தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது அவரது உயிரைக்காக்க போராடுகிறோம் என அப்பல்லோ மருத்துவமனையின் செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டு அதனை உடனடியாக நீக்கியுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பினைத் தொடர்ந்து அவருக்கு எக்மோ சிஸ்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
மேலும் முதல்வரின் உடல்நிலையைச் சிறப்பு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் எனவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை நேற்று இரவு ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம் என்பதனை அப்பல்லோ வைத்தியசாலையினதும் அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் சங்கிதா ரெட்டியின் ட்விட்டும் உறுதிப்படுத்தின.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இதய அடைப்பை சரி செய்யும் முயற்சி 18 மணி நேரத்தையும் கடந்து தொடர்ந்துவரும் நிலையில், சங்கீதா ரெட்டி இன்று அதிகாலை 2.38 மணிக்கு மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவை முடிந்த வரை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இன்று மதியம் ஒருமணியளவில் வெளியான வைத்தியசாலையின் 13வது அறிக்கையில் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து, மோசமாக உள்ளது எனவும் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது எனவும், அவர் தொடர்ந்து மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் எக்மோ என்று சொல்லக் கூடிய செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
எனனும் சங்கீதா ரெட்டி தனது ட்விட்டர் பதிவை உடனடியாக நீக்கியுள்ள நிலையில்; அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்து சங்கீதா ரெட்டியின் ட்விட்டர் பதிவை நீக்காமல் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.