்தச் செயற்பாடுகள் தொடர்பல் ஐநாவின் சித்திரவதைகளுககு எதிரான குழுவினர் இலங்கை அதிகாரிகளை, கேள்விகளினால் துளைத்தெடுத்திருந்தனர்.அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரியவகையில் பதிலளிக்க முடியாமல் இலங்கை அதிகாரிகள் தடுமாறி திகைப்படைந்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆயினும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் இந்த ஐநாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு அமர்வுகளில் கலந்து கொண்டிருந்த இலங்கைக் குழுவினர், இலங்கையில் எவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுமில்லை. தடுத்து வைக்கப்படவுமில்லை என மறுத்துரைத்திருக்கின்றனர் . அதேவேளை, அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இது, உள்நாட்டில் உள்ள நிலைமைகளுக்கு முரணானதாகும். இதன் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற விடயத்தில் இந்த நல்லாட்சி அரசாங்கம் உள்நாட்டில் ஒரு முகத்தையும், ஐநா மன்றத்திலும் சர்வ தேச மட்டத்திலும் முரண்பாடான வேறு ஒரு முகத்தையும் காட்டுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
வடமாகாணத்தில் கைது செய்யப்படுபவர்களை அந்த மாகாணத்திற்கு வெளியே 400 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவதற்குரிய விதிவிலக்கான நிலைமைகள் இப்போது கிடையாது.
வடமாகாண நீதிமன்றங்கள் பரபரப்பாகவும் துடிப்போடும் செயற்படுகின்ற நிலையில் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் தங்களால் கைது செய்யப்பட்டவர்களை இவ்வாறு தொலை தூரத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு என்ன காரணத்திற்காக, எந்த சட்டவிதிகளின் கீழ் கொண்டு செல்கின்றார்கள் என்பது தெரியவில்லை.
இந்த நடவடிக்கையானது பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதையே காண முடிகின்றது. முன்னர் – யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் இவ்வாறு தான் செய்தோம். அதேபோன்றுதான் இப்போதும் செய்கின்றோம் என்று அவர்கள் நொண்டிச்சாட்டு கூற முடியாது. ஏனெனில் அன்றைய நிலை வேறு இன்றைய நிலைமை வேறு. அன்று இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான போர்ச்சூழல் காணப்பட்டது.
ஆனால் இன்று நாட்டில் யுத்த மோதல்கள் இல்லாத காரணத்தினால், அதே நடவடிக்கை மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் அப்பட்டமாக மீறுகின்ற செயற்படாக மாறியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
இன்றைய சூழ்நிலையில் கைது செய்யப்படுகின்ற ஒருவரை சாதாரண சட்டத்தின் கீழேயா – அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயா – எந்தச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற பொறுப்பு நீதிமன்றங்களிடமே காணப்படுகின்றது.
ஏனெனில் சட்டத்திற்குப் பொருள் கோடல் செய்யும் வல்லமை நீதிமன்றங்களுக்கே உள்ளது. அந்த வல்லமையை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரோ அல்லது பொலிசாரோ தமது கைகளில் எடுக்க முடியாது. எடுக்கவும் கூடாது.
முன்னைய அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்படுகின்ற இன்றைய சூழலில், உள்நாட்டின் நீதிக் கட்டமைப்புகளுக்குள்ளேயே அந்த விசாரணைகளை நடத்த முடியும் என்று அரசாங்கம் பிடிவாதமாகக் கூறி வருகின்றது.
இந்த நிலையில் நீதித்துறைச் செயற்பாடுகளில் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைவாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும். அவற்றை மீறிச் செயற்படுவது, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
மறுபுறத்தில் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தை நாடி, தமக்குரிய நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டவிதிகள் ஆக்கப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும், சட்டவிதிகளின் துணையோடு தமது உரிமைகளை நிலை நாட்டிக்கொள்கின்ற செயற்பாடுகள் மக்கள் மத்தியில் காணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.
சட்டங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புக்கள் வசதிகள் என்பவற்றை சாதாரண மக்கள் மட்டுமல்ல படித்தவர்களும்கூட அறிந்திருப்பதில்லை. சட்ட வல்லுநனர்களே இதுபற்றிய அறிவையும் தெளிவையும் பெற்றிருக்கின்றார்கள்.
