இன்றையதினம் மட்டக்களப்புக்கு சென்ற பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மாவட்டத்தின் எல்லையில் வைத்து காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலுள்ள பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக அம்மாவட்டத்திற்கு தங்கள் செல்லவுள்ளதாக பொது பல சேனாவினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் மட்டக்களப்பு உள்ளிட்ட சில இடங்களில் ஆர்பாட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத கூட்டங்களுக்கு தடை விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி அவர்கள் செல்லமுற்பட்டுள்ளனர்.
மங்களராமய விகாரையில் இன்று நடைபெறவிருந்த சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் மட்டக்களப்புக்கு வந்ததாக தெரிவித்து மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்கு அம்பிட்டிய சுமனரத்ன வந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள வேளை வீதிகளில் நின்ற பொதுமக்கள் பிக்குவிற்கு எதிராக கூக்குரல் ஏழுப்பியமையால் அந்த இடத்தில்; பதட்டம் ஏற்பட்டதாகவும் பதட்டத்தை தடுப்பதற்கு காவல்துறை மற்றும் அதிரடிப்படையினரின் உதவிகள் நாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.