எனவே யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமை மீறல்கள், அடிப்படை உரிமை மீறல்கள், தவறான வழிகளில் சட்டங்களைக் கையாள்கின்ற போக்கு என்பவற்றைக் கண்டறியும் திறன்களும் சட்ட வல்லுனர்களிடமே காணப்படுகின்றது.
ஆகவே சட்ட நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களை வழிநடத்த வேண்டியதும், மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டியதும் சட்ட வல்லுநர்களினதும், சட்டத்துறை சார்ந்தவர்களினதும் பொறுப்பாகும். அரசியல் தலைவர்களாக உள்ள மக்கள் பிரதிதிகளுக்கும் இந்தப் பொறுப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.
இவர்களுடைய வழிகாட்டலின் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றங்களிடம் நீதி கேட்டுச் செல்லும் போதுதான் சட்டங்களுக்குரிய சரியான பொருள் கோடலை நீதிமன்றங்கள் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
வழக்குகள் தாக்கல் செய்யப்படாமலும், வழக்கு விசாரணைகள் இல்லாமலும் நீதிமன்றங்கள் வெறுமனே சட்டங்களுக்குப் பொருள் கோடல் செய்ய முடியாது.ஆவா குழு தொடர்பில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை ஓய்வு பெற்ற நீதியரசரை மாகாண முதலமைச்சராகக் கொண்டுள்ள வடமாகாண சபையோ அல்லது அந்த சபையின் உறுப்பினர்களோ கண்டுகொள்ளாதிருப்பது வியப்பாக உள்ளது.
வடமாகாண சபையில் சட்டத்தரணிகளும் இருக்கின்றார்கள். சட்ட அறிவுடையவர்களும் இல்லாமலில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நீதித்துறையில் பழுத்த அனுபவங்களைக் கொண்ட முன்னாள் நீதியரசர் ஒருவரே வடமாகாண முதலமைச்சராகப் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் சாதாரண சட்டங்களின் கீழ் தீர்வு காணப்பட வேண்டிய குற்றச் செயல்களுக்கும் சமூக விரோதச் செயற்பாடுகளுக்கும் எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்ற போக்கிற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பது துரதிஸ்டம் என்றே கூற வேண்டும்.
வடமாகாண சபை மட்டுமல்ல. சட்டத்துறை அறிவும் அனுபவத்தையும் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நீண்ட கால நாடாளுமன்ற அனுபவங்களைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலைமைகள் குறித்து சாதாரண சட்டங்கள் பற்றிய அடிப்படை அறிவையும் தெளிவையும் கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டங்களை உருவாக்குகின்ற சட்டவாக்க சபையாகிய நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
அது தொடர்பில் அங்கு விவாதங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய விவாதங்களின் ஊடாகவே, சரியான முறையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா இல்லையா என்பதும், சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வடமாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சீராக நிலைநாட்டுவதில் மேற்கொள்ளப்பட்டுள்ள அணுகுமுறைகளையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துகின்ற போக்கையும் மக்கள் பிரதிநிதிகள் கண்டும் காணாத போக்குமே காணப்படுகின்றது.
இத்தகைய போக்கு ஆரோக்கியமானதல்ல.
பயங்கரவாதத் தடைச்சட்டமானது வாள்வெட்டுச் சம்பவங்களின் மூலம் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியிருப்பவர்களுக்கு எதிராகத்தானே மேற்கொள்ளப்படுகின்றது என்று இன்றைய நிலைமையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்புடையதாகக் கருதக்கூடாது.
சட்டத்தையும் ஒழுங்கையும் சீராகப் பேணுவதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டமானால் என்ன சாதாரண குற்றவியல் நடவடிக்கையானால் என்ன ஏதாவது ஒரு சட்டத்தைக் கொண்டு காரியத்தை முடித்தால் போதும் என்ற மனப்பாங்கு எதிர்கால நிலைமைகளுக்கு நல்லதல்ல.
வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமாகிய ராஜித சேனராத்னவிடம், ஆவா குழு தொடர்பான சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்துகுறித்து விமர்சனம் முன்வைக்கப்பட்டிருக்கின்றதே என செய்தியாளர்கள் வினவினார்கள்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன எந்தச் சட்டமானால் என்ன மக்களுடைய அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ள ஆவா குழுவினரைக் கைது செய்து அவர்களுக்கு எற்பட்டுள்ள பாதிப்பை இல்லாமற் செய்வதற்கு எந்தச் சட்டத்தையாவது பயன்டுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம். மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்பை இல்லாமற் செய்வதுதானே முக்கியம் என தெரிவித்துள்ளார்.
சமூக விரோதச் செயற்பாடுகளையும், சாதாரண குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கென நாட்டில் சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த சட்டங்களைப் பயன்படுத்தாமல் அரசியல் சட்டத்திற்கு முரணான வகையில் விசேட தேவையின் நிமித்தம் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதென்பதை, புத்திசாலித்தனமான நடவடிக்கையாகக் கொள்ள முடியாது.
மிக மோசமான விதிகளைக் கொண்டுள்ள காரணத்தினாலேயே, அந்தச் சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய நிலையில், சாதாரண குற்றவியல் சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய குற்றச் செயல்களை இல்லாதொழிப்பதற்காக, இல்லாமற் செய்ய வேண்டிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துகின்ற போக்கை உற்சாகப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் நன்மையளிக்கத்தக்க நடவடிக்கையாக மாட்டாது.
தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசம்தானே அங்கு உருவாகியுள்ள சமூக விரோதக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள வாள் வெட்டுக் குழுவாகிய ஆவா குழுவை இல்லாதொழிப்பதற்கு எந்தச் சட்டத்தைப் பயன்படுத்தினாலும் பரவாயில்லை என்ற மெத்தனமான போக்கை தென்பகுதியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைக்கொள்ளக் கூடாது.
வடபகுதியில் உருவாகியுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சாதாரண சட்டத்தைப் போன்று பயன்படுத்துகின்ற போக்கு பின்னாளில் மோசமான விளைவுகளுக்கு நாட்டில் உள்ள அனைவருமே முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு இட்டுச் செல்லக் கூடும்.
ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து தறகாலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் பின்னர் படிப்படியாக முழு தமிழ் சமூகத்தையும் மோசமாகப் பாதிக்கின்ற நிலைமைக்கு இட்டுச் சென்றதை இலகுவில் மறந்துவிட முடியாது.
தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட இதே சட்டம் சிங்கள மக்களையும் விட்டு வைக்கவில்லை என்பதை சிங்கள அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நினைவில் கொள்வது நல்லது.
அது மட்டுமல்லாமல் சிறுபான்மை இன மக்களின் அமோகமான ஆதரவின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நல்லாட்சி அரசாங்கம் முன்னைய ஆட்சிக் காலத்தில் நிலவிய மனித உரிமை மீறல்கள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்களை விசாரணை செய்து பொறுப்பு கூற வேண்டிய கட்டாய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது.
அத்தகைய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறுகின்ற அதே வேளை, தன்னுடைய ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும்.
அந்தப் பொறுப்பைக் கைநழுவ விட்டால், நல்லாட்சி அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கும், அடிப்படை உரிமை மீறல்களுக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்குப் பின்னால் ஆட்சியமைக்கின்ற புதிய அரசாங்கம் பொறுப்பு கூறுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிடலாம்.
அது மட்டுமல்லாமல், எதேச்சதிகாரப் போக்கிற்கு முடிவுகட்டி நாட்டில் நல்லாட்சி நடத்தப் போவதாகக் கூறி பதவிக்கு வந்த ஆட்சியளார்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானே என்ற வகையில் நடந்து கொண்டார்களே என்ற பழிச் சொல்லுக்கு உள்ளாகுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, நல்லாட்சியின் கீழ் சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உருவாக்குவதாகக் கங்கணம்கட்டிச் செயற்படுகின்ற நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கைவிட்டு, மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் முறையாகப் பேணி, உரிய சட்ட ஒழுங்குகளைப் பயன்படுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் சீராக நிலைநாட்டுவதற்கு முன்வர வேண்டும்.
Spread the love